ஆதவன் 🌞 807🌻 ஏப்ரல் 14, 2023 வெள்ளிக்கிழமை
"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." ( எபேசியர் 2 : 1 )
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிமையினைக் கொண்டாடிய நாம் அவரது உயிர்ப்பு மனுக்குலத்துக்குக் கொண்டுவந்த ஆசீர்வாதத்தைக்குறித்து இன்னும் அதிகம் தியானிப்பது நல்லது.
இயேசு கிறிஸ்து தான் மரித்து உயிர்ததுமட்டுமல்ல, அவரை விசுவாசித்து இரட்சிப்பை அடையும் அனைவரையும் பாவத்திலிருந்து உயிர்ப்பிக்கின்றார். பாவத்தால் மரித்து அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டிருந்தோம் நாம். அப்படி மரணமடைந்திருந்த நம்மை அவர் உயிர்ப்பித்தார். ஆம், அவரை விசுவாசித்து நமது பாவங்கள் கழுவப்படும்போது அவரது உயிர்தெழுதலின் சாயலிலும் நாம் இணைக்கப்படுவோம்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்." ( ரோமர் 6 : 5 )எனக் கூறுகின்றார்.
இப்படி, "நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்." ( எபேசியர் 2 : 3 ) அப்படி இருந்த நம்மை கிறிஸ்து விடுவித்தார். "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்". ( எபேசியர் 2 : 5 )
அன்பானவர்களே, இப்படி பாவத்துக்கு மரித்திருந்த நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவமன்னிப்படைந்து மீட்கப்படும்போது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுகின்றோம். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். இப்படி கிறிஸ்துவோடு நாம் உயிர்ந்தெழும்போது பாவத்துக்கு விலகி பரிசுத்தமாக வாழ முடிகின்றது. இப்படி வாழும்போது நம்மேல் இரண்டாம் மரணத்துக்கு அதிகாரமில்லை. அதாவது, நமது ஆத்துமா நித்திய நன்றாக அக்கினிக்குத் தப்பிவிடுகின்றது. மட்டுமல்ல, நாம் தேவனோடு இருந்து அரசாள்வோம்.
"முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 6 )
அன்பானவர்களே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மனிதர்களுக்குத் தரும் மிகப்பெரிய கொடை இதுதான். ஆம், அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த நம்மை உயிர்ப்பித்தது மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தமாக்கி தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராகவும் மாற்றுகின்றார்.
கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது மீட்பில் நமக்கு இடம்தர வேண்டுவோம். எந்த உலக ஆசீர்வாதங்களையும்விட இதுவே மேலான ஆசீர்வாதம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment