Sunday, April 07, 2024

மனிதனை கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு...

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,156     💚 ஏப்ரல் 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 )

ஒருவன் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக விளங்கவேண்டமானால் அவன் கிறிஸ்துவைப்பற்றி அறிந்தால் மட்டும் போதாது. காரணம், கிறிஸ்துவைப் பற்றி அறிவது நம்மை அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கமாட்டாது.  கிறிஸ்துவைப் பற்றி அறிவது வெறும் மதபோதனை. மதபோதனை மதவாதிகளைத்தான் உருவாகுமேத்தவிர மேலான ஆவிக்குரிய மனிதர்களை உருவாக்க முடியாது.  

ஆனால், ஒருவர் கிறிஸ்துவை அறியும்போது மட்டுமே அவர் கிறிஸ்துவைப்போன்ற குணங்களுள்ளவர்களாக மாறமுடியும். கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ளும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவை அறியமுடியும்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில்,  "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து" என்று கூறுகின்றார். அவரைபற்றியல்ல; மாறாக அவரையே அறிவித்து என்று கூறுகின்றார். அப்படி அறிவிக்கக் காரணம், "ஒருவரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு" என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்" எனும் வார்த்தைகளை பவுல் பயன்படுத்தியுள்ளார். அதாவது, நாடு, மதம், ஜாதி, இனம், நிறம் கடந்து எந்த மனிதனையும் கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த வேண்டும் என்று பொருள். இதுபோலவே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் குறிப்பிடும்போதும் அப்போஸ்தலனாகிய யோவான், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். ஆம் அவர் எந்த மனிதனையும் ஒளிர்விக்க வல்லவர்.

கிறிஸ்துவுக்குள் தேறினவனாக ஒருவர் மாறும்போது அற்பமான மனித சுபாவங்கள் மாறிவிடும். வெளிப்பார்வைக்கு அவர்கள் வித்தியாசம் தெரியாதவர்களாக மற்றவர்களைப்போல் இருந்தாலும் உள்ளான மனிதனில் கிறிஸ்துவைப்போன்ற எண்ணங்கள் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னரும் அப்போஸ்தலரான பவுலின் நிரூபங்கள் உயிருள்ளவையாக இருக்கின்றன. காரணம், அவரது உள்ளான எண்ணம் மாயமற்றதாக இருந்தது. இன்றைய வசனத்தில் அவர் கூறுவதுபோல, எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவர் போதித்தார், ஜெபித்தார். 

நாமும் இப்படி வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று அவர் கூறியுள்ளபடி மனிதர்களை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக மாற்றிட நாம் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும். 

ஆனால் இன்று பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகள் இப்படியிருப்பதில்லை. அன்பானவர்களே, நான் அடிக்கடி கூறுவதுபோல கிறிஸ்தவத்துக்கு எதிரி வெளியிலில்லை. பிரபல கிறிஸ்தவ ஊழியர்களே கிறிஸ்தவத்துக்கு எதிரிகள். இவர்களில் பலர்  தொலைக்காட்சி ஊழியம் எனும் பெயரில் மனிதர்களை இருளுக்கு நேராகவே நடத்துகின்றனர். அவர்கள்  மனிதர்களுக்கு ஞானத்தோடு புத்திசொவதுமில்லை சரியான போதனைகளைக் கொடுப்பதுமில்லை;  கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த முயலுவதுமில்லை. இவர்களது பல சாட்சிகள் பிற மதத்தினர்முன் கிறிஸ்தவத்தைக் கேலிப் பொருளாக்குவதுடன் உண்மையான கிறிஸ்தவர்களையே மனம்நோகச் செய்கின்றன.

எனவே, இப்படி எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு போதிப்பதே மெய்யான ஊழியம். அப்போஸ்தலரான பவுலின் மனநிலையுடன் நமது வாழ்வாலும் வார்த்தையாலும் கிறிஸ்துவை அறிவிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: