Tuesday, April 16, 2024

தவறான போதகர்களை இனம்கண்டு......

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,165     💚 ஏப்ரல் 18, 2024 💚 வியாழக்கிழமை 💚



"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." ( 2 யோவான்  1 : 9 )

கிறிஸ்துவின் உபதேசம் என்ன? அது அவரது இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு அல்லது முடிவில்லா வாழ்வு  பற்றியது. கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கழுவப்படும்போது அவரோடு இணைக்கப்படுகின்றோம். அப்படி இணைக்கப்பட்ட நாம் அவரது ஐக்கியத்தில் தொடர்ந்து வாழும்போது இரட்சிக்கப்படுகின்றோம். இரட்சிப்பு என்பது ஒருநாள் அனுபவமல்ல; மாறாக, ஆவிக்குரிய வாழ்வின் முடிவுவரை நாம் அதில் நிலைத்திருக்கவேண்டும். இதனையே, "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." ( மத்தேயு 24 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய வசனம் கூறுகின்றது, "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" என்று. இந்த வசனத்தின்படி வெறும் ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக போதித்துக்கொண்டு, மாயாஜாலக்காரன்போல அற்புதம் அதிசயம் என்று கூறிக்கொண்டிருப்பவன் கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கின்றான்.  அத்தகையவன் பிதாவையும் குமாரனையும் உடையவன் அல்ல என்பது தெளிவு. 

மட்டுமல்ல, விசுவாசி என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழாதவனும் கிறிஸ்துவை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து வாழ்பவனும் சத்தியத்தை போதிப்பவனுமே அவரில் நிலைத்திருப்பவன். அவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். அவனே கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவும் மற்றவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தவும்  முடியும். 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தையும் அவர் சிந்திய இரத்தத்தின் மகிமையையும் அதனால் உண்டாகும் ஆத்தும இரட்சிப்பையும் பற்றி கவலைப்படாமல் வாழ்பவனும்  அதுபற்றி போதிக்காமல் வெற்றுப்  போதனை செய்பவனும் நமது மரியாதைக்குரியவனல்ல. அத்தகையோரை நமது வீடுகளில் ஏற்றுக்கொள்ளவும் கூடாது என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 )

இயேசு கிறிஸ்துவை  அதிகம் அன்பு செய்தவர்தான் யோவான் அப்போஸ்தலர்.  கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் யோவானின் மனதினை மிகவும் வதைத்தன. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பட்டப்  பாடுகள்  எத்தனை மேலானவை என்பதனை யோவான் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் போதித்து மக்களை மீட்பின் பாதையில் நடத்தாமல் தவறான போதனைகளைக் கொடுப்பவர்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகையவர்கள் கிறிஸ்துவை அவமதிக்கின்றார்கள் என்பதனை அவர் உணர்ந்ததால் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. அப்படியானால் பின் வேறு யாருக்கு அவன் உடையவன் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவேதான், "அவர்களை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." என்று கூறுகின்றார்.

நாம் கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்துகொண்டு இத்தகைய தவறான போதகர்களை இனம்கண்டு அவர்களது வழியைவிட்டு விலகிக்கொள்வதே விவேகம். ஏனெனில் அத்தகையவர்களின் போதனைகள் பெரும்பாலும் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அவமானப்படுத்துவதாகவே இருக்கும். அதற்கு நாம் உடன்படாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: