அக்டோபர் 13, 2024 ஞாயிற்றுக்கிழமை💚வேதாகமத் தியானம் எண் - 1343
"அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 )
இன்று நாம் ஆலய காரியங்களுக்கென்றும் நாம் வாழும் ஊர் காரியங்களுக்காகவும் பல செயல்கள் செய்யலாம். அதிகமான பணத்தை ஆலயங்களுக்குச் செலவழிக்கலாம்; அல்லது தர்ம காரியங்கள் அதிகம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தையுமே எதற்காகச் செய்கின்றோம், நமது உள்மன எண்ணம் என்ன என்பதை தேவன் அறிவார். உள்ளான அன்புடன் செய்வது எது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று செய்வது எது என்தையும் தேவன் அறிவார்.
பிறர் அறியவேண்டும் எனும் எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் உண்மையான அன்புடன் செய்பவையல்ல. அப்படிச் செய்வதால், நம்மை அறியாமலே ஒரு பெருமை நமக்குள் வந்துவிடுகின்றது. இதனை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 ) என்று. தர்மம் செய்யும்போது மட்டுமல்ல, என்ன நல்ல செயலை நாம் செய்தாலும் இப்படியே இருக்கவேண்டியது முக்கியம்.
இதுபோலவே, சிலர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை அல்லது கிறிஸ்துவை தாங்கள் நம்புவதை வெளிப்படையாக வெளியில் சொல்லத் தயங்குவதுண்டு. வேலை பார்க்கும் இடங்களில் பிற மத நண்பர்கள் அதிகம் பணிசெய்யும்போது அவர்கள் நம்மைத் தவறாகக் கருதுவர் என எண்ணி கிறிஸ்தவ விசுவாசத்துக்கு முரணான காரியங்களைச் செய்து அவர்களோடு பல காரியங்களில் ஒத்துப்போவது சிலரது பழக்கம்.
யூதர்களில் பலர் இயேசுவை கிறிஸ்து என்று நம்பினாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினார்கள்.காரணம், யூதர்கள் தங்களைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 ) என்று குறிப்பிடுகின்றார்.
இன்று சுய மகிமையைத் தேடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நாட்டில் நிறைந்து ஆடம்பரமும் பகட்டும் கொண்டு அலைகின்றனர். இத்தகைய ஊழியர்களும் தேவனால் வரும் மகிமையைவிட மனிதர்களால் வரும் மகிமையைத் தேடுபவர்களே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிடுகின்றார். "உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 6 ) என்று எழுதுகின்றார் அவர்.
அன்பானவர்களே, நமது செயல்கள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமேதவிர சுய மகிமைக்கானவைகளாக இருக்கக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மையே மறைத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடும்போம்.
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்