Sunday, September 29, 2024

செல்வங்களை அனுபவிக்க தேவ கிருபை அவசியம்.

 'ஆதவன்' அக்டோபர் 01, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,331

"தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." ( பிரசங்கி 5 : 19 )

இன்று மனிதர்கள் பலரும் பெரும்பாலும் உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனிடம் ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உலக செல்வங்கள் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்துவிடுவதில்லை. இந்த உண்மையினைப் பலரும் எண்ணிப்பார்ப்பதுமில்லை. அனைத்துச் செல்வங்கள் இருந்தாலும் ஒருவன் அதனைத்  தனது வாழ்வில் அனுபவிக்கவேண்டுமானால் தேவனது கிருபை அவசியம். 

இதனையே இன்றைய தியான வசனம், "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." என்று கூறுகின்றது. உண்பதற்கு வகை வகையான உணவுகளை வாங்க வசதியிருந்தாலும் உடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இருக்குமானால் நாம் விரும்பும் எந்த உணவினையும் உண்ண  முடியாதவர்களாகவே இருப்போம்.  

இதனையே பிரசங்கி நூலில் நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது." ( பிரசங்கி 6 : 2 )

எனவே அன்பானவர்களே, உலக செல்வங்களுக்காக அல்ல, மாறாக தேவனது கிருபைக்காகவும் அவரது இரக்கங்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டியதே முதன்மையான தேவையாக இருக்கின்றது. மிகப்பெரிய தொழிலதிபர்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரை உலக நடிகர் நடிகைகள் உண்மையில் மன மகிழ்ச்சியோடு இருப்பதில்லை அவர்கள் விரும்பி வாங்கிய பொருட்களை  வாழ்வில் அனுபவிப்பதுமில்லை. அவர்களது வெளியுலக பகட்டைப்பார்த்து நம்மில் பலரும் ஏமாந்துகொண்டிருக்கின்றோம். 

உண்மையான மகிழ்ச்சி, சமாதானம் இவை தேவனால் மட்டுமே கிடைக்கும். அவரது கிருபை இருந்தால் மட்டுமே நமது உலக செல்வங்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும். எனவே நாம் தேவ கிருபைக்காக இறைஞ்சுவதே முக்கியமாகும். அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ) என்று. 

எனவே, தேவனையும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற முயற்சியில் ஈடுபடுவோம். அதற்கு முதலில் நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட    அவரிடம் பாவ அறிக்கைச் செய்வோம். நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் தேவனை வாழ்வில் அறிய முடியும்; தேவ கிருபையில் வளர முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     

No comments: