ஆதவன் 🌞 803🌻 ஏப்ரல் 10, 2023 திங்கள்கிழமை
"இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்." ( யோவான் 21 : 15 )
இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்னர் அவரது சீடர்கள் ஒரு கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். அவர் உயிர்தெழுந்தபின்னர் சீடர்களுக்கு உடனேயே வல்லமையும் பலமும் கிடைக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பலம் அருளப்படும்வரை அவர்கள் ஒரு நிர்ப்பந்தமான நிலையில் இருந்தனர். தலைவர் இறந்துவிட்டார். இனி வேறு வழியில்லை; நாம் நமது பிழைப்பைப் பார்க்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்துத் தங்களது பழைய மீன்பிடி தொழிலுக்குத் திரும்பினர்.
"சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள்" ( யோவான் 21 : 3) என்று வாசிக்கின்றோம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் அழைத்தவர்களைக் கைவிடுவதில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். சீடர்களைத் தேடி வந்தார். அதிசயமாய் அவர்களுக்குப் பெரிய மீன்பாடு கிடைக்கும்படிச் செய்தார். ஆம், தான் மரித்தபின்னரும் உயிருடன் இருக்கும்போதிருந்த அதே வல்லமை உடையவராய் இருப்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
அன்பானவர்களே, ஒருவேளை இன்று நாமும் இந்தச் சீடர்களைப்போல நம்பிக்கையற்ற நிலையில் இருக்கலாம். நம்மை ஆதரித்தவர்கள், நாம் வெகுவாக நம்பியிருந்தவர்கள் நம்மைவிட்டு விலகியிருக்கலாம். சீடர்களைப்போல எதிர்கால நம்பிக்கையில்லா நிலைமை, துன்பங்கள், தனிமை நம்மை வாட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.
இப்படியொரு நிலையில்தான் அவர் முக்கியமான ஒரு கேள்வியைப் பேதுருவைப்பார்த்துக் கேட்கின்றார். "யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" உலக மனிதர்கள், பொருட்கள் இவைகளைவிட அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?என்று பொருள்படும் கேள்வி இது. பேதுரு அதற்கு, "ஆம் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன் என்பதை நீர் அறிவீர்" என்று பதில் கூறுகின்றார். இதன்பின் அவர் பேதுருவுக்கு தனது திருச்சபையின் மேய்ப்பர் பொறுப்பைக் கொடுக்கின்றார்.
ஆம், நமது ஆண்டவர் அன்பை விரும்புபவர். அனைத்தையும்விட தன்னை மனிதர்கள் அன்பு செய்வதையே அவர் விருப்புகின்றார். உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பேதுருவைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியை நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கின்றார். "நீ இவர்களைவிட / இவைகளைவிட என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? "
அன்பானவர்களே, இயேசுவுக்கு அன்பாய் இருப்பது எப்படி? "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான் 5 : 3 ) என எழுதுகின்றார் இயேசுவின் அன்புச் சீடனான யோவான். மேலும் "அவரது வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான் 2 : 5 )
சுருங்கக் கூறவேண்டுமானால், அவரது வார்த்தைகளை நாம் வெறுமனே வார்தைகளாகப் பார்க்காமல் அவற்றை வாழ்வாக்கவேண்டும். இதுவே கிறிஸ்துவை அன்பு செய்தல். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் அழுத்தமாக எழுதுகின்றார், "ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்." ( 1 கொரிந்தியர் 16 : 22 ) அதாவது, உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடுவராக வருவதற்குமுன் வசனம் கூறுவதன்படி அவரிடத்திலுள்ள அன்பில் பெருகுவோம் என்கிறார் அவர்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment