தேவனுடைய ராஜ்ஜியமும், பரலோக ராஜ்ஜியமும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,164      💚 ஏப்ரல் 17, 2024 💚 புதன்கிழமை 💚



"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் எனும் இரு அரசாங்கங்களைக் குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பரலோக ராஜ்ஜியம் என்பது பிதாவின் ராஜ்ஜியம்; அவரது அரசாங்கம். மரித்த பரிசுத்தவான்கள் நுழைந்து வாழக்கூடிய மறுவுலக ராஜ்ஜியம். ஆனால் தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் தேவன் நம்முள்வந்து ஆட்சிசெய்கின்ற ராஜ்ஜியம். 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்து செயல்படுவதே தேவனுடைய ராஜ்ஜியம்.

பவுல் அப்போஸ்தலர் காலத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் என்று கூறியவுடன் பலரும் தேவனுடைய ராஜ்ஜியம் வந்துவிட்டால் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும் இந்த உலக வாழ்வை சுகமாக அனுபவித்து மகிழ்வதற்கும்  அந்தத் தேவனுடைய ராஜ்ஜியம் உதவிடும் என்று எண்ணிக்கொண்டனர். ஆனால் அவையல்ல, மாறாக நீதி, சமாதானம்,  பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவையே தேவனுடைய ராஜ்யத்தின் அளவுகோல் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

தேவனுடைய ராஜ்யமானது தேவனைக்குறித்து பேசிக் கொண்டிருப்பதாலோ அவருக்கு ஆராதனைகள் செய்து கொண்டிருப்பதாலோ வராது. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் பலத்தால், அவர் நம்முள் வந்து செயலாற்றுவதால் நம்முள் வருகின்றது. இதனையே இன்றைய தியான வசனம், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். அதாவது புசிப்பும் குடிப்புமற்ற நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமான தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் வருவதாக என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். 

நமது பக்திப் பேச்சுகளாலும் செயல்பாடுகளாலுமல்ல, மாறாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் தேவனுடைய ராஜ்யம் நம்மில் உருவாக ஜெபிப்போம்; செயல்படுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்