கனியுள்ள வாழ்க்கை

ஆதவன் 🌞 809🌻 ஏப்ரல் 16, 2023 ஞாயிற்றுக்கிழமை

 






















"அக்காலத்திலே நல்ல திராட்சை ரசத்தைத் தரும் திராட்சைத் தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்".( ஏசாயா 27 : 2, 3 )

இஸ்ரவேல் வம்சத்தினரை வேதம் திராட்சைத் தோட்டத்துக்கு ஒப்பிட்டு பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றது.  "சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே" (ஏசாயா 5:7) என்றும் வாசிக்கின்றோம். இன்றைய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் இஸ்ரவேல் வம்சத்தினரைக் காப்பாற்றி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சி அதனை ஒருவரும் சேதப்படுத்தாதபடி இரவும் பகலும் காத்துக்கொள்வேன் என்கின்றார். 

இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்ற தேவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனாலும் அவர்கள் தேவனுக்கு எதிராக பாவ காரியங்களில் ஈடுபட்டு தேவனால் தண்டிக்கப்பட்டனர். ஆனால் தேவன் தனது கிருபையால் அவர்களை மீண்டும் மீண்டும் தன்னோடு  சேர்த்துக்கொண்டார்.

இன்றைய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாம்தான் இஸ்ரவேலர். அன்று இஸ்ரவேல் மக்களிடம் எதிர்பார்த்த மனம்திரும்புதலை தேவன் இன்றும் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மிடம் எதிர்பார்ப்பது மட்டுமல்ல, நாம்  மிகுந்த கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்புகின்றார். திராட்சைச் செடியான கிறிஸ்துவோடு இணைந்து வாழும்போதுதான் நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும். 

இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 1, 2 ) ஆம், தேவன் நாம் அதிக கனி கொடுக்கிறவர்களாக இருக்கவேண்டுமென்பதற்காக நம்மைச் சுத்திகரித்துக்கொண்டிருக்கிறார். 

"கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்" என்று கூறும் கர்த்தர் இப்படிச் செய்தபின்னரும் கனி கொடுக்கவில்லையானால் அறுத்துப்போடுவேன் எனஇயேசு கிறிஸ்து மூலம் கூறுகின்றார். 

கனியுள்ள  வாழ்க்கையே நம்மைக் கிறிஸ்தவர்களாக மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும். ஆவியின் கனிகள் குறித்து நாம் பல தியானங்களில் ஏற்கெனவே வாசித்துள்ளோம்.  கூடுமானால், கலாத்தியர் 5:22,23 வாசகங்களை வாசித்து தெளிவடைவோம். மேலும், எபேசியர் நிருபத்தில்  "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே,நாம் செய்யவேண்டியது கிறிஸ்துவோடுள்ள நமது  இணைப்பை இழந்துவிடாமல் இருப்பதே.  அவரோடு இணைந்து வாழ்வோமானால் கனியுள்ளவர்களாக இருப்போம். அப்போது நம்மூலம் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார். நாமும் கிறிஸ்துவுக்குச் சீடர்களாக இருப்போம். 

"நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்."( யோவான் 15 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்