Thursday, April 04, 2024

நற்செய்தியை அறிவிப்பது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,153      💚 ஏப்ரல் 06, 2024 💚 சனிக்கிழமை 💚


"என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்." ( கலாத்தியர் 4 : 19 )

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். அது கிறிஸ்து நமக்குக் கொடுத்தக் கட்டளையாகும். நற்செய்தி அறிவித்தல் என்பது வெறும் உலக ஆசீர்வாதங்களை அறிவிப்பதல்ல; மாறாக, கிறிஸ்துவின் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் மக்களுக்கு அறிவித்து அவர்களை மீட்பின் பாதையில் நடத்துவதாகும்.  

கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லுமுன் கொடுத்த இறுதிக் கட்டளையே இதுதான். பின்பு, அவர் அவர்களை நோக்கி: "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல கிறிஸ்து நம்மில் உருவாகவேண்டும்.  அப்படி நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின்னர் அதே ஆத்தும பாரத்தோடு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். 

நாம் வெறுமனே பிரசங்கம் செய்வதல்ல, மாறாக கிறிஸ்துவை பிறர் அறிந்து அவரது மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டுமென்று நம்மையே வருத்தி  அவர்களுக்கு அறிவிப்பது. இதுவே மனிதர்களது மனமாற்றத்தைக்கு ஏதுவாக அமையும். 

நான் கம்யூனிச சித்தாந்தத்துக்கும் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும்  அடிமையாக இருந்தபோது உலக பத்திரிகைகளுக்கு கதைகள் கவிதைகள் எழுதிவந்தேன். அப்போது கிறிஸ்துவை அறிந்த,  என்னை விட  சுமார் 10 வயது குறைவான பத்திரிகை நண்பரொருவர் எனக்கு இருந்தார். அவர் கிறிஸ்துவை அறிந்தவர். அவர் என்னிடம் கதை, கட்டுரைகள் வாங்க எனது வீட்டிற்கு வருவார். அப்போது மெதுவாக கிறிஸ்துவைப்பற்றி எனக்கு அறிவிப்பார்.  நான் அவரிடம், "வேறு நல்ல விஷயங்கள் இருந்தால் பேசுங்கள், இல்லாத ஒன்றைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்பேன். இது பல நாட்களாக நடந்தது.

ஒருமுறை என்னிடம், "ஜியோ அண்ணே, நீங்க உங்களுக்காக இல்லாவிட்டாலும் நான் கூப்பிடுவதற்காகவாவது எனக்கு மதிப்பு கொடுத்து என்னோடு ஒரு பிரேயருக்கு வாருங்கள்" என்று வற்புறுத்தினார். அவருக்காக அன்று ஒரு சனிக்கிழமை அவரோடு சென்றேன். ஒரு சிறிய ஆலயத்தில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்களோடு உட்கார்ந்திருந்தேன். அவர்கள் எனக்காக ஜெபித்தார்கள்.  எனக்கு என்னைக்குறித்தே அவமானமாக இருந்தது. "நமது பழைய நண்பர்கள் நாம் இங்கே அமர்ந்திருப்பதைக் கண்டால் என்ன எண்ணுவார்கள்?" என்பது மட்டுமே என் மனதில் இருந்தது. 

இதுபோல மூன்று வாரங்கள் வார இறுதி நாட்களில் கூடி ஜெபித்த அந்தக் கூட்டத்துக்குச் சென்றேன். மூன்றாவது வாரத்தில் ஜெபித்து முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்த இரவில் கிறிஸ்துவால் மாற்றமடைந்தேன். அது, 1993 நவம்பர் 18 ஆம் நாள். அந்த ஒரே நாளில் எனது பழைய குணங்கள் மாறின; பழைய நண்பர்கள் மாறினர். அன்பானவர்களே, அதன் பின்னர்தான் எனக்காக அந்தச் சகோதரன் எடுத்தக்  கடுமையான உபவாசத்தையும், தனது உடலை வருத்தி எனது மாற்றத்துக்காக அவர் ஜெபித்ததையும் என்னிடம் கூறினார். ஆம், கிறிஸ்து என்னிடத்தில்  உருவாகுமளவும் அவர் எனக்காக  கர்ப்பவேதனைப் பட்டிருக்கின்றார். 

அன்பானவர்களே, இதுதான் பவுல் அப்போஸ்தலர் கூறும் நற்செய்தி அறிவித்தல். வேதாகமத்திலிருந்து ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தேடிப்  பொறுக்கிஎடுத்து, "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறுவது எளிது. அது  நற்செய்தி அறிவிப்பல்ல; உளவியல் ஆற்றுப்படுத்தல். அதனால் ஒருவர் கிறிஸ்துவை அறியவோ மனமாற்றமடையவோ முடியாது.

எனவே ஜெபத்தோடு, மனம் திரும்புதல், ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சியடைதல்  போன்ற செய்திகள் எழுதுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கின்றேன்.  இதுவரை நான் எழுதிய 1150 க்கும் மேற்பட்ட தியானங்களில் உலக ஆசீர்வாதத்தை வெறும் 20 அல்லது 25 தியானங்களில் மட்டுமே குறிப்பிட்டிருப்பேன். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவை ஒருவர் வாழ்வில் அறிந்துகொள்வதே மெய்யான ஆசீர்வாதம்; அவரை அறிந்தபின்பு நமது வாழ்வின் மற்றவைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். 

"உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 )  எனும் கிறிஸ்துவின் வார்த்தைகளை கடைபிடிக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். நம்மை வருத்தியாவது நாம் அறிந்த கிறிஸ்துவை பிறருக்கும் அறிவிப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

No comments: