ஆதவன் 🌞 810🌻 ஏப்ரல் 17, 2023 திங்கள்கிழமை
"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30 : 2 )
வேதாகம அடிப்படையில் எகிப்து என்பது அடிமைத்தன வாழ்வைக் குறிக்கின்றது. அது பாவத்துக்கு அடிமையாகிப்போன வாழ்வு. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மோசேமூலம் விடுவித்து வழி நடத்திய தேவன் அவர்களை மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம் என்று எச்சரித்தார். எகிப்துக்குத் திரும்புவோம் எனப் பிடிவாதம்பிடித்த மக்களைத் தண்டித்தார்.
ஆம், பழைய ஏற்பாட்டு சம்பவங்களும் வசனங்களும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானானுக்கு வழி நடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து பரம கானானை நோக்கி வழி நடத்துகின்றார்.
எனவேதான் தேவன் பல்வேறு எச்சரிப்புகளைக் கொடுத்தார்.
"கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்." ( எரேமியா 42 : 15,16 )
"என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும் (எரேமியா 42:18)
புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதை எகிப்துக்குத் திரும்பிச் செல்வதாக எடுத்துக்கொள்ளலாம். எனவேதான் இன்றைய வசனம் எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ என்று கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பேதுரு தனது நிருபத்தில், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என எழுதுகின்றார்.
ஒருவர் பழைய பாவ வாழ்க்கையைத் தேடுவதற்கு உலக ஆசைதான் காரணமாய் இருக்கும். செல்வம், பதவி, அந்தஸ்து இவைகளுக்காக ஒருவர் பழைய எகிப்து வாழ்க்கையைத் தேடலாம். அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் தேடாமல் அவரைவிட்டுப் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.
"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! (எசாயா 31:1) என வேதம் நம்மை எச்சரிக்கின்றது.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment