கிருபையினால் மீட்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,160       💚 ஏப்ரல் 13, 2024 💚 சனிக்கிழமை 💚


"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." ( தீத்து 3 : 5 )

நாம் கிறிஸ்து இயேசுவினால் மீட்கப்பட்டதற்கு நமது நீதிச் செயல்கள் காரணமல்ல; மாறாக அவரது இரக்கமே காரணம். இந்த உலகத்தில் பலர் நல்ல நீதிசெயல்கள் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. ஆலய காரியங்களில் முழுமூச்சாக ஈடுபட்டுப்  பல பக்திச்  செயல்பாடுகளில்  ஈடுபட்டாலும் பலரும் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. 

இன்று நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் அவர் நம்மேல் வைத்தக் கிருபைதான் காரணம். நாம் செய்த நற்செயல்களல்ல மாறாக முற்றிலும் தேவ கிருபையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 9 ) மேலும்,  "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று வாசிக்கின்றோம்.

இதனை நாம் ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள தனது  தகப்பனார் அடிக்கடி அறிவுறுத்தியும் துன்மார்க்க மகன் அவனது நண்பர்களோடு சேர்ந்து குடித்து பலருடன் தகராறுசெய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டான். அங்கு காவலர்களால் அடிபட்டு அவமானப்பட்டபோது அவனுக்குத் தகப்பனார் கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. பலமுறை சிந்தித்து, தான் யார் என்பதை போலீசாரிடம் சொல்லிவிட முடிவெடுத்தான்.

அவன் தான் யார் என்பதைக் கூறியபோது அவன் இவ்வளவு பெரிய மனிதனின் மகன் என்பதை போலீசாரால் நம்ப முடியவில்லை. அந்தத் தந்தையைத்  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அந்த மகனும்  தந்தையிடம் அழுது மன்னிப்பு வேண்டினான். தகப்பன் கூறிய பின்னர் அவனைப் போலீசார்  விடுவித்தனர். அவன் போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டான்; மீட்கப்பட்டான். அதன்பின்னர் அவனுக்குத் தான் தந்தைக்கு எதிராகச் செய்த செயல் அவமானமாய் இருந்தது. அவரது நற்பெயருக்கு கேடு விளைவித்தததற்காக மனம் வருந்தினான். இனிமேல் பழைய நண்பர்களோடு சேரக்கூடாது என்று உறுதியெடுத்துத் திருந்தினான்.  

அந்த மகன் இதற்குமுன் தந்தையோடு சேர்ந்து பல நல்ல சமுதாயத் தொண்டுகளும்  செய்துள்ளான். ஆனால் நல்லது செய்தாலும் துன்மார்க்க நண்பர்களும் துன்மார்க்கச் செயல்பாடுகளும் அவனிடம் இருந்து அவனை கேடுகெட்டவனாகவே மாற்றியிருந்தது. ஆனால் இப்போது இந்த ஒரு சம்பவம் தகப்பனின் இரக்கத்தை உணரச்செய்து  அவனை மனம் திரும்பச் செய்தது. 

அன்பானவர்களே, இந்தத் தகப்பன் தனது மகன் ஏற்கெனவே செய்த பல நல்ல செயல்களுக்காக அவனிடம் அன்புகூரவில்லை. மாறாக, அவன் அவரது சொந்த மகன் என்பதால் காவலர்களின் பிடியில் சிக்கியபோது அன்புகூர்ந்து அவனை விடுவிக்க முயற்சியெடுத்தான். இப்படியே, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." ( ரோமர் 5 : 8 ) ஆம் கிறிஸ்து நமது அன்பானத் தகப்பன். 

இந்தத் துன்மார்க்க மகனைப்போலவே நாம் இருக்கின்றோம். நமது தகப்பனாகிய கிறிஸ்து இயேசுவின் அன்பை நாம் உணராமல் இருக்கின்றோம். அவருக்கு எதிரான பாவச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அவரை விசுவாசத்தோடு நாம் நோக்கிப்பார்த்து நமது பாவங்களை ஒத்துக்கொண்டால் மீட்கப்படுவோம். ஆம் அன்பானவர்களே, நாம் நல்ல செயல்கள் செய்யாதவர்களாக இருந்தாலும் கிறிஸ்துவின் கிருபையால் மீட்கப்படுவோம். அதன்பின்னர்தான் அவரது அன்பினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். 

"ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்." ( ரோமர் 4 : 5 ) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்