இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, September 30, 2024

உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே நம்மைத் தீட்டுப்படுத்தும்

 'ஆதவன்' 💚அக்டோபர் 02, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,332


"மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்." ( மாற்கு 7 : 15 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது பல்வேறு உலக காரியங்கள் நம்மைத் தீட்டுப்படுத்த தயாராகவே இருக்கின்றன. நாம் காணும் திரைப்பட அறிவிப்புப்  போஸ்டர்கள், இணையத்தளச்  செய்திகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆபாச காரியங்கள் போன்றவை நம்மைப் பாவத்துக்கு நேராக இழுக்கலாம். ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்,  "மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது" என்று. 

அதாவது நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பாரேயானால் நமது கண்கள், காதுகள் வழியாக நமக்குள் செல்லும் இவைபோன்ற உலக காரியங்கள் நம்மைத் தீட்டுப்படுத்த முடியாது. காரணம், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். நாம் இவற்றுக்கு அடிமையாகமாட்டோம்.

ஆனால் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்." என்று. நமது உள்ளம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்குமானால் உள்ளத்திலிருந்து நல்லவைகளே வெளிவரும். அப்படி இல்லாதபட்சத்தில் உள்ளத்திலிருந்து அசுத்தங்களே வெளிவரும். இவைகளே நம்மைத் தீட்டுப்படுத்தும். 

"எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்". ( மாற்கு 7 : 21 - 23 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

எனவேதான் நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. நமது உள்ளத்தில் ஆவியானவர் இருந்து நம்மை வழிநடத்த நம்மை அவருக்கு ஒப்புவிக்கும்போது உலக அசுத்தங்கள் நம்மை மேற்கொள்ளாது. மட்டுமல்ல, நமக்குள்ளிருந்து வெளிவரும் வார்த்தைகள், நமது சிந்தனைகள் இவையும் தூய்மையாகும். 

இந்த உலகத்துக்குத் தப்பி நம்மைப் பாவமில்லாமல் காத்துக்கொள்ள ஆவியானவரின் துணை நமக்கு அவசியமாகையால் நாம் ஆவியானவரின் அபிஷேகத்துக்கும் அவரது வழிநடத்துதலுக்கும் வேண்டுவோம். அப்போது வெளியுலக அசுத்தங்கள் நம்மைத் தாக்காமலும் நமது உள்ளத்திலிருந்து நலவைகளே வெளிவரவும் அது உதவியாக இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

No comments: