Tuesday, July 30, 2024

1947 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட தாவீதின் புதிய சங்கீதம்

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் :- 

                              சகோ. எம்.ஜியோ பிரகாஷ் 

1947 ஆம் ஆண்டு கும்ரன் குகையில் ஆடுமேய்த்த சிறுவர்கள் கண்டுபிடித்த மண்பாண்டங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட வேதாகம  தோல்சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் தாவீது எழுதிய சங்கீதம் ஒன்றும் இருந்தது. வேதாகமத்தில் இல்லாத அந்தச்  சங்கீதம் இதோ:-  


நிச்சயமாக ஒரு புழு உம்மைத் துதிக்க முடியாது; கல்லறைப் புழு உம்  இரக்கத்தைப் புகழ்ந்திடாது. ஆனால் ஜீவனுள்ளோர் உம்மைத் துதிக்கமுடியும்!!. தள்ளாடுகிறவன்கூட உம்மைப் போற்றிப் புகழ முடியும். 


உமது இரக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி உமது நீதியால் அவர்களை மகிழ்விக்கின்றீர். ஏனெனில் ஜீவனுள்ளோரின் ஆன்மாக்கள் உமது கரங்களில் உள்ளன. மாம்சமான அனைத்துக்கும் உயிரளித்தவர் நீரே. 


உமது நன்மைக்கேற்ப, உமது இரக்கம் நீதிக்கேற்ப எம்மிடம் செயல்புரியும்.


கர்த்தரின் நாமத்தின்மேல் பற்றுதல் கொள்வோரின் குரலை அவர் கேட்கிறார். தனது இரகத்தினால் அவர்களைக் கைவிடாமல் காக்கின்றார். 


நீதியை நடப்பிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவரே பரிசுத்தவான்களை  தனது அன்பினாலும் இரகத்தினாலும் முடிசூட்டுகின்றார். 


என் ஆன்மா கர்த்தரது நாமத்தை  உயர்த்திப் போற்றுகின்றது. அவரது அன்பின் கிரியைகளை புகழ்ந்து பாடுகின்றது. உமது நீதியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு முடிவே இல்லை. 


எனது பாவங்களும் மீறுதல்களும் என்னை  மரணத்துக்குச் சமீபமாக இழுத்துச் சென்றன. ஆனால் கர்த்தாவே, உமது மகா கிருபையினாலும்  நீதியினாலும் நீரே என்னை மீட்டுக்கொண்டீர்.


தேவனே! உண்மையிலேயே உமது நாமத்தை நான் நேசிக்கிறேன். உமது பாதுகாப்பில் அடைக்கலம் காண்கிறேன். உமது வல்லமையினை நினைவுகூரும்போது எனது இருதயம் தைரியம் கொள்கின்றது. உமது இரக்கத்தின்மேல் சாய்ந்துகொள்கிறேன்.


என் பாவங்களை மன்னியும், கர்த்தாவே என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் ஆத்துமாவை உமது உண்மையிலும் நீதியிலும்  காத்து நான் அழிந்திடாமல் பாதுகாத்தருளும். 


அலகை என்னை மேற்கொள்ளாமலும், அசுத்தஆவி என்னை வேதனைப்படுத்தி  என் எலும்புகளை மேற்கொள்ளாமலும் இருப்பதாக! தேவனே, நீரே என்புகழ்ச்சி; நாள்முழுதும் நீரே என் நம்பிக்கை.


உமது இரக்கத்தின் மேன்மையைக்கண்டு ஆச்சரியப்படும் என் சகோதரர்கள் என்னோடும் என் தகப்பன் வீட்டாரோடும் அக்களிப்பார்களாக. 


தேவனே! நான் எப்போதும் உம்மிலே மகிழ்ந்திருப்பேன்.!

ஓட்டையான தொட்டி

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 07, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,276                               

     

"என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

மெய்தேவனாகிய கர்த்தரை அறிந்தபின்பு நாம் அவரைவிட்டுப்  பின்மாறிப் போவோமானால் இன்றைய தியான வசனம் கூறும் நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பொருள். அதாவது அப்படி நாம் பின்மாறும்போது இரண்டு தீமைகளை செய்தவர்களாகின்றோம். முதலில்,   ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டுவிடுகின்றோம் அடுத்து, தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை நமக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஆகின்றோம்.      

அதாவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு. "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தாளாம் ஒருத்தி." அன்பானவர்களே, நமது கையில் வெண்ணையான தேவன் இருக்கும்போது அதனைப் பாதுகாத்து உபயோகப்படுத்திடாமல் நாம் நெய்க்காக அலைந்து திரியும் முட்டாள்களாக இருக்கக்  கூடாது. இஸ்ரவேல் மக்கள் இப்படித்தான் செய்தனர். ஜீவத்தண்ணீர் அவர்கள் நடுவில் இருந்தும் அதனை விட்டுவிட்டு தண்ணீர் நிரப்ப வெடிப்புள்ள ஓட்டையான தொட்டிகளைத் தங்களுக்காக உருவாக்கிக்கொண்டனர். 

அன்று இஸ்ரவேலர் செய்த அதே தவறையே இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆம், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை முழுமையாகப் பற்றுவதை விட்டுவிட்டு முட்டாள் பெண் நெய்க்கு அலைந்ததுபோல ஏமாற்று ஊழியர்களை நோக்கி ஓடுகின்றனர். ஆம், நாம் பற்றிக்கொள்ளவேண்டியது கிறிஸ்துவையே தவிர ஊழியர்களையல்ல. இவர்களைப்பார்த்து வேதனையுடன் தேவன் கூறுகின்றார், "என் ஜனங்கள் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள். "

இதுபோலவே கிறிஸ்துவின்மேலுள்ள முழுமையான விசுவாசத்தை விட்டுவிட்டு வேதம் கூறாத முறையில் பல்வேறு புனிதர்களை நாடிப்போகும்போது நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய அவரை விட்டுவிடுகின்றோம் என்று பொருள். 

அன்பானவர்களே, நமது வீட்டில் தண்ணீர் நிற்காத ஒரு ஓட்டையான தொட்டி இருக்குமானால் அதனால் என்ன பயன்? அது இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். வேதனையுடன் தேவன் கூறும் இன்றைய வார்த்தைகளுக்குச் செவி கொடுப்போம். நல்ல பலமான ஓட்டையில்லாத தொட்டியை நமக்குத் தந்து அதனை ஜீவத் தண்ணீரால் நிரப்பிட ஆவலுடன் காத்திருக்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரிடம் முழு மனதுடன் திரும்புவோம்.

"சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, July 29, 2024

வேதாகம முத்துக்கள் - ஜூலை 2024


                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,240                                                   💚 ஜூலை 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," ( ரோமர் 1 : 11 )

கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் இருக்கவேண்டிய ஐக்கியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. "உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்" என இதனையே அப்போஸ்தலரான பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகின்றார்.

அதாவது, என்னிடம் விசுவாசம் இருக்கின்றது; உங்களிடமும் விசுவாசம் இருக்கின்றது. இந்த விசுவாசம் நமக்குள் இருப்பதனால் நாம் இருவரும் சேரும்போது இருவருக்கும் ஆறுதல் கிடைக்கின்றது என்று பொருள். 

சிலவேளைகளில் ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் வரும்போது நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் அத்தகைய வேளைகளில் நம்மைப்போன்ற ஆவிக்குரிய நண்பர் ஒருவர் நமக்கு இருப்பாரானால் அவரிடம் நமது துன்பங்களைப்  பகிர்த்துக்கொள்ளும்போது மன ஆறுதல் கிடைக்கும். எனவேதான் ஆவிக்குரிய ஐக்கியம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

நமது சோகங்களையும் துன்பங்களையும் உலக நண்பர்களிடம் கூறும்போது நமக்கு ஏற்ற ஆறுதல் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் ஆவிக்குரிய நிலையிலிருந்து பிரச்சனைகளைப்  பார்ப்பதில்லை. வெறும் உலகப்பிரகாரமான ஆறுதல் வார்த்தைகளைக்கூறி நம்மைத் தேற்றுவார்கள். மட்டுமல்ல, சிலவேளைகளில் அவர்களிடம் நாம் கூறிய காரியங்களை மற்றவர்களிடமும் கூறிவிடுவார்கள். 

ஆவிக்குரிய ஐக்கியம் என்று கூறியதும் நாம் செல்லும் சபையினரோடு உள்ள  ஐக்கியத்தை எண்ணிவிடக்கூடாது. மாறாக, தனிப்பட்ட முறையில் நமக்கு இருக்கும் ஆவிக்குரிய நண்பர்களின் ஐக்கியத்தை நான் குறிப்பிடுகின்றேன். அது அதிகமானவர்கள் கொண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒன்றோ இரண்டோ ஆவிக்குரிய நண்பர்களோடு நாம் நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டாலே  போதும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது இருவர் இருவராக அனுப்பினார். 

"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.' ( பிரசங்கி 4 : 9,10 ) என்று வாசிக்கின்றோம். 

மேலும், "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்." ( சங்கீதம் 133 : 1-3 )

ஆம், சகோதரர்கள் ஒருமித்து வாழ்வதே ஒரு ஆசீர்வாதம்தான். ஆவிக்குரிய வாழ்வில் நாம் சிறப்படையவும்  கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடவும் நமக்கென சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியத்தை உருவாக்கிக்கொள்வோம். 


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,241                        💚 ஜூலை 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

".....அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

"தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது என்று அடிக்கடி கூறுகின்றிர்களே அது எப்படி?"  என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு, "நீங்கள் உங்கள் அப்பா அல்லது அம்மாவுக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நடப்பீர்களோ அப்படி தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் ஒப்புக்கொடுத்தல்" என்று கூறினேன். அவர் கூறினார், "நான் எனது அப்பா அம்மாவுக்கு பொதுவாக எந்த விஷயத்திலும் கீழ்ப்படிவதில்லை".  

ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு அடிமையைப்போல ஆதலாகும். ஒரு அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. அவனது உரிமையாளன் என்னக்  கூறுகிறானோ அதனைச் செய்து முடிப்பதுதான் அடிமையின் வேலை. அதாவது சுய சித்தமில்லாமல் அனைத்தையும் விட்டுவிடுதல் அல்லது இழத்தல். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் என்பது நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவர் நம்மை ஆளும்படி கையளிப்பது. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் புதிய உதாரணத்தோடு விளக்குகின்றார். அதாவது, "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல" என்கின்றார். பொறாமை, காய்மகாரம், வஞ்சனை, பொய், கபடம், ஏமாற்று, மற்றவர்களைக் குறித்து அபாண்டமான பேசுதல், காம எண்ணங்கள், பெருமை, மனமேட்டிமை போன்ற பல குணங்கள் முன்பு நமக்கு இருந்திருக்குமானால் நாம் அவற்றுக்கு முன்பு அடிமைகளாக இருந்துள்ளோம் என்று பொருள். 

அப்படி அவற்றுக்கு அடிமைகளாக இருந்து அவற்றையே செய்துகொண்டிருந்ததுபோல "இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." அதாவது, முன்பு தேவையில்லாத மேற்படிச் செயல்களைச் செய்ததுபோல இனி நீதிக்குரிய செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகின்றார். இதுவே தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல். 

மட்டுமல்ல, இப்படிச் செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் ஆராதனையாகும் என்றும் அப்போஸ்தலரான பவுல் ரோமர் 12 ஆம் அதிகாரத்தில் கூறுகின்றார்.  "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, இப்படி நம்மைத் தேவனுக்கு  ஒப்புக்கொடுக்காமல் செய்யும் ஆராதனைகள் அனைத்தும் புத்திகெட்ட ஆராதனைகள் என்று பொருள். எனவே, அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நாம் நமது அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இனி பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழ்வோம். 


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,242                        💚 ஜூலை 03, 2024 💚 புதன்கிழமை 💚

"ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 )

இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதும் நமக்குச் சில துன்பங்கள் தொடர்கின்றன. ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." அதாவது நமக்கு மகிமையான எதிர்கால வாழ்வு  ஒன்று உள்ளது. அந்த மகிமைக்குமுன் நாம் இப்போது அனுபவிக்கும் பாடுகள் ஒன்றுமில்லாதவையே. 

இதற்கான காரணத்தை இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது, இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் எதிர்காலத்தில் நம்மை தேவனது பிள்ளைகளும் அவரது மகிமையின் சுதந்திரவாளிகளுமாக மாற்றுகின்றது. தேவ மகிமை அடையும் உரிமை நமக்கு எதிர்காலத்தில் உள்ளது. எனவே, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்கின்றார் பவுல். 

உதாரணமாக, இந்த உலகத்தில் மருத்துவ படிப்பை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மருத்துவராகி சமூகத்தில் அங்கீகாரமும் மகிமையும் அடையவேண்டுமானால் அவர் ஐந்து ஆண்டுகள் கடுமையான படிப்பை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு பயிற்சிகள், செயல்முறைத் தேர்வுகள் இவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகள் படிக்கும் மாணவர்களுக்குத் துன்பம் தருவதாகவே இருக்கும்.  

இந்த மாணவர்கள், வீட்டைவிட்டு, நண்பர்களைவிட்டு, சாதாரண படிப்புப்  படிக்கும் தங்கள் வயது மாணவர்கள் அனுபவிக்கும் சில சுதந்திரங்கள் இல்லாமல் இருக்கவேண்டியிருக்கும். ஆம், இத்தகைய பயிற்சிகள், தேர்வுகள் இவற்றைக் கடக்கும்போது மருத்துவர் எனும் பட்டமும் சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் கிடைக்கின்றது. அதாவது அந்த மாணவன் இதுவரை அனுபவித்தத் துன்பங்கள்  இந்த மகிமையை அவர்களுக்குக் கொண்டுவந்தது. 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் மகிமை இப்படி இருக்குமானால் பரலோக மகிமை எப்படிப்பட்டதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் தேவனது பிள்ளைகளும் சுதந்தரருமாக, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படுவோம். ஆம், அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

எனவே நாம் இந்த உலகத்துப் பாடுகள், துன்பங்களை கிறிஸ்துச் சகித்ததுபோல சகித்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுக்கு ஒப்பான அவர்  "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:7,8) எனும்போது அவர் எத்தனை பெரிய துன்பங்களைச் சகிக்கவேண்டியிருந்திருக்கும்!!! எனவே தேவன் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தி, எல்லோருடைய முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படியான மகிமையினைக் கொடுத்தார். 

எனவே துன்பங்களை சகித்து வாழ தேவவரம் வேண்டுவோம். நமது இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,243                        💚 ஜூலை 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 )

யோசுவாவைத் திடப்படுத்தத் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மோசேயுடன் தேவன் செயல்பட்ட விதம், மோசே தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் இவற்றை யோசுவா நன்கு அறிந்திருந்தார். மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பணி  செய்யும்போது யோசுவா அவரோடே இருந்து வந்தார். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;..............நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.' ( யாத்திராகமம் 33 : 11 ) என்று வாசிக்கின்றோம். எனவே, மோசேயைப்பற்றி யோசுவா அதிகம் அறிந்திருந்தார். 

மோசேயோடு தேவன் திடீரென்று வந்து விடவில்லை. மோசே பிறந்ததுமுதலே தேவன் மோசேயோடு இருந்தார். அதனால் பிரசவத்தின்போது எகிப்திய மருத்துவச்சிகள் அவன்மேல் இரக்கம் வைத்துக் கொல்லாமல் காப்பாற்றினார்கள். நாணல் பெட்டியில் வைத்து நதிக்கரையில் அனாதையாக விடப்பட்டபோதும்  தேவன் அவனோடேகூட இருந்து பார்வோனின் மகள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார்; மேலும், அந்த இக்கட்டிலும் ஆச்சரியமாகச்   சொந்த தாயே பாலூட்டும் வாய்ப்பை ஏற்படுத்தினார்; அரண்மனை வாழ்க்கைமூலம் பல துறைகளில் வித்தகனாகக்  கிருபைசெய்தார். ஆம்,  மோசே பிறந்தது முதல் தேவன் அவனோடு இருந்தார்.

இப்படிப் பலத் திறமைகளில் தகுதிபெறச் செய்து பின்னர் பார்வோனிடம் மோசேயைத் தேவன் அனுப்பினார். இந்த மோசேதான் பல்வேறு அற்புதங்களையும்  அதிசயங்களையும் மக்கள் கண்முன் செய்து அவர்களைக் கானானுக்கு நேராக வழிநடத்தினார். 

இப்படி மோசேயை வழிநடத்தியவர் இன்று நம்மைப் பார்த்தும் கூறுகின்றார், "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." என்று. இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே சகோதரியே, தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் யோசுவாவுடன் தேவன் கூறிய இந்த வார்த்தைகள் நமக்கும் சொந்தம்தான். காரணம், தேவன் ஆள்பார்த்துச் செயல்படுபவரல்ல. 

நமது வாழ்வின் குறிப்பிட்டச் சில நாட்களுக்கு மட்டுமல்ல, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நமது இறுதி  மூச்சு உள்ளவரை தேவன் நம்மைக் கைவிடமாட்டார்  என்று பொருள். மரித்தபின்னரும் மோசேயைத் தேவன் கைவிடவில்லை. இதனை, "அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்." ( உபாகமம் 34 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும், எந்த உலகப் பிரச்சனைகளும்  நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார் ; நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244                        💚 ஜூலை 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. ஏனெனில், தேவன் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளார். நம்மை அற்பமாக உருவாக்கியுள்ளார் என்றால் அப்படி அவர் நம்மை உருவாக்க என்ன நோக்கம் என்று உணர்ந்து அவரது சித்தம் நம்மால் நிறைவேற வாழவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. 

இதனை விளக்கவே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனம் மூலம் ஒரு உவமையைக் கூறுகின்றார். தேவன் ஒரு பரம குயவன். அவரிடமுள்ள களிமண்போன்றவன்தான் மனிதன். ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் உள்ளது. அதுபோல உரிமை அவருக்கு இருப்பதால் அவரது சித்தப்படி நம்மை ஒருவிதமாகவும் இன்னொருவரை வேறுவிதமாகவும் படைத்துள்ளார். 

உலகிலுள்ள அனைவருக்கும் ஒரேவித பதவி, செல்வம், புகழ் இருக்குமானால் யாரும் எவரையும் மதிக்கமாட்டார்கள், கீழ்ப்படியமாட்டார்கள்;   இந்த உலகமும் இயங்காது. எனவே இப்படிச் செய்துள்ளார் தேவன். இதனை நமது உடலைக்கொண்டே அப்போஸ்தலரான பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறுகின்றார். உடலில் பல உறுப்புக்கள் இருப்பதுபோலவே இதுவும். "அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.' ( 1 கொரிந்தியர் 12 : 19, 20 )

இன்று ஒருவேளை நமது ஊரில், சமூகத்தில் நாம் பலவீனர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி உலக மனிதர்கள் பார்ப்பதுபோல நம்மைப்  பார்ப்பவரல்ல. மதிப்புக் குறைவாகக் காணப்படும் உடல் உறுப்புகளுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல தேவனும் கொடுக்கின்றார். அற்பமான நம்மை அவர் உயர்வாக எண்ணுகின்றார்.

ஆம், "சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்" ( 1 கொரிந்தியர் 12 : 22, 23 )

எனவேதான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவனே மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் செய்வதுபோல பல்வேறு வித பாத்திரங்களாய் நம்மை உருவாக்கியுள்ளார். நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணர்ந்துகொள்வோமானால் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடமாட்டோம். அப்போது நாம் நம்மை இப்படி உருவாக்கிய தேவனுக்கு நன்றி கூறுபவர்களாக இருப்போம். 

என்னோடு படித்த மற்றும் ஊரிலுள்ள மற்ற நண்பர்களைப்போல எனக்கு நல்ல உலகவேலை இல்லாமலிருந்தது. அப்போது அது எனக்கு மனவேதனையைக் கொடுத்தாலும் அது தேவ சித்தம் என்று உணர்ந்துகொண்டபின் எனது மனம் புத்துணர்ச்சி பெற்றது. இன்று மற்றவர்களைவிட எந்த நிலையிலும் குறைந்து போகாமல் தேவன் நடத்திக்கொண்டிருக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடாமல், நம்மைக்குறித்த தேவ சித்தம் அறிந்து செயல்படுவோம். அப்போது வீணான மனக்கவலைகள் நம்மைவிட்டு வெளியேறிவிடும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244                       💚 ஜூலை 06, 2024 💚 சனிக்கிழமை 💚
 
"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." ( ரோமர் 9 : 32 )

இந்த உலகத்தில் நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். நியாயப்பிரமாணம் கூறும் பல கட்டளைகளை அவர்களும் நிறைவேற்றுகின்றார்கள். இதுபோலவே அன்றைய யூதர்களும் இருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணக்   கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் கட்டளைகளைக்  கடைபிடித்தனர். ஆனால் அப்படிக் கடைப்பிடித்தும் அவர்களால் கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்றுவரை யூதர்கள் மேசியா இனிதான் வரப்போகின்றார் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்துவை விசுவாசியாத பலரும்,  பல மதத்தினரும் மெய்யான தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. 

இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும்  இப்படியே இருக்கின்றனர். அவர்கள் பல தேவ கட்டளைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்க முடியவில்லை. ஆவிக்குரிய மேலான காரியங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. காரணம், அவர்கள் யூதர்களைப்போல தங்களது நீதிச் செயல்களுக்கும்  பக்திக்  காரியங்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )

ஆலய வழிபாடுகள் நமக்குத் தேவைதான்; ஆனால் தேவனை அறிந்து தேவ அனுபவங்களுடன் வழிபாடுகளில் கலந்து கொள்ளும்போது தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும். தேவன்மேல் முழு விசுவாசம் கொள்ளாமல் நமது சுய பக்தி, நமது ஆலய பணிவிடைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்போமானால் நாம் யூதர்களைப்போல இடறுதற்கேதுவான கல்லில் இடறியவர்களாகவே இருப்போம். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, ஒரு கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார், அவரது இரத்தத்தினால்தான்  பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும்  நமக்கு உண்டு என்பதை நூறு சதவிகிதம் நம்புபவனாகவும் அந்த நம்பிக்கையின்படி பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் உள்ளவனாகவும் இருக்கவேண்டும். 

மேலும், நாம் இதுவரைக் காணாத வேதம் கூறும் காணப்படாத சத்தியங்களாகிய பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் உள்ளவனாக இருக்கவேண்டும். இந்த நிச்சயங்கள் இல்லாமல் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனைத் தேடினபடியால் யூதர்கள் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமலிருந்தது. காரணம், அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமல் ஒருவருக்கு   பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் ஏற்படாது. வெறும் வாயளவில் மட்டும் இவைகளைக்குறித்துக் கூறிக்கொண்டிருக்கலாம். 

எனவே, இன்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் இப்படியே இருக்கக்கூடாது. வெறும் வெறுமனே  கட்டளைகளைகளையும் வழிபாடுகளையும்  நிறைவேற்றுவதற்கு மட்டும்  முன்னுரிமை கொடுத்து கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்காதவர்களாக வாழக்கூடாது. கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்தவர்களாக -  ஆவிக்குரிய மேலான காரியங்களை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனால்தான், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே (கட்டளைகளை நிறைவேற்றுவதால் மட்டும்) எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுகின்றது. 

வேதாகமம் கூறும் முறைமையின்படி கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தினாலே மட்டுமே நாம் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்கவும் கடைபிடிக்கவும்  முடியும். அப்போது யூதர்களைப்போல  இடறுதற்கான கல்லில் இடறமாட்டோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,245                       💚 ஜூலை 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ( ரோமர் 8 : 39 )

தேவனிடம் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக வாழ்ந்தாலும் சிலர் தங்களது வாழ்வில் உயர்வு வரும்போது அவரைச் சற்று ஒதுக்கிவிடுவதுண்டு. உதாரணமாக,  வறுமை நிலையிலிருக்கும்போது தங்கள் முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைத்து வாழும் பலர் தங்கள் வாழ்வில் பொருளாதார உயர்வு ஏற்படும்போது தேவனை மறந்துவிடுகின்றனர். தங்களது உயர்வு தங்கள் உழைப்பால் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படி எண்ணுவதும் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல். 

இப்படி வாழ்வில் உயர்வு வரும்போது நாம் தேவனை மறந்துவிடக்கூடாது என்று மோசே இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துவதை நாம் உபாகமத்தில் வாசிக்கலாம். "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து," ( உபாகமம் 8 : 17 ) என்கின்றார் அவர். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும், உன் இருதயத்தில்கூட அப்படி நினையாதே என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதுபோலவே சிலர் நோய்வாய்ப்படும்போது தேவனை நோக்கி ஜெபித்துவிட்டு, நோய் குணமானதும், "அந்த மருத்துவமனையில் நல்ல டிரீட்மெண்ட் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள் அதுவும் குணம்பெற ஒரு காரணம்" என்பார்கள். இதுவும் முழு விசுவாசத்தையும் அவர்கள் தேவன்மேல் வைக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. எனவே,  இப்படிப் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்தான். 

கிறிஸ்தவர்களில் சிலர்கூட, "நன்றாகப் படித்ததால் நான் மருத்துவர் அல்லது  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரி ஆனேன்"  என்று கூறுவார்கள். ஆனால் ஒன்றினை இவர்கள் மறந்துவிடுகின்றனர்; அதாவது இப்படிக் கூறும் இவர்களைவிட நன்றாகப்  படித்த பலரும் அறிவுள்ளவர்களும்  இந்தத் தகுதியைப் பெறவில்லையே ஏன்? 

இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்," ( ரோமர் 8 : 38 ) கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்கின்றார்.

தாங்கள் அன்புசெய்தவர்களின் மரணம் ஏற்பட்டதாலும், தங்களுக்குத் தேவதூதர்கள் காட்சியளித்ததாலோ அல்லது "நான் காட்சிக்கண்டேன்" என்று பிறர் கூறுவதைக் கேட்டும் சிலர் தேவனைவிட்டு பின்மாறுவார்கள். எனவே, "அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்." ( உபாகமம் 13 : 3 ) என மோசே இஸ்ரவேல் மக்களை எச்சரிப்பதைப் பார்க்கின்றோம். 

எனவே, இப்படி உலக அதிகாரங்கள், பதவிகள் நமக்குக் கிடைக்கும்போதும், வேறு தெய்வங்கள், தூதர்கள் மூலம் தாங்கள் அடைந்த பலன்கள் குறித்துச் சிலர் சாட்சி கூறும்போதும்,  வல்லமை மிக்கச்  செயல்கள் புரியும் ஆற்றல் பெறும்போதும், நமது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நல்ல அல்லது கெட்டக்  காரியங்களின்போதும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம் பிரிந்துவிடக்கூடாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எல்லா மகிமையும் கனமும் கிறிஸ்து இயேசு மூலம் தேவனுக்கே உரியது.   

இப்படிக் கிறிஸ்துவின்மேல் உறுதியான விசுவாசம் உள்ளவர்களாக வாழும்போதுதான் நாம் அவரை அன்புசெய்கின்றோம் என்பது உறுதியாகும்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,246                       💚 ஜூலை 08, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

"இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் அணியாமல் இருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது உலக மக்கள் எல்லோரும் எப்படி நடக்கின்றார்களோ அதுபோலவே நீங்களும் நடக்காமலிருங்கள் என்று கூறுகின்றது. நடப்பது என்பது காலினால் நடப்பதையல்ல, மாறாக நமது செயல்பாடுகளைக் குறிக்கின்றது. 

உதாரணமாக, ஒரு காரியம் நடைபெற நமது சக  மனிதர்கள் குறுக்குவழிகளான லஞ்சம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடுவதுபோல ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றது.  இதனை இந்த வசனம் ஏன் வேஷம் என்று கூறுகின்றது? அதாவது ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு  ஆவிக்குரிய ஆராதனைகளில் பங்கெடுத்து தங்களை மேலான ஆவிக்குரிய அனுபவம் உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு இப்படிக் குறுக்கு வழியிலும் முயல்வதால் வேஷம் என்று கூறுகின்றது. 

இப்படி வேஷம் போடாமல், "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு காரியம் நமக்கு விரும்பியும் நடைபெறவில்லையானால், தேவ சித்தம் அது என்று நாம் பகுத்தறியும் அறிவு நமக்கு வேண்டும். மற்றவர்களைப்போல் தேவ சித்தமறியாமல் குறுக்கு வழிகளில் முயலக்கூடாது என்று  பொருள். 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை இதே அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) அதாவது, தேவன்மேலுள்ள நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்து, பொறுமையுடன் ஜெபத்தில் காத்திருக்கவேண்டும் என்கின்றார். 

இந்த உண்மையை தாவீது ராஜாவும் உணர்ந்திருந்தார். இப்படி வேஷம் போடும் மனிதர்களையும் அவர் பார்த்திருந்தார். எனவே அவர் கூறுகின்றார், "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்." ( சங்கீதம் 39 : 6 ) அதாவது, மனிதன் இந்த வேஷம் போடக்காரணம் சொத்து சுகங்களைச் சேர்ப்பதற்குத்தான். ஆனால், இப்படிச்  சேர்க்கும் சொத்துச்  சுகங்களை பலவேளைகளில் அவனும் அனுபவிப்பதில்லை அவற்றை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனையும் அவர்கள் அறிவதில்லை.

எனவே அன்பானவர்களே, நாம் நமது வாழ்வில்  இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனதைப் புதிதாக்கி மறுரூபமாவோம். மேலும், இப்படி நாம் வேடம் போடுவது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்பதனையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். காரணம், நமது ஆவிக்குரிய பக்தி காரியங்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது; நமது வேடமிடுதலையும் பார்க்கின்றது. எனவே இப்படி நாம் வேடமிடுவது கிறிஸ்துவுக்கு நாம் நமது நடக்கையால் செய்யும் அவமானமாகும்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,247                      💚 ஜூலை 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." ( சங்கீதம் 59 : 16 )

இன்றைய தியான சங்கீத வசனம்,  தாவீதைக் கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது அதுகுறித்து அறிந்த தாவீது பாடியது என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." என்று தாவீது இதில் குறிப்பிடுகின்றார். 

மட்டுமல்ல, இந்த நெருக்கடியிலும், "நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்" என்று கூறுகின்றார்.  தேவன் வல்லமையான காரியங்கள் தனக்குச் செய்வார் என்று தாவீது உறுதியாக நம்பினார். எனவே உயிர்போகக்கூடிய சூழ்நிலையான இக்கட்டான நிலையிலும்  காலையிலேயே  தேவனுடைய வல்லமையினைப் புகழ்ந்து பாடுவேன் என்று குறிப்பிடுகின்றார். 

நமக்கு இது மிகவும் கடினமான காரியம். காரணம், நமது வீட்டில் சில இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் துணிந்து விசுவாசமாக ஜெபிக்கவோ மகிழ்ச்சியாக தேவனைப் புகழ்ந்து பாடவோ முடிவதில்லை. ஆனால் தாவீது தனது இருதயத்தை இதற்குப் பக்குவப்படுத்தியிருந்தார். 

புதிய ஏற்பாட்டில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டு கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் புகழ்ந்து பாடியது இதுபோன்ற அனுபவதால்தான். ஆனால், தேவன் அவர்களை அதிசயமாகத் தப்புவித்தார். 

எனவே அன்பானவர்களே, நாம் நம்மால் முடிந்த மட்டும் இதனை பயிற்சியெடுப்போம். தாவீதைப்போல, பவுலைப்போல  நம்மால் இப்படித் தேவனைப் புகழ முடியவில்லையென்றாலும் நாம் விசுவாசத்துடன் அமைதியாக இருந்தாலே போதும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் தேவனுக்கு எதிராக கோபம்கொண்டு முறுமுறுக்காமல் இருக்கப் பழகுவோம். தேவனுக்கு எதிராக முறுமுறுத்து பாவம் செய்துவிடக்கூடாது. "நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்" ( சங்கீதம் 4 : 4 )

படுக்கையில் அமர்ந்து தேவனோடு பேசும் அனுபவம் நம்மைப் பல இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கும். மன அமைதியும், தேவன்மேல் விசுவாசமும் அதிகரிக்கும்.  எனவே அன்பானவர்களே, இக்கட்டு, துன்பங்கள் நம்மை நெருக்கும்போது வாயினால் துதித்துப் பாடமுடியவில்லையானாலும்  நாம் தேவனது வல்லமையைப் இருதயத்தில்  பாடி, காலையிலே அவரது கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவோம்; ஆம் அன்பானவர்களே, நமக்கு நெருக்கமுண்டாகும் நாளிலே அவரே நமக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமாவார்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,248                      💚 ஜூலை 10, 2024 💚 புதன்கிழமை 💚

"தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 )

இந்த உலகத்திலுள்ள எந்த ஆத்துமாவும் அழிந்து பாதாளத்துக்குப் போகவேண்டுமென்பது தேவனது சித்தமல்ல; மாறாக, எல்லோரும் நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்கவேண்டுமென்பதே அவரது சித்தம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3 : 16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போஸ்தலரான பேதுருவும் இதனை, "...........ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் நமது தவறான பாவச் செயல்களைக்கண்டு கோபம்கொண்டு  நம்மைத் தண்டிக்கவேண்டுமென்று விரும்பாமல்  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து இயேசுவை உலகில் அனுப்பினார். 

"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." ( யோவான் 3 : 17, 18 )

தேவன் நம்மைத்  தமது கோபத்திலிருந்து தப்புவிக்க இயேசு கிறிஸ்து எனும் ஒரே வழியைத்தான்  நியமித்துள்ளார். எனவே, அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான். ஆனால் அவரது பெயரில்  விசுவாசமில்லாதபடி வாழ்பவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. விசுவாசிக்கிறேன் என்று நாம் வாயினால் சொன்னால் போதாது; மாறாக, இருதயத்தில் விசுவாசித்து மனப்பூர்வமாக அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டும். 

"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9, 10 )

இயேசு கிறிஸ்துத் தன்னைத் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அவரது பூரண சித்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்ததால் மனிதர்களது பாவங்களை மன்னிக்கும் இந்த மேலான மகிமையைப் பெற்றுள்ளார். எனவே அன்பானவர்களே, நாம் இதுவரை பாவத்தில் வாழ்ந்திருந்தால் நமது பாவ வாழ்கையினைக்குறித்துக் கவலைகொள்ளாமல் கிறிஸ்துவிடம் திரும்புவோம். அவரது இரத்தத்தால் கழுவப்படுமாறு மன்னிப்புவேண்டி  நம்மை அவருக்கு  ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்றுதான்  நியமித்துள்ளார். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,249                      💚 ஜூலை 11, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." ( 1 சாமுவேல் 2 : 8 ) மற்றும் (சங்கீதம் 113:7, 8)

அன்பானவர்களே, நமது தேவன் பல்வேறு நிலைகளில் மனிதர்களை வாழவைத்திருந்தாலும் அவர் எப்போதும் எளியவர்களை நோக்கிப்பார்ப்பவராகவும் அவர்களுக்கு உதவுபவராகவும் இருக்கின்றார். எளியவர்கள் என்று கூறுவதால் நாம் பொருளாதார எளிமையை மட்டும் எண்ணிவிடக்கூடாது; மாறாக, ஆவிக்குரிய, மனதின் உள்ளார்ந்த எளிமையையே இன்றைய தியான வசனம்  குறிக்கின்றது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனை, "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 ) என்று கூறுகின்றார்.

அன்னை மரியாள் இதனை உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்...."( லுூக்கா 1 : 48 ) என்று. ஆம் அன்பானவர்களே, எளிய அடிமை மனநிலையுள்ளவர்களை தேவன் நோக்கிப்பார்க்கின்றார். 

இப்படியே நாம் தாவீதையும் பார்க்கின்றோம். அற்பமாக ஆடு மேய்பவராக இருந்த தாவீதைத் தேவன் அவனது எளிய மனதினைக்கண்டு உயர்த்தினார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." என்று வாசிக்கின்றோம்.

அவர் அப்படி எளியவர்களை நோக்கிப்பார்ப்பது மட்டுமல்ல, அவர்களைத் துன்மார்க்கரின் கைகளுக்குத் தப்புவிக்கிறவராகவும் இருக்கின்றார். தாவீதைப் பல்வேறு முறை பல்வேறு வழிகளில் இப்படித் தேவன் தப்புவித்தார்.  மேலும், எளியவர்களின் சந்ததியையும் தேவன் ஆசீர்வதிக்கின்றார். "எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்." ( சங்கீதம் 107 : 41 )

தேவன் இப்படி ஏன் எளியவர்களை நோக்கிப்பார்க்கின்றார் என்றால் அப்படி எளியவர்களுக்கு அதிகமான தேவ கிருபையை அளிக்கவே. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்பதால் அவர்கள் தேவ கிருபையினை அனுபவிப்பதில்லை. "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 )

இதனை கொலோசெய சபையினருக்கு உணர்த்தவே அப்போஸ்தலரான பவுல் அவர்களுக்கு எழுதும்போது, நீங்கள் தயவையும், மனத்தாழ்மையையும் சாந்தத்தையும், பொறுமையையும்    தரித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.  "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு....." ( கொலோசெயர் 3 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழும்போது நிச்சயமாக தேவன் நமது தாழ்நிலையிலிருந்து உயர்த்துவார். மட்டுமல்ல, பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுவார். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,250                      💚 ஜூலை 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்." ( 1 கொரிந்தியர் 1 : 9 )

பிதாவாகிய தேவன் எதற்காக நம்மைத் தேர்ந்துகொண்டாரென்றால் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் ஐக்கியமாக இருப்பதற்காக என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது. அப்படி கிறிஸ்துவோடு ஐக்கியமாகும்போது நாம் பிதாவாகிய தேவனோடும் ஐக்கியமாகின்றோம். 

இதனையே இயேசு கிறிஸ்துவும்  "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று ஜெபித்தார்.

மனிதர்கள் பரிசுத்தமுள்ள பிதாவாகிய தேவனிடம் தங்களாகச் சேரமுடியாது. காரணம் நமது பாவங்கள். பாவமனிதன் பரிசுத்தமான தேவனிடம் சேரமுடியாது. அந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் பிதாவாகிய தேவனிடம் பேசமுடியும். இதற்காகவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்தார். 

நமது பாவங்களுக்கான பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவரே சிலுவையில் நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 ) என்று கூறினார்.

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசமில்லாமல் மக்கள் மீட்படைய முடியாது. அதன்மூலம் மட்டுமே நாம் பிதாவோடும் அவரது குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்க முடியும். அப்படி நாம் ஐக்கியமாக இருப்பதற்கு நம்மை அழைத்த பிதாவாகிய தேவன் உண்மையுள்ளவர் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது அவர் கூறியுள்ள தமது வார்த்தையை மாற்றமாட்டார் என்று பொருள்.

எனவேதான் நாம் சிலுவையைப்பற்றி மேன்மை பாராட்டுகின்றோம். ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பாமல், பாவங்களோடு தொடர்நது வாழ விரும்புகின்றவர்கள் சிலுவையை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், அப்படி எதிர்த்து நிற்பவர்கள் தேவனால் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது. "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 )

தேவனுடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பிதாவாகிய தேவனோடு ஐக்கியமாக இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.  அப்படி நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். எனவே நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவை கழுவப்பட மன்றாடுவோம்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,251                      💚 ஜூலை 13, 2024 💚 சனிக்கிழமை 💚

"மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்." ( மத்தேயு 10 : 32 )

இன்றைய தியான வசனம் நம் எல்லோரும் அடிக்கடி வாசித்துக் கேட்ட வசனமாகும். இந்த வசனம் அறிக்கைபண்ணுதல் எனும் வார்த்தையை வலியறுத்துகின்றது. பொதுவாக எல்லோரும் வாயினால் இயேசுவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதும் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்று கூறுவதும்தான் அறிக்கையிடுதல் என்று எண்ணிக்கொள்கின்றனர். சிலர் இதனை எல்லோரும் அறிய மக்கள் முன்னால் கூறுவது என எண்ணிக்கொள்கின்றனர். 

ஆனால், அறிக்கைபண்ணுதல் என்பது நமது வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்வதைக் குறிக்கின்றது. காரணம், இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று கூறும் பலரும், போதிக்கும் பலரும் வாழ்க்கையில் சாட்சியற்ற வாழ்க்கை வாழும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம். குறிப்பாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரது செயல்கள் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்களிடம் கிறிஸ்தவத்தைக் குறித்துத் தவறான ஒரு கண்ணோட்டத்தையே கொடுக்கின்றது. 

மனுஷர் முன்பாக கிறிஸ்துவை  அறிக்கைபண்ணுகிற சாட்சி வாழ்க்கை வாழும்போது அவர்களைக்குறித்து நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் என்கின்றார் கிறிஸ்து. அதாவது, வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம்.

ஒரு மிகப்பெரிய வேலைக்கு நாம் விண்ணப்பித்து நேர்காணுதலுக்காக நிற்கும்போது அங்கு அந்த கம்பெனி இயக்குனருக்கு  அருகில் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் நமது ஊரைச்சார்ந்த ஒருவர் நின்றுகொண்டு, "ஐயா, இவரை எனக்கு நன்கு தெரியும். நல்ல மனிதர், திறமையாளர், இந்த வேலைக்குப் பொருத்தமானவர், இவருக்கு இந்த வேலையைக் கொடுக்கலாம்" என்று நமக்காக பரிந்து பேசுவாரானால் அது நம்மைக்குறித்து அவர் அறிக்கையிடுதலாகும். 

நாம் மேலே பார்த்த உதாரணத்தில் நம்மைப் பரிந்துரைசெய்த அந்த  நபர் அவரை நாம் ஊரில் மற்றவர்கள்முன் புகழ்ந்து பேசியதால் நம்மைப் பரிந்துரை செய்யவில்லை. மாறாக, நமது செயல்பாடுகளை அவர் அறிந்திருந்தாலும் நமது தனிப்பட்ட குணங்களை அறிந்திருந்தாலும் நமக்காகப் பரிந்து பேசினார்.  

இதுபோலவே  நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு முன்பாக நம்மைக்குறித்து அறிக்கையிடுவேன் என்கின்றார். அன்பானவர்களே, இதனால்தான் நாம் தேவனுக்குகேற்ற சாட்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்றைய தியான வசனத்தைத்த தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்." ( மத்தேயு 10 : 33 )

அதாவது சாட்சியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் பிதாவின்முன்னால் நிற்கும்போது அவர், "ஐயோ, இவரை எனக்குத் தெரியவே தெரியாது" என்பார். 

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 26, 27 )

கிறிஸ்துவால் நம்மைக்குறித்து நல்ல அறிக்கைபண்ணக்கூடிய வாழ்க்கை வாழ முயலுவோம்; அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,252                      💚 ஜூலை 14, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்." ( 1 கொரிந்தியர் 11 : 9 )

சில இடதுசாரி சிந்தனைவாதிகளும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களும் தங்களை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களும் இன்றைய தியான வசனத்தைத் தவறுதலாக மேற்கோள்காட்டிப் பேசுவதுண்டு. "பைபிளில் பெண் அடிமைத்தனம்" எனும் தலைப்பில் ஒரு   கட்டுரையினை வாசித்தேன்.    அதில்  இன்றைய       தியானவசனத்தை         ஒருவர்  மேற்கோள்காட்டிக் கட்டுரை  எழுதியிருந்தார். 

கூறப்படும் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒரு குறிப்பிட்டப் பகுதியைமட்டும் துண்டாக எடுத்து விளக்குவது அறிவுபூர்வமானதல்ல. இது எப்படியிருக்கின்றது என்றால், "ஒருமுறை,  பெரியார் மூடநம்பிக்கை கொண்டவர்கள் கூட்டத்தில்  இருந்தார். அப்போது, ஒருவர் அவரிடம் கடவுள் குறித்துச் சில கேள்விகளைக் கேட்டார் .........." எனும் கட்டுரைப் பகுதியை துண்டாக்கி, "பெரியார் மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட்டத்தில் இருந்திருக்கிறார்" அப்படியிருக்க அவரை மூட நம்பிக்கையை எதிர்த்தார் என்று எப்படிக் கூறலாம் என்று கூறுவதுபோல இருக்கின்றது. 

காரணம் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் எழுதுகின்றார், "ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 11 : 11, 12 )

அப்படியானால் இன்றைய தியான வசனத்தை அவர் ஏன் எழுதினார்? முதலில் தேவன் ஆதாமைத்தான் படைத்தார். உலகிலுள்ள அனைத்தையும் அவர் ஜோடி ஜோடியாக உண்டாக்கியிருந்தார். ஆனால் ஆதாம் மட்டும் தனித்திருந்தான். எனவே,  "தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்." ( ஆதியாகமம் 2 : 18 ) என்று கூறி ஏவாளைப் படைத்தார். ஏவாளை ஆதாமைவிடத் தாழ்வாகப் படைத்தார் என்று கூறப்படவில்லை. மாறாக, அவனுக்கு ஏற்ற துணையாகப் படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில், "புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள்." என்று கூறுகின்றார்.  அதாவது,  ஆதாம் தனியாக இருப்பதால் அப்படி இருக்கக் கூடாது என்பதற்காக அவனுக்காக பெண்ணைப் படைத்தார் என்று கூறுகின்றார். அவனுக்கு அடிமையாகவோ அவன் பயன்படுத்தும் பொருள்போலவோ ஏவாளைப் படைக்கவில்லை. 

கிறிஸ்தவர்களில்கூட சிலர் இந்த சத்தியம் தெரியாமல் போதிக்கின்றனர். இப்படிப் போதிக்கும் பல ஊழியர்கள் வீடுகளில் தங்கள் மனைவியை அடிமைப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். இப்படியே, பெண் விடுதலை பேசும் பலர் வீடுகளில் தங்கள் மனைவிகளை அடிமைகளாகவே நடத்துகின்றனர். மட்டுமல்ல, மற்ற பெண்களுடன் தகாத உறவிலும் வாழ்கின்றனர்.  எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் இந்தத் தவறான போதனைகளினாலும் பெண் விடுதலை என்று கூறி அலையும் போலி பெண்ணினவாதிகளின் பேச்சுகளாலும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.  

"அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்." ( 1 பேதுரு 3 : 7 ) என்கின்றார் பேதுரு. ஆம், தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவே கிறிஸ்தவம் போதிக்கின்றது.  


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,253                      💚 ஜூலை 15, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்." ( ஓசியா 6 : 6 )

நமது தேவன் மனச்சாட்சியற்ற சில மனிதர்களைப்  போன்றவரல்ல; மாறாக, அவர் அன்பும் இரக்கமும் நீதியுமுள்ள தேவன். அந்தக்கால யூதர்கள் வேத அறிவு நிரம்பியவர்களாக இருந்தாலும் தேவன் விரும்பும் இரக்கமும் தேவனை அறியும் அறிவும் இல்லாமலிருந்தனர். எனவே அவர்கள் ஆலய வழிபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத் தவிர இரக்கமோ அன்போ இல்லாதவர்களாக இருந்தனர். 

எனவேதான் அவர்கள் முப்பத்தியெட்டு ஆண்டுகள் நோயுற்று அவதியுற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவினால் அற்புதமாகக்  குணமானபோது அதனைப் பாராட்ட மனமில்லாமல் இயேசு கிறிஸ்து அந்தக் குணமாக்குதலை ஓய்வுநாளில் செய்ததற்காக அவர்மேல் குற்றஞ்சாட்டினர். (யோவான் 5 ஆம் அதிகாரம்) காரணம் அவர்களிடம் சகோதர அன்பில்லாமலிருந்தது.

ஆம் அன்பானவர்களே, பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், தேவன் விரும்புகிறார்.  இன்றைய தியான பழைய ஏற்பாட்டு வசனத்தை இயேசு கிறிஸ்துவும்  பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பாவிகளுடன் அவர் விருந்துண்பதை யூதர்கள் விமர்சித்தபோது, "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்." ( மத்தேயு 9 : 13 )

இதுபோலவே பயிர் நிலத்தின் வழியே நடந்து சென்றபோது  இயேசுவின் சீடர்கள் பயிரைப்  பறித்துக் கைகளால் நிமிட்டித் தின்பதைக்கண்டு அவரை விமர்சனம் செய்தனர். அப்போது அவர், "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறினார். 

அன்பானவர்களே, இதுபோலவே இன்று பல ஊர்களில் பணக்கார ஊர்த்தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும்  இருக்கின்றனர். உதாரணமாக, ஊர்த்திருவிழாக்கள் கொண்டாடும்போது தேவையில்லாத ஆடம்பரச் செலவினங்களுக்காக  திருவிழா வரியை மிக அதிகமாக்கி வசூலித்து ஊரிலுள்ள ஏழைகளை அவமதிக்கின்றனர். இவர்களைப்பார்த்து தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார், "பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்."

எனவே நாம் தேவனுக்காக என்று எதனைச் செய்தாலும் முதலில் இரக்கத்தைக் கடைபிடிப்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அந்த இரக்கம் ஒருவருக்கு எப்போது வரும்? அது தேவனை அறியும் அறிவு பெறும்போதுதான் வரும். எனவேதான் நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஆம், பலியையல்ல; இரக்கத்தையும் தேவனை அறியும் அறிவினையுமே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

இப்படி இரக்கமும் தேவனை அறியும் அறிவும் உள்ளவனே மெய்யான கிறிஸ்தவன். மற்றவர்கள் அனைவரும் பெயர் கிறிஸ்தவர்களே.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,254                      💚 ஜூலை 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 15 )

இரட்சிப்பு அனுபவத்தைப் பெறும்போது தூய மெல்லிய வெண்ணாடை  ஒருவருக்கு அளிக்கப்படுகின்றது. இந்த வெண்ணாடையை அசுத்தம்செய்யாமலும் கிழிந்துபோகாமலும் காத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட அனுபவத்துக்குப்பின்பும் நாம் பாவம் செய்வோமானால் பரிசுத்தவான்களுடைய நீதியின் அடையாளமான இந்த மெல்லிய வெண்ணாடையை அச்சுதப்படுத்துகின்றோம் அல்லது கிழித்துவிடுகின்றோம். எனவே இந்த மெல்லிய ஆடையை நாம் கிறிஸ்து வரும்வரைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். 

இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்."

மேலும் நாம் வாசிக்கின்றோம், "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 5 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது. எனவேதான், "இதோ, திருடனைப்போல் வருகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும் கூறினார், "அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்." ( லுூக்கா 12 : 40 )

மேலும் இயேசு கிறிஸ்து திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒரு மனிதனைக்குறித்துக் கூறிய  அழகிய உவமை மூலம் இதனை விளக்கினார். "விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22 : 11 - 13 )

எனவே, "நான் இரட்சிக்கப்பட்டேன், முழுக்கு ஞானஸ்நானம் எடுத்துள்ளேன், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொண்டு பாவ வாழ்க்கையும் வாழ்வோமானால்  நாம் ஆடை கிழித்து நிர்வாணமாய்க் காணப்படுபவர்களாகவே  அவர்முன் இருப்போம். எனவே, விழித்துக்கொண்டு, கிறிஸ்துவின் வருகை எப்போது இருந்தாலும் அதற்கு ஆயத்தமாக இருப்போம். நம் வஸ்திரங்களைக் காத்துக்கொள்வோம்; பாக்கியவான்களாக வாழ்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,255                      💚 ஜூலை 17, 2024 💚 புதன்கிழமை 💚

"இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." ( யோவான் 15 : 15 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவாகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்துள்ள புதிதான தகுதியைப் பார்க்கின்றோம். அதாவது நாம் இனி அவரது ஊழியக்காரர்கள் அல்ல; மாறாக நண்பர்கள் என்கின்றார். 

ஒரு எஜமானின் வேலைக்காரன் அந்த எஜமான் சொல்வதை மட்டும் செய்கின்றவனாக இருப்பான். அந்த வேலைக்காரனுக்கு எஜமான்  ஏன் ஒரு காரியத்தைச் செய்யச்சொல்கின்றான் என்பது தெரியாது. உதாரணமாக, ஒரு எஜமான் வேலைக்காரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துத் தபால் அலுவலகம் சென்று அதனை அனுப்பி வருமாறு அனுப்புகின்றான் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலைக்காரனுக்கு அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது எனும்  காரியம் தெரியாது. ஆனால் எஜமான் சொல்கிறபடி அதனை அனுப்பிவிட்டு வருவான். இதுதான் வேலைக்காரனுக்கும் எஜமானுக்குமுள்ள உறவு. 

ஆனால் இதே ஒரு நண்பனானால், அந்த நண்பனிடம் அவன் அந்தக் கடிதம் எதற்காக அனுப்பப்படுகின்றது, அந்தக் கடிதம் அனுப்பப்படும் காரியம் நிறைவேறினால் என்ன நடக்கும் என்பதனையெல்லாம் தெளிவாக விவாதித்திருப்பான். ஆம், இதுதான் வேலைக்காரனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசம். மட்டுமல்ல, ஒருவன் தனது  உண்மை நண்பனிடம் எல்லாக்  காரியங்களைக் குறித்தும் பேசி தெளிவுபடுத்துவான். நமது குடும்பத்தினரிடம் கூறாதக்  காரியங்களைக்கூட நண்பர்களிடம் நாம் பகிர்ந்துகொள்ளலாம். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவர் நம்மை எவ்வளவு மேன்மையாக வைத்துள்ளார் பாருங்கள்.  அவரோடு ஒரு நண்பனைப்போல நெருக்கம் வைத்துக்கொள்ளும்போது பரலோக ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தருவார்.  

இதனைக் கூறும்போது ஒரு சகோதரன் கூறிய கனவு நினைவுக்கு வருகின்றது. அந்தச் சகோதரன் முகநூல் (Facebook) பார்ப்பதில் ஆர்வமுள்ளவன். அதிகநேரம் முகநூல் பார்த்துக்கொண்டிருப்பான். அதனால் ஜெபநேரம் குறைந்துபோய்விட்டது. ஒருநாள் அந்தச் சகோதரர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் உலகமக்கள் பலர் வேடிக்கைப் பார்க்கும் ஒரு அழகிய மலைப் பள்ளத்தாக்கினை மக்களோடு அவரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து அந்தச் சகோதரனின் தோள்களைத் தட்டி, "இங்கே வா, என்று கூப்பிட்டார்" அந்தச் சகோதரனை அழைத்த அந்த மனிதர்  குறுகிய தாடி வைத்து வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்த உயரமான ஒருவர்.  

அந்தச் சகோதரர் அவரோடு சென்றார். அவர் அவரை அருகிலிருந்த ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பல பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த மனிதர் இரண்டு நாற்காலிகளைத் தனியாக எதிர் எதிரே போட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டார். பின்னர் அந்தச் சகோதரரை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லி, "நாம் பேசுவோம்" என்றார்.

அன்பானவர்களே, இந்தக் கனவு மூலம், 'உலக காரியங்களில் மற்றவர்களைப்போல் நீ வேடிக்கைப்  பார்த்து நேரத்தைத் தொலைக்காதே, என்னோடு தனி ஜெபத்தையே  நான் விரும்புகிறேன்' என்று தேவன் பேசுவதை அவர் உணர்ந்துகொண்டார். ஆம், தேவன் ஒரு நண்பனைப்  போல நம்மோடு பேசி உறவாட விரும்புகின்றார். இப்படி தேவனைத்  தனிப்பட்ட உறவில் ஒரு நண்பனாக நாம் உணர்ந்து கொள்வோமானால்,  "என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்." என்று அவர் கூறியபடி பல உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தித் தருவார். 

ஆம், அன்பானவர்களே, நாம் அடிமைகளோ வேலைக்காரர்களோ அல்ல; மாறாக அவரது நண்பர்கள். எனவே நமது ஜெபங்களில் ஓர் நண்பனிடம் பேசுவதுபோல அவரிடம் பேசலாம். குறிப்பிட்ட ஒரே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஜெபமல்ல; அது பிற மதத்தினரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட தேவையில்லாத விஷயம்.  தேவனிடம் நமது நண்பரிடம் பேசுவதுபோல பேசி ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்; அந்த அனுபவம் ஆவிக்குரிய மேலான காரியங்களை நமக்கு வெளிப்படுத்தித் தரும்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,256                      💚 ஜூலை 18, 2024 💚 வியாழக்கிழமை 💚

"உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 )

இன்றைய தியான வசனம் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். இந்த ஜெபத்தில் அவர் பிதாவிடம் அவரது சத்திய வசனத்தால் நம்மைப் பரிசுத்தமாக்கும்படி வேண்டுதல் செய்கின்றார். ஆம் அன்பானவர்களே, பரிசுத்தரான கர்த்தரது சொற்கள் பரிசுத்தமானவைகள். அவையே நம்மைச் சுத்தமாக்க முடியும். 

"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு ஒப்பான  சுத்தச் சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 ) என்று வாசிக்கின்றோம். வேதாகமத்தை நாம் வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவம் இதுதான். நாம் நமது முகத்தை அழகுபடுத்த நம்மைக் கண்ணாடியில் பார்க்கின்றோம். அது நமது முகத்திலுள்ள சிறு அழுக்கையும் நமக்குக் காண்பித்துவிடும். அதுபோன்றவையே தேவனது வார்த்தைகள்.  அவை நமது அகத்தின் அழுக்கை நமக்கு எடுத்துக்காட்டி நாம் நம்மைத் திருத்திக்கொள்ள வழிகாட்டும்.  

தேவனது வார்த்தைகள் எப்படி நம்மைச் சுத்தப்படுத்துகின்றன என்பதனை நாம் எபிரெயர் நிரூபத்தில் வாசிக்கின்றோம். "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

அதாவது ஜீவனுள்ள தேவனது வார்த்தைகள் நமது ஆவி, ஆத்துமா,  சரீரம், மற்றும் சரீரத்திலுள்ள ஒவ்வொரு அவயவங்களையும் தனித்தனியே  குத்திப்பிளந்து நமது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவ வசனங்களை நாம் நிதானமாக வாசிப்போமானால் நமது எந்தப் பகுதியில் குறை இருக்கின்றது என்பதனை அது நமக்கு எடுத்துக்காட்டும். 

தேவ மனிதனாகிய மோசேயிடம் தேவன் கூறியதை அவர் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். "நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக." ( உபாகமம் 11 : 19 - 21 )

ஆம், தேவனது வார்த்தைகள் எப்போதும் நமது கண்முன் இருக்கவேண்டியது அவசியம். இன்று பல்வேறு இடங்களில் தேவ வார்த்தைகள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளதையும் வசன ஸ்டிக்கர்களையும் நாம் பார்க்கின்றோம்,  அவற்றை பயன்படுத்துகின்றோம். காரணம், அவை எந்த வழியிலாயினும் மனிதர்களைச்  சென்று சேரவேண்டும், அவர்களது இருதயத்தில் பதிந்து வாழ்க்கை மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவேதான். 

மேலும், இறுதிநாளில் தேவ வசனமே நம்மை நியாயம்தீர்க்கும். ஆம், தேவ வசனத்தின்படியே நியாயத்தீர்ப்பு. "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.' ( யோவான் 12 : 48 ) என்கிறார் இயேசு கிறிஸ்து. 

எனவே, தேவ வார்த்தைகளை நாம் தினமும் வாசித்து நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவனுடைய சத்திய வசனமே நம்மைப் பரிசுத்தமாக்கும். ஆம், அவருடைய வசனமே சத்தியம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,257                      💚 ஜூலை 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்; கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு என்னென்ன பலன்களைத் தந்துள்ளது என்பதனை அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதியுள்ள வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.

இந்த வசனத்தின்படி, முதலாவதாக இயேசுவின் மரணம் நமது எல்லா அக்கிரமங்கள், பாவங்களிலிருந்து நம்மை மீட்கின்றது. இரண்டாவது, நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றுகின்றது. மூன்றாவது, நற்செயல்கள் செய்ய நம்மைத் தகுதிப்படுத்துகின்றது, இறுதியில் தேவன்மேல் நாம் பக்தி வைராக்கியம் கொள்ளச்செய்கின்றது. 

"அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். இப்படி இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்படுகின்றோம். இந்தக் கழுவுதல் அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் தான் ஏற்படுகின்றது. இப்படிக் கழுவப்பட்டு நாம் அவரோடு இணைக்கப்படுகின்றோம்.

இப்படி இணைக்கப்பட்டப் பின்னர்தான் நம்மால் நற்செயல்கள் செய்யமுடியும். இதனையே இன்றைய வசனத்தில் நாம் "சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று வாசிக்கின்றோம். இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

ஆம் அன்பானவர்களே, நற்செயல்கள் செய்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டுமானால் நாம் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்று பலர் நற்செயல்கள் பல செய்கின்றனர். நற்செயல்கள் செய்யும் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் நல்லது செய்யும் இவர்களில் பலரும் நல்லவர்களாக இருக்க முடியவில்லை. காரணம், கிறிஸ்துவோடு இணைக்கப்படாத வாழ்வு. 

எனவே நாம் மெய்யாகவுமே நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது இரத்தம்  நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொள்ளவேண்டும், நாம் அவரது சொந்த ஜனங்களாகவேண்டும். இப்படி நம்மை பாவங்களிலிருந்து கழுவி, அவரோடு ஒப்புரவாக்கி நம்மை நற்செயல் புரிய வைக்கவே கிறிஸ்து சிலுவையில் மரித்து உயிர்த்தார்.  நாம் செய்த எந்தப் பாவமாக இருந்தாலும் அவரிடம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நாம் வேண்டுவோமானால் அவர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.

ஆம் அன்பானவர்களே, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,258                    💚 ஜூலை 20, 2024 💚 சனிக்கிழமை 💚

"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." ( 2 கொரிந்தியர் 4 : 4 )

சுவிசேஷமானது தேவனுடைய சாயல் என்று இன்றைய தியான வசனம் சொல்கின்றது. அந்தச்  சுவிசேஷம் கிறிஸ்துவின் மகிமையான ஒளியாகவும் இருக்கின்றது. அந்த ஒளியை இந்த உலக மக்களது உள்ளத்தில் ஒளிரச்செய்யாதபடி இந்த  இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் என்று இந்த வசனம் கூறுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தின் தேவன் என்பவன் சாத்தான் (யோவான் 14:30)

ஆனால் இந்த ஒளியைத் தேவன் நமது உள்ளத்தில் ஒளிரச்செய்துள்ளார் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

இந்த ஒளியானது நமக்குள் இருப்பதால் நமக்கு அது பெலனைத் தருகின்றது. துன்பங்கள், நெருக்குதல்கள், கலக்கம், மனமுறிவு போன்று எந்தத் துன்பத்தையும் அது நாம் தாங்கும்படியான பெலனைத் தருகின்றது. "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 8, 9 )

இப்படி பெலன் அடையக் காரணம் நமக்குள் வந்திருப்பது உன்னதமான தேவனுடைய ஒளி. எனவேதான் இந்த ஒளியானது நமக்குள் வந்திடாமல் சாத்தான் தடைபண்ணுகின்றான். காரணம், நமது துன்ப நேரங்களில் நாம் தேவனைத் தூஷித்து சாகவேண்டுமென்று சாத்தான் விரும்புகின்றான். 

அன்பானவர்களே, இந்த ஒளி தங்களுக்குள் இல்லாததால்தான் சில வேளைகளில்  பெரிய பெரிய தொழிலதிபர்களும், புகழ்பெற்ற திரைப்பட நடிகை நடிகர்களும், பணம் படைத்த பல செல்வந்தர்களும் நிம்மதியின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

இந்த ஒளியை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே நற்செய்தி அறிவிப்பு உலகினில் நடைபெறுகின்றது. ஆனால் இதனை அறியாதவர்கள் கட்டாய மதமாற்றம் செய்கின்றார்கள் என்று கூப்பாடு போடுகின்றனர்.  கிறிஸ்தவம் உட்பட எந்த மதமும் மனிதனை இரட்சிக்காது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஒருவரை மீட்க முடியும். எனவே, கிறிஸ்தவம் இதற்கான வழியை மக்களுக்குக் காண்பிக்கும் ஒரு மார்க்கம் என்று கூறலாம்.  

இந்த மகிமையான ஒளியைக் குறித்துக் கேள்விப்படுவது மட்டும் போதாது, மாறாக அந்த ஒளி நமது இருதயத்தில் பிரகாசிக்க இடம்தரவேண்டும். அப்போதுதான் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை நம்மில் தோன்றப்பண்ணுவார். 

முரண்பாடோ வெறுப்போ இல்லாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொவோம்; அவரது ஒளியை நம்முள் பெற்று துன்பங்களையும் பாடுகளையும் சகிக்கப் பெலன் பெறுவோம்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,259                    💚 ஜூலை 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 31 )

வேத அடிப்படையில் பார்ப்போமானால், மீட்பு அனுபவம் பெற்ற விசுவாசிகளின் கூட்டமே சபைகள். ஆனால் இன்று இந்த நிலைமை மாறி, குறிப்பிட்டக்  கிறிஸ்த போதனைகளைப் போதிக்கும் ஆலயங்களில் கூடும் மக்களையும், குறிப்பிட்ட பாஸ்டர்கள், ஊழியர்களை நாடிச் செல்லும் மக்களையும்  சபை என்று கூறிகொண்டிருக்கின்றோம். 

சபை என்பது மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துபவையாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி வழிநடத்தும்போது அங்கு என்ன நடக்கும் என்பதனையே இன்றைய தியான வசனம், "சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின." என்று கூறுகின்றது. 

அதாவது மெய்யான ஒரு சபைகளுக்குச் செல்லும்போது ஒருவருக்குச் சமாதானம் கிடைக்கும். காரணம், அங்கு போதிக்கப்படும் வார்த்தைகள் தேவ வார்த்தைகளாக இருக்கும். தேவ வார்த்தைகளே ஒருவருக்குச் சமாதானத்தைக் கொண்டு வரும். இரண்டாவது, அந்தத் சபைகள் நம்மை பக்திவிருத்தி அடையச் செய்பவையாகவும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வளரச்செய்பவையாகவும் இருக்கும். மூன்றாவது, ஆவியானவர் அளிக்கும் ஆறுதல் அந்தச் சபை மக்களுக்குக் கிடைக்கும். 

ஆனால், இன்றைய பல சபைகளில்  கேளிக்கைக் கூடாரங்களில் பாடலும் நடனமும்  முக்கியத்துவம் பெறுவதுபோல இவைகளே முக்கியத்துவம் பெற்று மெய்யான சத்தியம் புறம்தள்ளப்படுவதைக் காண்கின்றோம்.  இதனால் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் விசுவாசிகளுக்கு மெய்யான சமாதானமோ, அவர்கள் பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தில் வளரும் வாய்ப்போ  பரிசுத்த ஆவியின் ஆறுதலோ இல்லாமலிருக்கின்றது. 

இதனால் விசுவாசிகள் ஒரு சபையைவிட்டு இன்னொரு சபைக்கு ஓடுவதும், ஊழியர்களும் சபைகளும் தங்கள் தவறுகளை உணராமல் ஒருவருக்கொருவர் மாறிமாறிக் குறைகூறி மோதிக்கொள்வதும் நடக்கின்றது. உணவு உட்கொள்ளச் செல்பவர்கள் ஹோட்டலை மாற்றுவதற்குக்  காரணம் ஹோட்டல் சாப்பாடு பிடிக்காததே முக்கிய காரணமாய் இருக்கும் என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளும்போதுதான் இந்த நிலைமைக்கு மாறுதல் உண்டாகும்.   

இன்று வேதாகம அடிப்படையிலான மெய்யான சபைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன. ஆனால் ஊழியர்களும் போதகர்களும் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டனர். எனவே இவர்கள் மக்களைத் தங்களிடம் இழுக்கவேண்டி விதவிதமான நவீன யுக்திகளைக் கையாளுகின்றனர்.  மக்களும் திரைப்பட நடிகர்களைத் தேர்வுசெய்வதுபோல தங்களுக்கு ஏற்ற நவீன ஊழியர்களைத் தெரிந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் விசுவாசி என்று கூறுவதைவிட்டு குறிப்பிட்ட பாஸ்டர்களின் விசுவாசிகளாகிவிட்டனர்.

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களையும் குறிப்பிட்ட சபைகளையும் பார்க்காமல் கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க வேண்டும். நமக்குத் தேவ சமாதானம் அளிக்கும் சபைகள், நாம்  பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் வளர வழிகாட்டும் சபைகள் இவைகளையே நமக்காகத் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய சபைகளை நமக்கு அடையாளம்காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடவேண்டியதுதான் இன்றைய காலத்தின் அவசியம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,260                    💚 ஜூலை 22, 2024 💚 திங்கள்கிழமை 💚

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 )

கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம் என்பது மெய்யாயினும் மற்ற மத மக்களைப்போல நாம் வெறும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் மட்டும் போதாது. எல்லா மதத்தினரும் தங்கள் வழிபடும் தெய்வத்தின்மேல் நம்பிக்கைக் கொண்டுதான் வாழ்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரை  அந்த நம்பிக்கை நம்மைப் பரிசுத்தப்படுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்"  என்று கூறுகின்றார். 

இப்படி நாம் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நம்மிடம் நமது விசுவாசத்தைக் குறித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல  எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று கிறிஸ்தவர்கள் பலரும் கிறிஸ்து தங்கள் வாழ்வில் என்னென்ன அற்புதங்கள் செய்தார் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். அப்படிக் கிறிஸ்துவைக் குறித்துக் கூறும் பல சாட்சிகள், புகை பிடிப்பதை விட்டுவிட்டேன், வெற்றிலை, குடிப்பழக்கம்  இவற்றிலிருந்து விடுதலையானேன் என்பதுபோலவே இருக்கின்றன. அன்பானவர்களே, இதுபோன்ற சாட்சிகளை எல்லா மதத்தினரும் கூறமுடியும். 

உண்மையாகக் கூறப்போனால், கிறிஸ்துவால் வெற்றிலை, குடி, புகைபிடித்தல் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தேன் என்று கூறுவது மேலான சாட்சியே அல்ல. காரணம், இயல்பிலேயே இந்தப் பழக்கவழக்கங்கள் எதுவும் இல்லாத பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மட்டுமல்ல, இவற்றைச் சரியான மருத்துவ சிகிர்சை மூலமும், ஆற்றுப்படுத்தல் (Counselling) மூலமும் நிறுத்திவிடமுடியும். மெய்யான மாற்றம் என்பது  நமது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றமே; நமது தனிப்பட்டக் குணங்களில் ஏற்படும் மாற்றமே. அதனைக் கிறிஸ்து இயேசு மூலம் மட்டுமே  நாம் அடைந்திட முடியும். 

எனவே, நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு நமது விசுவாசத்தைக் குறித்து நாம் அளிக்கும் சாட்சிகள் வேத வசனத்தின் அடிப்படையில் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4 : 6 ) என்று கூறுகின்றார். 

எனவே நாம் வேத வசனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கவேண்டியது அவசியம். அப்படி அறிந்து வைத்துக்கொண்டு நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு  சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும்.  

எனவே, நாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேவையில்லாத காரியங்களில் கவனம் செலுத்திடாமல் வேத வசனங்களை உணவுபோல உட்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும். இப்படி நாம் உட்கொள்ளும் வசனங்கள் நமக்கு மற்றவர்களுக்குப் பதில்சொல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். மட்டுமல்ல, தேவையில்லாத உப்புச் சப்பற்ற சாட்சிகள் போல இல்லாமல் இந்த வசனங்கள் மற்றவர்களது இருதயத்தில் இறங்கி கிரியை செய்யும்.  அவர்களும் மெய்யான தேவனை அறியச்செய்யும். காரணம், அவை உயிருள்ள தேவனது வார்த்தைகள்.

எனவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாம் வேதாகமத்தை வாசிக்கவேண்டியது அவசியம். அட்டவணைப் போட்டு இத்தனை நாட்களுக்குள் வேதாகமத்தை வாசித்து முடிக்கவேண்டுமென்று எண்ணாமல் நிதானமாகவும், தேவனை அறியும் ஆர்வமோடும்  ஆவியானவரின் துணையோடும்  வேதத்தைப் படித்து இருதயத்தில் வசனங்களைப் பாதுகாப்போம். நம்மிடம் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிப்போம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,261                    💚 ஜூலை 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."  (1 கொரிந்தியர் 15:58)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வை நமக்கு வாக்களித்துள்ளார். அந்த இலக்கை அடைந்திடவே நாம் ஆவிக்குரிய வாழ்வைத் தொடருகின்றோம். நித்திய ஜீவன் என்பது அழிவுக்கேதுவான நமது உடல் மறுரூபமாக்கப்பட்டு அழியாமையையும், சாவாமையையும் தரித்துக் கொண்டு பிதாவின் ராஜ்ய மகிமையினுள் நித்தியகாலமாய் வாழ்வதைக் குறிக்கின்றது  

இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்துக்கு முன்பு விளக்குகின்றார். இப்படி, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.  அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்."  (1 கொரிந்தியர் 15: 53, 54) என்கின்றார். 

இப்படிப்பட்ட மகிமையான எதிர்காலம் நமக்கு இருப்பதால், "எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும்,   அசையாதவர்களாயும்,      கர்த்தருடைய
கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." என்று கூறுகின்றார்.

அதாவது ஆவிக்குரியவாழ்வு வாழ்ந்தாலும்  நாம் ஒருவேளை இன்று பல்வேறு துன்பங்களைச் சுமந்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்தத் துன்பங்களைக்கண்டு கலங்கிடாமல் உறுதிகொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். மட்டுமல்ல, தொடர்ந்து சோர்ந்துபோகாமல் கர்த்தருக்காக நாம் செய்யும் செயல்பாடுகளிலும் நாம் பெருகுகிறவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். 

ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் ஏற்படும்போது ஒருவித சலிப்பு எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு.  ஆனால் அந்தச் சலிப்பு கொஞ்சநாட்களுக்குத்தான் என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்படி எனக்கு சலிப்பே வந்ததில்லை என்று கூறுவோமானால் நாம் பொய்யர்கள். காரணம், வானத்திலிருந்து அக்கினி இறங்கச்செய்து அற்புதங்கள் பல செய்த எலியா சோர்வுற்று மனமடிவுண்டாகி, "ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி," ( 1 இராஜாக்கள் 19 : 4 ) புலம்பியதை நாம் வாசித்துள்ளோம்.

இதுபோலவே மிகப்பெரிய தீர்க்கதரிசியாக யோனாவும் மனம் சோர்வுற்று, "இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்" ( யோனா 4 : 3 ) என்று புலம்பினார். 

ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. இதுபோல, தேவனுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நமக்கும் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். ஆனால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார்.

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய  கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்போமாக. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,262                    💚 ஜூலை 24, 2024 💚 புதன்கிழமை 💚

"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" ( நீதிமொழிகள் 20 : 6 )

இன்றைய தியான வசனம் மனிதர்களது அடிப்படைக் குணத்தைக் குறித்துக் கூறுகின்றது. அதாவது, அற்பப் பெருமைக்காகத் தாங்கள் பிறருக்குச் செய்த உதவிகளைப் பிரச்சித்தப்படுத்துவது.  

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் இப்படித்தான் தானும் தனது மனைவியும் செய்த உதவிகளைப் பெருமையாக எல்லோரிடமும் கூறிக்கொண்டிருப்பார். அதாவது, உண்மையாகத் தான் செய்ததை சற்று மிகைப்படுத்திப் பேசுவார். இப்படி இவர் பேசுவது பொய் என்று தெரிந்தாலும் பலரும் இவரிடம் நேரடியாக எதுவும் கூறுவதில்லை. எனவே இவர் தான் கூறுவதை எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்வார். ஆனால் இவருக்குத் தெரியாமல் இவர் கூறியதை தங்களுக்குள் பேசிச்  சிரித்துக்கொள்வார்கள். 

உண்மையான உதவும் மனநிலையில் ஒருவர் பிறருக்கு உதவும்போது அவர் தன்னைப் பிரச்சித்தப்படுத்த மாட்டார். இன்று பலர் தாங்கள் செய்யும் சில சிறு உதவிகளையும்கூட வீடியோ பதிவுசெய்து முகநூலிலும் இதர சமூக ஊடகங்களிலும் வெளியிடுவதை நாம் பார்க்கலாம். இவர்கள் இப்படிச் செய்வதற்குத் தாங்களே அறியாத உள்நோக்கம் இருக்கும். அதாவது, மக்கள் தங்களை நல்லவர்கள் என்று எண்ணவேண்டும் அல்லது இப்படிச் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று எண்ணுவது.  

தெரு ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரருக்கு காசு கொடுப்பது அல்லது ஏதாவது பொருள் உதவி செய்வது இவற்றைக்கூட இப்படிப் பதிவு செய்து மக்களுக்குத் தெரிவிக்கின்றனர். இதனையே, "மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, இந்த வசனம் இப்படிச் செய்பவர்கள் உண்மையற்றவர்கள் என்று கூறுகின்றது. எனவேதான், "உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" என்ற கேள்வியோடு முடிக்கின்றது இன்றைய வசனம். 

இயேசு கிறிஸ்து இதனைக்குறித்து "ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 2 ) என்று கூறுகின்றார். 

அதாவது, இப்படித் தாங்கள் செய்வதைப் பிரசித்திப்படுத்துபவர்கள் மாயக்காரர் என்கின்றார். மேலும், "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார். நாலுபேர் இவர்கள் சொன்னதை அல்லது செய்ததைப் பார்த்தார்களே அதுதான் இதன்மூலம் இவர்கள் பெற்ற பயன். எனவே, இனிமேல் இவர்கள் தேவனிடம் தங்கள் செயலுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது என்று பொருள். 

மட்டுமல்ல, எப்படித் தர்மம் அல்லது உதவி செய்யவேண்டும் என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறினார்.  "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 )

"நான் இப்படிச் செய்வதை வெளியில் கூறும்போது மற்றவர்களும் இதுபோல உதவிகள் செய்வார்கள்" என்று சிலர் உப்புச் சப்பற்ற காரணத்தைக்கூறி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அன்பானவர்களே, இந்த விஷயத்தில் தேவன் எல்லோருக்கும் மனச்சாட்சியையும்  இரக்கம் அன்பு போன்ற குணங்களையும்  கொடுத்துள்ளார். ஆகவே, அவர்கள் செயலுக்கு அவர்கள் தேவனுக்குக் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள். எனவே, மற்றவர்களைத் திருத்துகிறேன் என்று எண்ணி நாம் படுகுழியினுள் விழுந்துவிடக் கூடாது.  

இப்படிச்  சிறு உதவி அல்லது நல்லச் செயல் செய்ததையும் பிரசித்திப்படுத்தும் அற்பமான குணம் நமக்கு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்வோம். தேவன் கண்டுபிடிக்கும் உண்மையான மனுஷனாக வாழ்வோம்.  


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,263                    💚 ஜூலை 25, 2024 💚 வியாழக்கிழமை 💚

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

நேபுகாத்நேச்சார் தான்  யூதாவிலிருந்து சிறைபிடித்துக் கொண்டு வந்தவர்களில் அறிவுமிக்கவர்களைத் தனது நாட்டில் பணியமர்த்த விரும்பி அப்படித் திறமையானவர்களைக் கண்டுபிடித்தான். அவர்களுள் தானியேலும் அவரது மூன்று நண்பர்களும் உண்டு. ராஜா இந்த இனைஞர்களுக்கு ராஜ உணவைக்கொடுத்து அந்த நாட்டு மொழியையும் கற்பித்துக்கொடுத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தன்னிடம் அவர்களைக் கொண்டுவரும்படிப் பணித்தான்.

மூன்று வேளையும் ராஜ உணவு கொடுக்க ஏற்பாடானபோதும் தானியேலும்  அவரது மூன்று நண்பர்களும் ராஜாவுணவு தங்களுக்கு வேண்டாம், வெறும் பருப்பும் மரக்கறி உணவுமே போதும் என்று கூறிவிட்டனர். ஆனால் அவர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட ஊழியன் அப்படி நான் கொடுத்தால் ராஜாவுக்குமுன் நான் உங்களை நிறுத்தும்போது நீங்கள் மற்றவர்களைவிட உடல்மெலிந்து காணப்படுவீர்கள், அப்போது  ராஜா என்னிடம் கேள்விகேட்பான் என்று தானியேலின் கோரிக்கையினை நிறைவேற்றத் தயங்கினான்.  

அப்போது தானியேலும் அவரது நண்பர்களும், "பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும்." ( தானியேல் 1 : 12, 13 ) என்றனர்.

இப்படிச் செய்து சோதித்துப்பார்த்த "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 ) ஆம், உணவுக்கும் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கும் தொடர்பு உண்டு. ஆவிக்குரிய மனிதர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் விருந்துகளிலும்  மற்றவர்களைவிட உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டையும் நிதானத்தையும் காட்டுவார்கள்.  

"நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியைவை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே." ( நீதிமொழிகள் 23 : 1- 3 )

ஒரு வீட்டில் மாலை நேரத்தில் ஜெபிக்கச் சென்ற ஊழியர் ஒருவர் ஜெபித்துவிட்டு வெளியே வந்தபின்னர் தன்னுடன் வந்த சகோதரர்களிடம், "வெறும் காப்பியும் மிச்சரும் தந்து அனுப்பிவிட்டார்கள்"    என்று குறைபட்டுக்கொண்டார். அப்படியானால் இவர் என்ன எதிர்பார்ப்புடன் ஜெபிக்கச் சென்றார்? இப்படிச் சில ஊழியர்கள்!!. மேலும் சிலர் உபவாசம் இருக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பார்கள், ஆனால் அதன்பின்பு ஒட்டகம் நீர் அருந்தி சேமிப்பதைப்போல  கிடைத்தமட்டும் உண்டு தங்கள் வயிற்றை நிரப்புவார்கள். இப்படிச் செய்வதை தேவன் வெறுக்கின்றார்.  நமக்குள் ஆவியானவர் இருப்பாரென்றால் இதனை நமக்கு உணர்த்தித் தருவார். 

அன்பானவர்களே, மூன்று ஆண்டுகள் ராஜ உணவை வெறுத்து வெறும் பருப்பும் காய்கறிகளையும் உண்ட தானியேலின் நண்பர்கள் நெருப்புச் சூளையினுள் போடப்பட்டபின்னரும் உயிருடன் மீண்டனர்; பசித்திருந்த சிங்கங்களின் கெபியினுள் போடப்பட்ட தானியேலை சிங்கங்கள் நெருங்கவில்லை.  மட்டுமல்ல; அனைத்து மறைபொருளையும் இந்நாள் வரையும் உலகம் முடியும்வரையும் நடக்கப்போகும் காரியங்களையும்  தேவன் தானியேலுக்கு வெளிப்படுத்திக்கொடுத்தார். காரணம், அவர்களது தேவனுக்குப் பாயந்த உண்மையுள்ள வாழ்க்கை.

"போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்." ( ரோமர் 14 : 20 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,264                    💚 ஜூலை 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

மனிதர்களை நோய்வாய்ப்பட பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, உடலுக்கு ஏற்பில்லாத உணவுகளை உட்கொள்வது; அளவுக்கு அதிக உணவு உண்பது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்வது,  இவை தவிர, நாம் மற்றவர்களுக்கு எதிராகச் செய்யும் பாவங்கள், நமது அந்தரங்கப் பாவங்கள், முன்னோர்கள் செய்த செயல்களின் சாபங்கள், மற்றவர்களுக்கு எதிராக நாம் செய்யும் தகாத செயல்கள் போன்றவைச் சில. 

இந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போதுதான் நாம் குணமாக முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்துத் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு குணமாக்குமுன் முதலில் அவர்களது பாவங்களை மன்னித்தார். (உதாரணமாக, மத்தேயு 9 : 2, மாற்கு 2 : 5  லுூக்கா 5 : 20) இதுவே யூதர்களுக்கு அவர்மேல் கோபம் வரக்  காரணமாகவும் இருந்தது. ஆம், பாவங்கள் மன்னிக்கப்படாமல் சில நோய்கள் குணமாவதில்லை.
 
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு நல்ல படிப்பினையினைத் தருகின்றார். அதாவது, நாம் மறவர்களுக்கு எதிராகத் தகாத செயல்கள் செய்திருப்போமானால் முதலில்  அவற்றுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டவேண்டும். நான் எனது போக்கில்தான் இருப்பேன் தேவன் என்னைக் குணமாக்கவேண்டும் என எண்ணுவதும் வேண்டுவதும் ஏற்புடைய செயலல்ல. நமது குற்றங்களை ஆவிக்குரிய நபர்களிடம் அறிக்கையிடும்போது அப்போது அவர்கள் ஜெபம் பண்ணினால் கிடைக்கும். 

ஜெபத்தின்மூலம் சுகம் கிடைக்கவில்லையானால் மறைக்கப்பட்ட பாவங்கள் நம்மிடம் ஏதாகிலும் உண்டுமா என நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். 

நாம் பிறர் மேல் கொள்ளும் பொறாமை, எரிச்சல், கோபம், செய்யும் தவறான செயல்கள் நமக்குள்ளே இருந்து உறுத்தி பல்வேறு உடல் நோய்களை உருவாக்கும் என்று இன்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.  மனிதர்களது பல நோய்களுக்கும் மனமே காரணம். பிறருக்கு எதிராக நாம் செய்த தவறுகளை அறிக்கையிடும்போது மன ஆறுதல் மட்டுமல்ல நோய்களிலிருந்து விடுதலையும் கிடைக்கின்றது. 

இப்படி மற்றவர்களிடம் பாவங்களை ஒளிவு மறைவின்றி அறிக்கையிட்டு வாழ்பவனே நீதிமான். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு நீதிமானாகிய எலியாவை நமக்கு உதாரணம் காட்டுகின்றார். "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது." ( யாக்கோபு 5 : 17, 18 )

இயற்கையையே கட்டுப்படுத்தும் ஆற்றல் எலியாவுக்கு இருந்தாதானால் அவருக்கு குணமாக்கும் ஆற்றலும் இருந்தது என்று பொருள். ஆம் அன்பானவர்களே,  அவரது வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருந்தது. சிலர் நோய்களுக்காக மருத்துவரிடமும் பல்வேறு ஊழியர்களிடமும் மாறி மாறிச் சென்றுகொண்டிருப்பார்கள். நமக்குள் ஆத்ம சோதனை செய்து பார்ப்போம். யாருக்கு எதிராக நாம் பேசியிருந்தாலும், செயல்பட்டிருந்தாலும் உண்மையான மனஸ்தாபத்துடன் தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம்.   

ஆம், குணமடையும்படிக்கு குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுவோம்.  நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,265                    💚 ஜூலை 27, 2024 💚 சனிக்கிழமை 💚

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வே இரட்சிப்பு வாழ்வு. கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் பாவத்துக்கு மரித்து நித்தியஜீவனுக்காக உயிர்த்திருக்கின்றோம். இப்படி நாம் கூறிக்கொள்ளவேண்டுமானால், "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆனால் இன்று பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளில் இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களே முன்னுரிமைப்படுத்தப்பட்டு பிரசங்கிக்கப்படுகின்றன. மேலான மகிமையான காரியங்கள் மறைக்கப்படுகின்றன. அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, "கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." என்று. அதாவது இந்த உலகத்தில் நாம் வாழும் இலக்கு கிறிஸ்து வீற்றிருக்கும் அந்தப் பிதாவின் இடத்தை அடைந்து அந்த மகிமையினை அனுபவிப்பது. 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதும்போதுக்  கூறுகின்றார், "ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3 : 5 ) அவயவயங்களை அழிப்பது என்பது இந்தச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது. 

ஆம் அன்பானவர்களே, மேற்படி கூறப்பட்டுள்ள பாவங்களையும் நான் விடமாட்டேன் ஆனால் கிறிஸ்துவையும் ஆராதிப்பேன் என்று நாம் கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். அது மெய்யான கிறிஸ்தவன் செய்யும் செயலல்ல. கிறிஸ்துவை அறிவிப்பது என்பதும் ஆராதிப்பது என்பதும்  வெறுமனே, "இயேசு ஆண்டவர் என்று கூறுவதும் அல்லேலூயா" என்றும் அலறுவது அல்ல. 

மெய்யான ஆராதனை என்பது நமது வாழ்க்கையினை பரிசுத்தமாக வாழ்வது. "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம்.

இப்படி நாம் வாழும்போது ஒருவேளை இந்த உலகத்தில் நாம் தரித்திரராக, பாடுகளோடு வாழ்ந்தாலும் பிற்பாடு அது நமக்கு மகிமையான காரியமாக இருக்கும். இதனையே "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." ( கொலோசெயர் 3 : 4 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம், கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத்  தேடுவோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,266                    💚 ஜூலை 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." ( யூதா 1 : 18, 19 )

கடைசிகாலத்தைப் பற்றிக் கூறும்போது இயேசு கிறிஸ்து போர்கள், பஞ்சம், கொள்ளை நோய்கள், கடல் சீற்றங்கள் போன்று பல்வேறு அடையாளங்களைக் கூறினார். மட்டுமல்ல, "அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்."  ( மத்தேயு 24 : 11 - 13 ) என்றும் எச்சரித்தார். 

"அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்" என்று இயேசு கிறிஸ்துக் கூறியதையே அப்போஸ்தலரான யூதாவும், "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்" என்று கூறுகின்றார். அதாவது, தேவனது சத்தியங்களைப் பரிகாசிக்கும் நூதன போதனைகளைப் போதிக்கும்  "தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர்" என்று கூறுகின்றார். 

இப்படிப் போதிப்பவர்கள், "பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." என்கின்றார். இவர்கள் தங்கள் மனதின் தோன்றியபடி போதிக்கும் ஜென்ம சுபாவத்தார்கள், இவர்களிடமிருந்து செயல்படுவது பரிசுத்த ஆவியானவருமல்ல என்கின்றார். எனவே இவர்கள் எப்போதும் வேத வசனங்களுக்கு உலக ஆசீர்வாதத்தையே அர்த்தமாகக் கொண்டு உலக ஆசீர்வாதங்களையே போதிப்பவர்களாகவும் இருப்பார்கள். 

இறுதிக் காலம் என்பதற்கு அடையாளமாக இயேசு கிறிஸ்து கூறியபடி இன்று நூற்றுக்கு தொண்ணூறு சதம் உலக ஆசீர்வாதமே சபைகளிலும் பிரபல ஊழியர்களாலும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி வாயிலாகவும் கிறிஸ்தவ உபதேசமாகப் போதிக்கப்படுகின்றது. அன்பானவர்களே, ஆம், நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். தீர்க்கதரிசன ஊழியர்கள் பெருகி, தீர்க்கதரிசன மாநாடுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  எனவே வஞ்சிக்கப்படாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

இன்றைய தியான வசனத்தை எழுதிய யூதா, தொடர்ந்து இவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமென்றும் தொடர்ந்து கூறுகின்றார். "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 21 )

நூதன பிரசங்கங்களையும் அப்படிப் போதிப்பவர்களையும் விட்டு விலகி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியதே நாம் செய்யவேண்டியது.  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )   ஆம், "கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,267                  
 💚 ஜூலை 29, 2024 💚 திங்கள்கிழமை 💚

"மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ( மத்தேயு 12 : 33 )

மனிதர்கள் நாம் பொதுவாக ஒரு மனிதன் செய்யும் சில வெளிச் செயல்களைக்கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றும் சிலரைக்  கெட்டவர்கள் என்றும் கூறுகின்றோம். ஆனால், நாம் நல்லவர்கள் என்று கூறும் பலரும் உண்மையில் நல்லவர்களாக இருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒரு சில நல்லச் செயல்களல்ல, மாறாக அவர்கள் வாழ்க்கையில்  வெளிப்படுத்தும் நல்ல கனியுள்ள குணங்களே அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதனை உலகுக்கு வெளிப்படுத்தும். 

இந்த உலகினில் பலவேளைகளில் மக்கள் தாங்கள் நல்லவர்கள் என்று கூறும் மனிதர்கள் மோசமானச்  செயல்களைச் செய்வதை  அறியும்போது,  "என்னால் நம்ப முடியவில்லை...அவரா இப்படிச் செய்தார்?" என்று வாய் பிளப்பார்கள். காரணம், அவர்கள் இதுவரை நல்லவர்கள்  என்று நம்பியவர்கள் செய்த மோசமான செயலை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.  

இதனை எல்லா காரியங்களிலும் நாம் பார்க்கலாம். அரசியல்வாதிகளில்கூடச் சிலரை மக்கள் நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் மோசமான அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்போது, "ஐயே...இந்த மனிதனுக்கு பைத்தியமா? அவனோடு கூட்டணி அமைத்துள்ளான்" என்பார்கள்.  காரணம், ஊழலையும் அரசின் சில மோசமான மக்கள் விரோத திட்டங்களையும் இதுவரை இந்த மனிதர் எதிர்த்துப் பேசியதுதான். இப்போது பல கோடிகள் கிடைத்தவுடன் தான் இதுவரை எதிர்த்துப் பேசிய கட்சியுடன் சேர்ந்துகொண்டு இதுவரைத் தான் பேசியதை மாற்றிப் பேசுகின்றான்.    

அதாவது இதுவரை இவர் பேசியது மக்கள் மத்தியில் இவரை நல்லவனாக அடையாளம்காட்டியது. ஆனால் மனப்பூர்வமாக இவர் நல்லவரல்ல. இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ஆம் அன்பானவர்களே, ஒருவரது ஒரு செயல்மூலமல்ல மாறாக உளப்பூர்வமாக அவர் செய்வதும் பேசுவதும்தான் அவரை நாம் நல்லவரா கெட்டவரா என்று அடையாளம் காண உதவும்.  

"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்." ( மத்தேயு 7 : 16, 17 )

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது மட்டுமே  இந்த மரங்களைப்பற்றிய (மனிதர்களைப் பற்றிய)  அறிவு நமக்கு வரும். இல்லாவிட்டால் சாதாரண மக்களைப்போல நாமும் சிலரை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு வாழ்வோம். ஆம், இதுவே இன்று பலர் குருட்டுத்தனமாக சில ஊழியர்களைப் பின்பற்றக் காரணம். அவர்களது நயவசனிப்பான சத்தியத்துக்கு விரோதமான பிரசங்கம் பல மக்களை அவர்களைநோக்கி இழுக்கின்றது. ஆம் இதனால் மக்கள் முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்க முயலுகின்றனர். 

வேத வசனங்களை பகுத்துணரும் அறிவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் இருந்தால் மட்டுமே நாம் இந்த ஏமாற்று ஊழியர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும்  தப்பிக்க முடியும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,268                  
 💚 ஜூலை 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்." ( யோவேல் 2 : 21 )

நாம் நமது பொல்லாப்புக்களைவிட்டு மனம் திரும்பும்போது கர்த்தர் நமது வாழ்வில் மிகப்பெரிய காரியங்களைச்  செய்து நாம் மகிழ்ந்து களிகூரும்படிசெய்வார். இந்தச் சத்தியத்தை யோவேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் விளக்குகின்றார். 

நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது   வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு ஒரு செழிப்பற்ற வாழ்க்கையை  நமக்கு ஏற்படுத்தும். ஆனால் நாம் தேவனுக்கு நேராகத் திரும்பும்போது  இவற்றுக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் வாழ்வில் ஏற்படும் என்கின்றார் தேவன்.

எனவே பழைய பாவ வாழ்கையினைவிட்டு மனம் திரும்ப தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். இதனையே, "நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

விவசாயிகளுக்கு முன்மாரி பின்மாரி பற்றி நன்றாகத் தெரியும். இந்த மழைகள் எப்படி விளைச்சலை அதிகரிக்கும் என்பது சாதாரண மக்களைவிட விவசயிகளுக்கு நன்றாகத் தெரியும். இப்படியே  விவசாயிகள் மகிழ்வதுபோல நாம் மனம்திரும்பும்போது நாம் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியடையமுடியும். ஆம், "உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் வருஷிக்கப்பண்ணுவார்." ( யோவேல் 2 : 23 ) 

அப்படி என்ன மாற்றம் ஏற்படும் என்பதனை உவமையாக பின்வருமாறு கூறுகின்றார், "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்." ( யோவேல் 2 : 25 )

அதாவது, நாம் மனம்திரும்பாத, தேவனுக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்தபோது   வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் மரங்களை அழித்து விளைச்சலைக் கெடுப்பதுபோல நமது வாழ்க்கையில் துன்பங்களும், சோதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்டு நாம் வருந்திய வருஷங்களின் விளைவை நமக்குத் திரும்ப அளிப்பேன் என்கின்றார் தேவன். 

ஆம் அன்பானவர்களே, தேவனுக்கேற்றபடி நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு  பயப்படாமல், மகிழ்ந்து களிகூருவோம்; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,269                  
 💚 ஜூலை 31, 2024 💚 புதன்கிழமை 💚

"கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 6 )

கணவனால் கைவிடப்பட்டப் பெண்கள் அதிலும் குறிப்பாக இளம் வயதில் கணவனால் தள்ளப்பட்ட பெண்கள் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பது நாம் அனைவரும் உணரக்கூடியதே.  அபலைப் பெண்களான அவர்களுக்கு ஆறுதலோ,   உதவியோ, தேறுதலோ எவரும் எளிதில் அளித்திடமுடியாது.

இந்தப் பெண்களைப்போல மனவேதனை அடைந்து வாழக்கூடிய மனிதர்கள் இந்த உலகினில் பலர் உண்டு. ஆனால் அவர்களோ ஆறுதலின் ஊற்றாகிய தேவனை அடையாளம் காணாமல் தவிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அத்தகைய மனவேதனையோடு வாழ்பவர்களைத் தேவன் அழைத்துக் கொண்டிருக்கின்றார். 

ஆனால் அவர்களோ தங்களது பாரம்பரிய மத நம்பிக்கையினாலும், வறட்டுப்  பிடிவாத குணத்தினாலும் தேவனிடம் வராமல் இருக்கின்றார்கள். கிறிஸ்தவர்களில் பலரும்கூட தங்களது குறுகிய மத எண்ணங்களினாலும், தாங்கள் அடிமையாகியுள்ள பாவப் பழக்கங்களிலிருந்து வெளிவர மனதில்லாததாலும்  மெய்யான அவரை அறியாமல் தொடர்ந்து வேதனையிலேயே அமிழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

ஒருமுறை இப்படி வேதனையில் இருந்த மனிதனிடம் கிறிஸ்துவைப்பற்றி நான்கூறியபோது, "உன் பெந்தெகொஸ்தே போதனையை என்னிடம் திணிக்கப் பார்க்கிறாயா?" என்றார் கோபத்துடன். "நண்பரே, இது பெந்தெகொஸ்தே போதனையல்ல, ஆணடவரது போதனை" என்று நான் கூறவும், "தயவுசெய்து வேறு ஏதாவது பேசு" என்றார். அவரிடம் என்ன பேசுவது?

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை கிறிஸ்தவராக இருக்கலாம் அல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் நமது தேவன் எல்லோரையும் பார்த்துக் கூறுகின்றார்,  "கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னை வா என்று அழைக்கிறேன்" என்று   சொல்லுகிறார்.

தேவன் யாரையும் பலவந்தப்படுத்துபவரல்ல; யாரையும் அவர் வற்புறுத்தி மதமாற்றம் செய்பவருமல்ல. அவர் மனிதர்களிடம் மனமாற்றத்தை விரும்புகின்றார். அந்த மனமாற்றம்தான் நாம் அவரிடம் வருவதற்கு அடையாளம். ஆம், எத்தகைய கொடிய வேதனையில் இருந்தாலும் நமது மனம் அவரிடம் திரும்புமானால் அவர் நமக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து நமது வாழ்வை மாற்ற வல்லவர். 

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் வேதனையுற்று இருக்கிற யாவரையும் கர்த்தர் அழைக்கிறார்.