அருவருப்பானவன் யார்?

ஆதவன் 🌞 805🌻 ஏப்ரல் 12, 2023 புதன்கிழமை
































"மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது."( நீதிமொழிகள் 3 : 32 )

மாறுபாடுள்ளவன் என்பதற்கு,  சொல்லுக்கும் செயலுக்கும் முரணாகச் செயல்படுபவன் என்றும், கபடன், இரட்டை நாவுக்காரன், வெளிவேஷக்காரன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் எனப் பல பொருள்கொள்ளலாம். இத்தகைய மனிதன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. 

மாறுபாடுள்ள குணமுள்ள மனிதன் பிறரிடம் பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக உண்மையை மாற்றிப்பேசுவான். தனது உண்மை குணத்தை மாற்றி நல்லவன்போலச் செயல்படுவான்.  இப்படி இருக்கலாகாது என்று இயேசு கிறிஸ்துவும் கற்பித்தார்.  "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்றார் அவர். 

உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் கூறாமல் மாற்றி கூறுபவன் மாறுபட்டுள்ளவன். எல்லா இடத்திலும் மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுபவன் நீதிமானாயிருப்பான். கர்த்தருடைய ரகசியம் அவனிடம் இருக்கிறது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருடைய ரகசியம் என்பது என்ன? "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) என அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல, மாறுபாடு இல்லாதவனின் உள்ளே கிறிஸ்து  இருப்பதுதான் அந்த ரகசியம். 

இன்று பலரும் இந்த உண்மையினை மறந்து தேவனைத்தேடி எங்கெங்கோ ஓடுகின்றோம். அன்பானவர்களே, இன்றைய வசனம் மிக எளிமையான வழியையே நமக்குக் கற்பிக்கின்றது. நமது உள்ளத்தின் நினைவுகளுக்கேற்ப நமது செயல்களை மாற்றிக்கொண்டால்  அவரை நமது உள்ளத்தில்  வரவைத்திடலாம். 

நமது அன்றாட வாழ்வை எண்ணிப் பார்ப்போம். நமது அலுவலகத்தில், நாம் பணி செய்யும் இடங்களில் நாம் எப்படி செயல்படுகின்றோம். சிலர் தாங்கள் நல்லவர்கள் என்பதனை நிரூபிக்கவேண்டி தங்களோடு பணிசெய்யும் இதரப் பணியாளர்களிடம் எப்போதும்  குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள். இதுபற்றி கேட்டால், "நான் தவறு  என மனதில் பட்டதை நேரடியாகச் சொல்கின்றேன்; என்னிடம் கபடமில்லை " என்பார்கள்.  இது சாத்தானின் தவறான போதனை. "பிறரது கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முயலுமுன் நமது கண்ணிலுள்ள தூணை அகற்ற முயலவேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து. 

எனவே, நம்மிடமுள்ள மாறுபாடான குணங்களை மாற்றிட முயலுவோம். மாறுபாடுள்ள செயலோ பேச்சோ நம்மிடம் இல்லாதபடி காத்துக்கொள்வோம்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அத்தகைய உள்ளத்தில்தான் தங்க இருக்க ஆசைப்படுகின்றார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்