ஆதவன் 🌞 804🌻 ஏப்ரல் 11, 2023 செவ்வாய்க்கிழமை
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" (மத்தேயு - 28: 20)
உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்குச் செல்லுமுன் தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கட்டளை தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது பல்வேறு போதனைகளைக் கொடுத்தார். ஏற்கெனவே மோசே மூலம் கடவுள் கொடுத்த கட்டளைகளை மேலும் மெருகேறினதாகவும் அர்த்தமுள்ளவையாகவுமாக மாற்றினார். இந்தப் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகளை நாம் கைக்கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டின் கட்டளைகளின்படி நாம் நீதிமானாக இருப்பதுபோலத் தெரியலாம். ஆனால் இயேசுவின் உள்ளத்தை ஊடுருவும் பார்வையின்முன் நாம் பாவம் செய்தவர்களாக இருக்கலாம்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மோசே மூலம் வழங்கப்பட்டக் கட்டளைகளைவிட மேலானவை. உதாரணமாக, ஒருவர் மோசேயின் கட்டளையின்படி விபச்சாரம் செய்யாதவராக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கும் எவரும் ஏற்கெனவே அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று" என்று. ஆம், எனவே பழைய கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் நீதிமானாக முடியாது. "எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை." (ரோமர் - 3:20) என்கின்றார் பவுல் அடிகள். பழைய ஏற்பாட்டு கட்டளைகள் அனைத்தையுமே இயேசு கிறிஸ்து இப்படி மெருகேற்றினார்.
இப்படி "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. இன்றைய வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" அதாவது இப்படித் தனது போதனையைக் கடைபிடிக்க பெலன் தரும்படி அவர் உலகம் முடியும்வரை வரப்போகின்ற மனித சந்ததிகளோடு இருப்பேன் என்கின்றார்.
இயேசுவின் கட்டளைகளை அப்போஸ்தலனாகிய பவுல் ஆவியின் பிரமாணம் என்கின்றார். மோசேயின் கட்டளைகள் பலவீனமானவைகள் கிறிஸ்து அவற்றை பலமுள்ளவையாக்கினார். மட்டுமல்ல, அவைகளை மனிதர்கள் கடைபிடிக்க உதவுவதற்காகவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.(ரோமர் -8:3) என்கின்றார்.
"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." (ரோமர் -8:2)
இயேசு கிறிஸ்துவின் இந்த ஆவிக்குரிய கட்டளைகளை மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள் என்கிறார். உலகம் முடியும்வரை வாழப்போகின்ற மக்களோடு இருந்து அவற்றைக் கடைபிடிக்கும் பலத்தை அவர் தருவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment