Friday, April 05, 2024

குருடராயிருந்தால் பாவமிராது;

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,154     💚 ஏப்ரல் 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." ( யோவான் 9 : 41 )

இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய தியான வசனம் சாதாரண வசனம்போல இருந்தாலும் இதன் உட்பொருள் ஆழமான அர்த்தம் கொண்டது. தேவனை நாம் அறியாமலேயே இருந்திருந்தால் நமக்கு பெரிய பாவம் சேர்ந்திருக்காது. மாறாக அவரை அறிந்துகொண்டபின் நாம் பாவம் செய்தால் அது மிகக் கடுமையாக தேவனால் பார்க்கப்படும். எனவே, தேவனை அறிந்த கிறிஸ்தவர்கள் வாழ்வில் அதிகக்  கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

இந்த வசனத்தில் தேவனை அறியாத நமது பழைய காலத்தை குருடர்களுக்கும் கிறிஸ்துவை அறிந்த வாழ்க்கைக்கு கண் திறந்து காணக்கூடிய புதிய வாழ்க்கைக்கும்  ஒப்பிடப்பட்டுள்ளது. மட்டுமல்ல, குருடனாகவே இருந்திருந்தால் பாவம் இருக்காது; கண்திறந்து பார்வை அடைந்துள்ளோம் என்று கூறுவதால் நமது பாவம் நிலை நிற்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவரிடம் அவருக்கு கொடுக்கப்பட்ட அளவுக்குத்தான் கணக்குக் கேட்கமுடியும். அதுபோல தேவனையே அறியாதவனிடம் அந்த அளவுக்குத்தான் தேவன் எதிர்பார்ப்பார். ஆனால், "நான் தேவனை அறிந்திருக்கிறேன்" என்று கூறிக்கொண்டு, பெருமையுள்ளவர்களாகி ஒருவர் செய்யும் தவறான செயல்கள் தேவனால் கடுமையான தண்டனைக்குரிய ஒன்றாக பார்க்கப்படும். இதனையே, "நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது" என்கின்றார் இயேசு.  

தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய சபையினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளும் இப்படி இருக்கின்றனர். தாங்களே தேவனை அறிந்தவர்கள், மற்றவர்கள் இருளின் மக்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். 

இப்படித் தாங்கள் மட்டுமே சீயோனுக்குத் தகுதியுள்ளவர்கள் மற்ற சபையினர் நரகத்தின் மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால்  காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள். 

தங்களை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கை மாற்றமில்லாமல் வெறுமனே கூப்பாடுபோட்டு ஜெபித்துக் கொண்டிருந்தால் காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

மற்ற சபையினரையும் பிற மத மக்களையும் இருளின் மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால், காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

இயேசு கிறிஸ்து கூறினார், "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்." ( லுூக்கா 12 : 48 )  மனிதர்களே அப்படியானால் தேவன் எவ்வளவு அதிகம் கேட்பார்!!!

எனவே அன்பானவர்களே, ஏதேனும் தியானங்களில் கலந்துகொண்டு கிறிஸ்துவை வாழ்வில் லேசாக ருசித்த அனுபவம் பெற்றவுடன் நாம் மற்றவர்களைவிட மேலானவர்கள் எனும் எண்ணம் வந்துவிடக்கூடாது.  பெற்றுக்கொண்ட அந்த அனுபவத்தில் முழுமையடையவேண்டும்.  அறிந்த கிறிஸ்துவை வாழ்வில் நாம் பிரதிபலிக்கவேண்டும்.  அதே ஆவிக்குரிய அனுபவத்தில் வாழ்வின் இறுதிவரை நாம் நிலைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்து நம்மைப் பார்த்தும் இன்றைய தியான வசனத்தில் கூறியதுபோலக் கூறுவார், "நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." 

ஆம், கிறிஸ்துவை அறிந்துள்ளேன் என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத தகாத குணங்கள் இருக்குமானால் அவைகளை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மனத்தாழ்மையுடன் வாழ முயலவேண்டும். இல்லாவிட்டால் நாம் அவரை அறியாமலேயே இருந்திருப்பது அதிக நன்மையானதாக இருக்கும். சில அடிகள் மட்டுமே அடிக்கப்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

No comments: