ஆதவன் 🌞 806🌻 ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை
"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )
கிறிஸ்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும்போது ஏற்படும் மகிமையான அனுபவத்தை அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் விளக்குகின்றார். அதாவது, ஆதியில் உலகத்தை உண்டாக்கியபோது இருளிலிருந்து ஒளியைப் பிரித்து உலகை ஒளியாக்கிய தேவன் இன்று தனது குமாரனான இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையான ஒளியை நமது இருதயங்களில் பிரகாசிக்கச் செய்கின்றார். அப்படி அவர் நமது உள்ளங்களை ஒளியாக்குவதால் நம்மிலிருந்து பாவ இருள் அகலுகின்றது.
ஆதியில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று." ( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம். ஆம், வெறுமையாகவும் இருளாகவும், ஒழுங்கின்மையுமாக இருந்த பூமியை தேவன் சரியாக்கியதுபோல நமது இருதயத்தில் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளி நம்மையும் சரியாக்கும்.
இந்த ஒளி நமது சுய வல்லமையால் நம்மில் ஒளிரவில்லை. மாறாக தேவனால் உண்டாயிருக்கின்றது. இந்த ஒளியை நாம் நமது உடலாகிய மண்பாண்டத்தில் பெற்றிருக்கின்றோம் என்று பவுல் அடிகள் அடுத்த வசனத்தில் எழுதுகின்றார். "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்."( 2 கொரிந்தியர் 4 : 7 )
அன்பானவர்களே, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் இதுதான். அதாவது, நமது இருதயத்தினுள் அவர் வருவதால் நாம் ஒளியுள்ளவர்கள் ஆகின்றோம். மட்டுமல்ல, இந்த ஒளி நமக்குத் திட நம்பிக்கையினையும் எதனையும் தாங்கும் மன வலிமையையும் கொடுக்கின்றது. எனவேதான் பவுல் அடிகள் தொடர்ந்து பின்வருமாறு எழுதுகின்றார்:-
"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப் படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 9 )
ஆம், கிறிஸ்து நமது உள்ளத்தில் வரும்போது நமக்கு கிடைக்கும் ஆவிக்குரிய மேலான ஆசீர்வாதம் இதுதான். துன்பத்தையும் பிரச்சனைகளையும் மேற்கொண்டு வெற்றிச்சிறந்தவர்களாக நாம் வாழ இந்த ஒளி உதவுகின்றது.
எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) உலகத்தில் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே தனது முகத்திலுள்ள மகிமையின் அறிவாகிய ஒளியை நமது இருதயங்களிலே பிரகாசிக்கச் செய்வார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment