மிருகத்தைப்போல அவர் கொல்லப்பட்டார்

ஆதவன் 🌞 800🌻 ஏப்ரல் 07, 2023 வெள்ளிக்கிழமை




"எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 )

பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிடும் பழைய ஏற்பாட்டுப்  பலி முறைமை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் நிறுத்தப்பட்டது. அவர் தனது சுய இரத்தத்தையே சிந்தி நித்திய மீட்பினை உண்டுபண்ணினார். ஆம், "காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." ( எபிரெயர் 10 : 4 )

பழைய ஏற்பாட்டில் பாவ நிவாரண பலியாகப் பலியிடும் மிருகங்களின் இரத்தம் ஆசாரியன் மேலும் மக்கள்மேலும் தெளிக்கப்படும். பலியிடப்படும் மிருகங்களின் உடலோ பாளையத்துக்கு வெளியே (மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியே எரிக்கப்படும்.  இதுவே பாவ நிவாரணப் பலியின் முறைமை. இதனை நாம் லேவியராகமத்தில் வாசிக்கலாம். 

"காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்." ( லேவியராகமம் 4 : 12 ) அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்."

அன்பானவர்களே, ஒரு மிருகத்தைப்போல நமக்காக அவர் கொல்லப்பட்டார். "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 ) என்கின்றார் ஏசாயா. 

அன்று இயேசுவின் பாடுகளை நேரில் பார்த்த பலர் அவர் தேவனால் தண்டிக்கப்பட்டார் என்று எண்ணிக்கொண்டனர். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53 : 4 )


எபிரெய நிருப ஆசிரியர் இந்த உண்மையினை அழகாக நமக்குப் புரிய வைக்கின்றார். பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் மிருகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியைவிட்டு வெளியே கொண்டுபோகப்பட்டு சுட்டெரிக்கப்படுவதைப்போல கிறிஸ்துவும் நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டார். ஆம், அவர் மனிதனாகப் பிறந்தது மட்டுமல்ல, மனிதனைவிடக் கீழான ஒரு மிருகமாகத்  தன்னை மாற்றினார். எதற்காக? நாம் மீட்பு பெறவேண்டும் என்பதற்காக.

எனவே நாம் செய்யவேண்டியது என்ன? அவரது நிந்தனைகளை அவர் பட்ட அவமானங்களை நம்மில் சுமந்துகொண்டு (நமது பாவங்களைச் சுமந்துகொண்டு) அவரிடம் புறப்பட்டுச் செல்லவேண்டும். "ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 13 )

இந்தச் சத்தியங்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துவின்மேல் அன்பு அதிகரிக்கும். நமது பாவங்களை அவர் மன்னிப்பார் எனும் விசுவாசம் ஏற்படும். ஆம் அன்பானவர்களே, "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 )

விசுவாசித்து கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்ளும்போது உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தையும் இரட்சிப்பையும் பெற்று மகிழலாம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்