Thursday, April 25, 2024

இடறல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,174     💚 ஏப்ரல் 27, 2024 💚 சனிக்கிழமை 💚


"என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்" (லூக்கா 7:23)

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடும் இடறல் என்பது நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகளையும்  போதனைகளையும்தான்.  கிறிஸ்தவ மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான். அந்த நம்பிக்கைக்கு எதிரான, முரணான போதனைகளும் செயல்பாடுகளும் நம்மை கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. அல்லது இடறச்செய்கின்றன. நாம் நடக்கும்போது வழியில் கிடக்கும் கற்கள் நம்மைச் சிலவேளைகளில் இடறிவிடுகின்றன. அதுபோலவே கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கு முரணான போதனைகள் விசுவாசிகளை இடறச் செய்கின்றன. 

ஆனால் இயேசு கிறிஸ்து இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறினார். காரணம் கிறிஸ்துவின்மேல் உண்மையான  விசுவாசம் கொண்டவர்களுக்கு அந்த இடறல்கள் அவர்களை மேலும் மேலும் விசுவாசத்தில் வளர உதவுகின்றன. விசுவாசத்தின் தந்தை என்று நாம் கூறும் ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். அவரது விசுவாசத்துக்கு எதிராக  வந்த இடறல்தான் அவரை விசுவாச வீரனாக்கியது. 

இயேசு கிறிஸ்து கூறினார்,  "இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! "(மத்தேயு 18:7) ஆனால் ஆபிரகாமுக்கு வந்த இடறல் மனிதனால் வந்ததல்ல; மாறாக தேவனே அவரது விசுவாசத்தை நமக்குக் காட்டிட முன்குறித்துச் செய்த செயல் அது. 

இரட்சிப்புக்கு  ஏதில்லாத  வெறும் ஆசீர்வாத போதனைகள் இடறுதலுக்கேதுவானவைகள்; சில தேவையற்ற சடங்காச்சார  வழிபாட்டுமுறைமைகள் இடறுதலுக்கேதுவானவைகள்.   காரணம் அவை கிறிஸ்துவின்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. கிறிஸ்துவைவிட உலக செல்வங்களுக்கு முன்னுரிமைகொடுக்க நம்மை அவை தூண்டுகின்றன. ஆனால் இன்று மட்டுமல்ல அப்போஸ்தலரான பவுல் அப்போஸ்தலரின் காலத்திலேயே இப்படிப்பட்ட முரணான இடறலான போதனைகள் பலரால் போதிக்கப்பட்டன.  

எனவேதான் அவர் தனது நிருபத்தில் இதுகுறித்து எச்சரித்து எழுதினார். "சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) ஆம் அன்பானவர்களே, எனவே, இடறலான போதனைகளைப் போதிப்பவர்களைவிட்டு நாம் விலகிவிடவேண்டும்.

ஒருவர் தவறுதலான இடறலான போதனையைக் கொடுக்கின்றார் என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அது தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் தனிப்பட்ட உறவினால்தான் முடியும். வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று போதகர்கள் போதிப்பதை மட்டும் நாம் கேட்டுக்கொண்டிருந்தால்  போதாது. நாம் தேவனோடு நமது தனிப்பட்ட உறவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி கொள்ளும்போதுதான் ஆவியானவர் நமக்குச் சரியான வழியைக் காட்டுவார்.  

"எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவரும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே, யார் போதிக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டாம். அவர் எத்தனை பெரிய கூட்டம் சேர்க்கும் பிரசங்கியாக இருந்தாலும் அப்படியே ஒருவர் கூறுவதைக் கேட்டு நம்பவேண்டாம்.  ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் வேத வசனங்களின் மெய்ப்பொருளைக் கண்டுகொள்வோம். அப்போது நாம் இடறமாட்டோம். "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்"என்று இயேசு கிறிஸ்து கூறியபடி இடறலற்றவர்களாக இருந்து பாக்யவான்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

No comments: