ஆதவன் 🌞 812🌻 ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
ஆதிகால மனிதன் உலகினில் தான் கண்டு பயப்பட்ட அனைத்தையும் வணங்கத் தொடங்கினான். சூரியன், நெருப்பு, காற்று, பாம்பு, சிங்கம் எனப் பலவற்றையும் வணங்கியதற்கு மனிதனது பயமே காரணம். இவை அனைத்தும் படைக்கப்பட்டவையே என்றும் இத்தகைய பயப்படத்தக்கவற்றைப் படைத்தவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராக இருப்பார் எனவும் மனிதன் எண்ணியிருந்தால் இவைகளை வணங்கியிருக்கமாட்டான்.
இப்படி,படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். இப்படி படைக்கபட்டப் பொருட்களை வணங்கக் காரணம் ஒன்று பயம் இன்னொன்று இச்சை. அதாவது, படைக்கபட்டப் பொருட்கள் கண்களுக்குத் தெரிவதால் அவற்றின்மேலுள்ள ஆசை.
அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலை. ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். காரணம் இச்சை. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது.
தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம், இத்தகைய ஆசை கொள்வதும் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டதைஆராதிப்பதுதான். மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர்தங்களைப்போல "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) என்கின்றார் பவுல் அடிகள்.
படைத்தவரை வணங்கி ஆராதிப்பதும் அவற்றைப் படைத்த வல்லமையான தேவனுடன் இணைவதும்தான் தேவனுடைய சித்தம். ஆனால் இந்தத் தேவ சித்தத்தை பொய் என மாற்றி தேவனை ஆராதிக்காமல் தேவனால் படைக்கப்பட்ட பொருட்களை ஆராதிக்கின்றார்கள்.
அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே இழிவான இச்சை நோய்களும் சாபங்களும்மனிதனைத் தொடர்கின்றன. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல்ஆசைகொள்வதே. எனவே, எந்த சூழ்நிலையிலும் படைக்கப்பட்டப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்காமல் படைத்த தேவனே போதுமென வாழ்வோம். நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்.