Sunday, April 07, 2024

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு உரிமையுண்டு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,157    💚 ஏப்ரல் 10, 2024 💚 புதன்கிழமை 💚

"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது." ( 1 கொரிந்தியர் 10 : 23 )

தேவன் மனிதனைப் படைத்து பூமியிலுள்ள அனைத்தின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக்கொடுத்தார். மனிதனை தேவன் ஒரு ரோபோ இயந்திரம் போல படைக்கவில்லை. அவனுக்குச் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். இப்படி இல்லையானால் நாம் அனைவரும் தேவ கட்டளைக்குள் அவர் சொல்வதை மட்டுமே செய்துகொண்டிருப்போம். இப்படி இருந்தால் மனிதனுக்கு சுதந்திரத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போயிருக்கும். 

இப்படி, எல்லாவற்றையும் அநுபவிக்க நமக்கு உரிமை இருந்தாலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் கிறிஸ்துவுக்குள் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டுமானால் சில பல காரியங்களை நாம் தியாகம் செய்யவேண்டும். உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் தேவனால் படைக்கப்பட்டிருந்தாலும் அவைகளை தேவன் ஒரு நோக்கத்துக்காகப் படைத்திருப்பார். ஆனால் மனிதன் தனது மூளை அறிவினால் பல பொருட்களை தேவனுக்கு ஏற்பில்லாதவையாக மாற்றிவிட்டான். 

இப்படி இருப்பதால், "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்." ( 1 கொரிந்தியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள் தவிர மனிதனால் உருவாக்கபட்டப் பல பொருட்களையும் அனுபவிக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாகவும் இராது நாம் எவற்றுக்கும் அடிமையாகிவிடவும் கூடாது.  

இந்த உலகத்தில் நாம் வாழ பணம், வீடு, ஆடைகள், உணவு  எனப் பலவித பொருட்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. இவைகளை அனுபவிக்க நமக்கு உரிமை உள்ளது. ஆனால் இவைமட்டுமே வாழ்க்கை என எண்ணி இவற்றைப் பெறுவதற்கு நாம் தகாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது நாம் அந்தப் பொருளுக்கு அடிமையாகியுள்ளோம் என்று பொருள். 

எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நமக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமை இருந்தாலும் நமது ஆத்துமத்துக்குத் தகுதியான, நமது பக்திவிருத்தியை அதிகரிக்கச்செய்யக்கூடிய பொருட்களை மட்டும் நாம் உபயோகிக்கவேண்டும். மட்டுமல்ல, எவற்றுக்கும் நாம் அடிமைகள் ஆகிவிடக்கூடாது.  

பக்திச் செயல்பாடுகளில் மூழ்கி பல்வேறு ஆன்மீகப் பணிகளைச்  செய்யும் சிலர் மறுபுறம் முழுநேரமும் தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பது, கிரிக்கெட் விளையாட்டுகளை ரசிப்பது, மற்றும் நகைகள், புடவைகள், திரைப்படங்கள்  போன்ற பலவற்றுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். இவை எவையும் நமக்கு பக்திவிருத்தியோ, ஆத்தும முன்னேற்றத்தையோ தரப்போவதில்லை. 

உலகினில் நாம் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் எனினும் நம்மிடம் இத்தகைய அடிமைத்தனங்களோ பக்திவிருத்தி ஏற்படுத்தாத செயல்களோ இருக்குமானால் அவற்றை அகற்றி வாழும்போது மட்டுமே தேவனை அறியக்கூடிய வழிகளில் நாம் முன்னேற்றம்காண முடியும்.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: