ஆதவன் 🌞 802🌻 ஏப்ரல் 09, 2023 ஞாயிற்றுக்கிழமை
"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 )
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முக்கியமான சாட்சி நமது இரட்சிப்பு அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுகின்றோம். இது வெறும் வசனமல்ல; அனுபவம். நம்முடைய பாவங்கள் சாபங்கள் இவை கிறிஸ்துவின் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் தான் நீக்கப்படுகின்றன.
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) என்று ஏசாயா கூறுவது உண்மை என்பதை நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறும்போதுதான் நாம் சரியாக உணர்ந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் இது வெறும் வசனமாகவே நமக்குப் புரியும்.
நமது மீறுதல்கள் நிமித்தமே அவர் பாடுபட்டார். அவர் அப்படிப் பாடுபட்டுச் சிந்திய இரத்தத்தால் மீட்பு உண்டாயிற்று. இந்தக் கிறிஸ்தவ விசுவாசமே இயேசு கிறிஸ்துவை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் கடவுளாக வழிபடவேண்டிய அவசியமில்லை. இந்த உலகத்தில் நீதி போதனைகள் செய்து மரித்துப்போன சாதாரண மனிதர்களில் ஒருவரைப்போலவே அவரும் இருந்திருப்பார்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் நமது நம்பிக்கை, பிரசங்கங்கள் எல்லாமே வீணாயிருக்கும். நாமும் இன்னும் பாவங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்போம். சிறிய பாவங்கள் செய்யும்போதும் நமக்குள் உண்டாகும் மனச்சாட்சியின் உறுத்தல், தேவனைவிட்டுப் பிரிந்தது போன்ற உணர்வு, அவற்றை தேவனிடம் அறிக்கையிடும்போது கிடைக்கும் மன அமைதி இவை கிறிஸ்துவின் உயிர்தெழுதலால் நமக்குக் கிடைக்கின்றது.
மேலும், "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே."( 1 கொரிந்தியர் 15 : 15 ) என்கின்றார் பவுல் அடிகள். இப்படி ஒரு பொய்யைக் கூறவேண்டிய அவசியமென்ன? அதனால் என்ன லாபம்? அந்த லாபம் யாருக்கு?
இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே சகோதரியே நீங்கள் கிறிஸ்தவர்களாகவோ கிறிஸ்துவை அறியாத பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." ( ரோமர் 10 : 9 ) எனும் வசனத்தின்படி மீட்பு அனுபவம் பெறுவீர்கள்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒருவேளை உங்களுக்கு சந்தேகிக்கும் விதமாகவும், கட்டுக்கதையுமாகத் தெரியலாம். அல்லது சிறு குழந்தையாய் இருந்ததுமுதல் கற்றுக்கொடுக்கப்பட்டதால் அதனை பெயரளவுக்கு நம்பிக்கொண்டிருக்கலாம். உண்மையான விசுவாசத்துடன் உள்ளத்தை அவருக்குக் கொடுத்தால் உயிர்ப்பு உண்மை என்பதை உணர்ந்துகொள்வீர்கள். உயிர்த்த இயேசு கிறிஸ்து உங்களை உள்ளத்தில் பேசி நடத்தும் அனுபவத்தைப் பெறுவீர்கள்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment