அருமையான இரண்டு கருத்துக்கள்

 ஆதவன் 🖋️ 628 ⛪ அக்டோபர் 17,  2022 திங்கள்கிழமை

"இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." ( 1 கொரிந்தியர் 5 : 10 )

கொரிந்து சபையில் விபச்சார பாவத்தில் ஈடுபட்ட ஒருவன் உறுப்பினராக இருந்ததை அப்போஸ்தலரான பவுல் கடிந்து கொண்டு அவனைக்குறித்துப் பல விஷயங்களைக் கூறிவிட்டுத் தொடர்ந்து  எழுதும்போது இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார். 

இந்த உலகத்தில் விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். ஆவிக்குரிய அனுபவத்தோடு வாழ்பவர்கள் குறைவானவர்களே. எனவே நாம் மற்ற எல்லோரையுமே பாவிகள் என்று கருதி ஒதுக்கினால் இந்த உலகத்திலே நாம் வாழமுடியாது; நாம் உலகத்தைவிட்டு ஒதுங்கிப்போகவேண்டியிருக்கும்.  அப்படி ஒதுக்கினால் நாம் யாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும் முடியாது. எனவே அவர்களை ஒதுக்கவேண்டாம்.

இயேசு கிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரரோடும்தான் அதிகநேரம் இருந்தார். "அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்." ( மாற்கு 2 : 16  மற்றும் மத்தேயு 9:11, லூக்கா 5:30) "நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை" என்றார் இயேசு கிறிஸ்து.

அதாவது பவுல் அப்போஸ்தலர் கூற விரும்பும் கருத்து என்னவென்றால், நம் கருத்தை ஏற்காதவர்கள், பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்களோடுதான் இந்த உலகத்தில் நாம்வாழவேண்டும். எனவே, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒத்துக்கிடவேண்டாம். அப்படி ஒதுக்கினால் நாம் இந்த உலகத்தில் வாழமுடியாது.

ஆனால் தொடர்ந்து பவுல் அடிகள் எழுதுகின்றார், "நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது." ( 1 கொரிந்தியர் 5 : 11 )

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறவருவது இரண்டு கருத்துக்கள்.

1. இந்த உலகத்தில்  விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். அவர்களை ஒதுக்க வேண்டாம்.  அவர்கள் ஒருவேளை நம்மூலம் கிறிஸ்துவை அறிந்து மீட்பு பெறலாம்.

2.  சகோதரன் என்று கூறப்படும் ஒருவன் - அதாவது நான் இரட்சிக்கப்பட்டேன் மீட்பு பெற்றுள்ளேன் எனக் கூறும் ஒருவன் நமது சபையில் இருந்துகொண்டு அவன்  விபச்சாரம், பொருளாசை, கொள்ளை, விக்கிரகாராதனை செய்பவனாக இருந்தால் அவனோடு சேர்ந்திருக்கக்கூடாது , அவனோடு சாப்பிடக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், கிறிஸ்துவை அறிந்தஒருவன் இத்தகைய பாவங்கள் செய்பனாக இருந்தால் அவனை முற்றிலும் நம்மைவிட்டு ஒதுக்கவேண்டும்.  

இப்படிப் பவுல் அடிகள் அவர்களை விலக்கச் சொல்லும் காரணம், புளிப்பு மாவு போன்ற அவர்கள் நம்மோடு இருப்பார்களானால் நம்மையும் அவர்களைப்போல பாவத்தினால் புளிக்க வைத்துவிடுவார்கள். 

"ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்." ( 1 கொரிந்தியர் 5 : 7 )

பவுல் அடிகள் கூறும் கருத்துக்களை நாம் கடைபிடித்தால், துன்மார்க்கருக்கு சுவிசேஷம் அறிவிக்க முடியும்; அத்துடன் அழுக்காகிப்போன நமது சபையைச்  சுத்தமாக்க முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்