'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,178 💚 மே 01, 2024 💚 புதன்கிழமை 💚
"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்." ( பிலிப்பியர் 4 : 11, 12 )
சிலருக்கு எவ்வளவு அதிகமான செல்வமோ, பெரிய பதவியோ இருந்தாலும் திருப்தி இருக்காது. காரணம், மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு மற்றவர்களுக்குள்ளது போல தங்களுக்கு இல்லையே எனும் மனநிலைதான் காரணம். இத்தகைய மனிதர்களுக்கு ஒருபோதும் மனமகிழ்சி இருக்கமுடியாது.
அப்போஸ்தலரான பவுல் மிகப்பெரிய செல்வந்தராக இருந்தவர். ஆனால் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் அற்பமும் குப்பையுமாக எண்ணித் துறந்தவர். காரணம், கிறிஸ்துவின் மகிமைக்குமுன் அவரது செல்வமோ பதவியோ அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கிறிஸ்துவுக்காக அவர்பட்ட பாடுகள் எண்ணிலடங்காதவை. இன்றைய வசனத்தை அவர் குளிரூட்டப்பட்ட அறையில் (Air Condition ) இருந்துகொண்டு எழுதவில்லை. கிறிஸ்துவுக்காக அவர் பட்ட பாடுகளை அவர் பின்வருமாறு கூறுகின்றார்:-
"நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்" ( 2 கொரிந்தியர் 11 : 23-25 )
"அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்." ( 2 கொரிந்தியர் 11 : 26, 27 )
அன்பானவர்களே, எனவே நமது துன்பங்களை நாம் பவுல் அப்போஸ்தலர் பட்டத் துன்பங்களுடன் ஒப்பிடும்போது நமக்கு ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும். ஆவிக்குரிய மக்களாகிய நாம் இத்தகைய மனமுள்ளவர்களாக வாழவேண்டுமேத்தவிர நம்மைவிட உலக செல்வத்திலும், பதவியிலும் உயர்ந்தவர்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ மேலான அனுபவங்களும் மேன்மைகளும் உண்டு. கிறிஸ்துவுக்குள் வாழும்போது இன்றும் நாம் அவற்றை அனுபவிக்க முடியும். ஆனால் செல்வமும் பதவியும் மட்டுமே வாழ்க்கை என எண்ணுபவர்கள் இவற்றை அனுபவிப்பதில்லை.
இதுவே மனமகிழ்ச்சி. இத்தகைய மனமகிழ்ச்சியை அனுபவித்ததால்தான் பவுல் அப்போஸ்தலர் தனக்கு வந்த பாடுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவை அறிவித்தார். இதுபோலவே, கிறிஸ்துவை அறிவிக்கும் கிறிஸ்தவ ஊழியன் என்பவனும் பாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவனாக இருக்கவேண்டும். இதுவே வேதம் நமக்குக் காண்பிக்கும் கிறிஸ்தவ வழிமுறை. கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய அனுபவங்களில் வளரும்போது மட்டுமே நாம் இத்தகைய மனநிலையினை அடைந்திட முடியும். ஆம், சிலுவைகள் இல்லாமல் உயிர்ப்பு இல்லை.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment