ஆதவன் 🌞 808🌻 ஏப்ரல் 15, 2023 சனிக்கிழமை
"கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." ( பிலிப்பியர் 2 : 15, 16 )
கிறிஸ்துவின் பாடுகளைத் தியானித்த பரிசுத்தவான் ஒருவர் கூறுவார், இயேசு கிறிஸ்து கெத்செமெனி தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்து பின் யூதர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்வேறு பாடுகள்பட்டு இறுதியில் சிலுவைச் சாவை ஏற்றார். பொதுவாக நாம் இவற்றையே இயேசு பட்ட பாடுகளாக எண்ணிக்கொள்கின்றோம். ஆனால் அவர் இந்த உலகினில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை ஆண்டுகளும் தொடர்ந்து பாடுபட்டார். உதாரணமாக நாம் தெரு ஓரத்தில் இருக்கும் சாக்கடைக்குள் வசித்து, உண்டு உறங்க முடியுமா? இயேசு அதற்கு ஒப்பான காரியத்தைச் செய்தார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பாடாக இருந்திருக்கும்.
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என தூதர்கள் வாழ்த்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாழ்ந்த அவர் இந்த உலகினில் பாவ மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்கு எவ்வளவு துன்பமும் வேதனையான காரியமாக இருந்திருக்கும்? சாதாரண மனிதர்களான நம்மாலேயேகூடச் சிலத் துன்மார்க்க மனிதர்களோடு 24 மணிநேரம் வாழ முடிவதில்லை. ரயிலில் பயணம் செய்யும்போது சில வேளைகளில் குடிகாரரும் சீட்டாட்டக்காரர்களும் கூடி கும்மாளமடித்துக்கொண்டிருந்தால் நம்மால் அந்த இடத்தில அவர்களோடு பயணம் செய்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்து இத்தகைய மனிதர்களோடு முறுமுறுக்காமல் வாழ்ந்தார்.
உலக மனிதர்களை அப்போஸ்தலரான பவுல் அடிகள் கோணலும் மாறுபாடுமான சந்ததி என்று இன்றைய வசனத்தில் கூறுகின்றார். இந்த "கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." என்கின்றார் அவர். அதாவது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை, நாம் அவர்கள் மத்தியில் குற்றமற்றவர்களாகவும் கபடம் இல்லாதவர்களும், தேவனுக்கேற்றபடி மாசற்றவர்களாகவும் வாழவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். மட்டுமல்ல, அவர்களது செயல்பாடுகளை எண்ணி முறுமுறுக்காமலும் அவர்களோடு தர்க்கம் செய்யாமலும் வாழவேண்டும் என்கின்றார்.
இது சற்று கடினமான செயல்தான். ஏனெனில் இந்த உலகத்தில் நாம் பல்வேறு வகை மக்களைச் சந்திக்கின்றோம். அவர்கள் எல்லோரோடும் நம்மால் ஒத்துப்போக முடியாது. ஆனாலும் நம்மால் முடியுமட்டும் சகித்துக்கொள்வது மேலான காரியம் என்பதால் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இப்படிக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து இப்படியே இந்தக் கோணலான சந்ததிகளுக்குள் வாழ்ந்தார். அவர் பாடுகள்பட்டபோதுகூட இப்படியே சகித்துக்கொண்டு வாழ்ந்தார். இதனை அப்போஸ்தலரான பேதுரு, "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்." ( 1 பேதுரு 2 : 23 ) என்று எழுதுகின்றார்.
நாமும் குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யும் வல்லமைவேண்டி ஜெபிப்போம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment