'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,158 💚 ஏப்ரல் 11, 2024 💚 வியாழக்கிழமை 💚
"துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 24 )
தேர்தல் காலத்தில் நமக்கு உணர்வூட்டக்கூடிய வசனம் இன்றைய தியான வசன மாகும். பொதுவாக அரசியல்வாதிகள் பலரும் துன்மார்க்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்குள் நாம் கலக்கமில்லாமல் அமைதலான வாழ்க்கை வாழ உதவக்கூடிய மனிதர்களைப் பொறுக்கியெடுத்து நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
துன்மார்க்கருக்கு வேதாகமம் குறிப்பிடும் அடையாளங்களைப் பார்த்து நாம் ஒருவரைத் தள்ளி இன்னொருவருக்கு வாக்களிக்கவேண்டுமானால் இன்றைய சூழலில் நாம் யாருக்கும் வாக்களிக்கமுடியாது. ஆனால் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நாம் நமது கடமையைச் செய்யவேண்டியது அவசியம். எனவே, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு வழங்கக்கூடியவர்களையும் கொடூரமான சட்டங்களால் மக்களை வதைக்காதவர்களையும் நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
இன்றைய வசனம், "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்." என்று கூறுகின்றது. எனவே, நாம் மேலே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு வழங்கக்கூடியவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டியுள்ளது. இப்படி இவற்றுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு நாம் வாக்களிக்கும் போது "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய்" என்று நாம் கூறுவதாகப் பொருள்.
ஆனால் கிறிஸ்தவர்களில் சிலர் இப்படி நீதி, நேர்மை, சம உரிமை, சாமவாய்ப்பு இவற்றை மறுக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டுகின்றனர். சிலர் அத்தகைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர்; வேட்பாளர்களாகவும் நிற்கின்றனர். இவர்களைப்பார்த்து வேதம் எச்சரிக்கின்றது, "தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 5 : 20 )
மேலும், "ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ! விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?" ( ஏசாயா 10 : 1-3 ) என்கின்றார் உன்னதமான கர்த்தர்.
மேற்படி வசனங்களில் "ஐயோ" எனும் வார்த்தை மறைமுகமாகச் சாபத்தைக் கூறுகின்றது. அதாவது அப்படிப்பட்டவன் கடவுளின் பார்வையில் ஐயோ என்று போய்விடுவான். கைவிடப்பட்டுக் கடவுளின் சாபத்தைப் பெறுவான். மட்டுமல்ல, இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களித்து துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, அத்தகைய மனிதன் கடவுளின் சாபத்தையும் மனிதர்களின் சாபத்தினையும் பெறுவான். "விசாரிப்பின் நாளிலும் (நியாயத்தீர்ப்பு நாளில்) தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்?" என்கின்றார் தேவன்.
எனவே, நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை சமநீதி, சமவாய்ப்பு வழங்கக்கூடியவர்களையும், கொடுமையான சட்டங்களை எழுதி, செயல்படுத்தி மக்களை வதைக்காதவர்களையும் தேவன் நமக்குத் தலைவராகத் தரும்படி ஜெபிக்கவேண்டியதும் அத்தகைய கட்சியினருக்கு வாக்களிக்கவேண்டியதும் நமது கடமையாகும். மாறாக, அத்தகையவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆதரவளிப்பது வேதாகமத்தின் அடிப்படையில் நமக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் சாபத்தைக் கொண்டுவரும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment