நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,170      💚 ஏப்ரல் 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚



"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

நமது ஜெபம் தேவனால் கேட்கப்படவேண்டுமானால் தேவன் கூறும் ஒரு நிபந்தனை நாம் பிறரது குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பதே. அதாவது பிறருடன் இணக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும்.  வெறுப்பையும் கசப்பையும் பிறர்மேல் வைத்துக்கொண்டு நாம் ஜெபிப்பது அர்த்தமற்ற ஜெபம். "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;" (  லுூக்கா 11 : 4 ) என்று கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி பிறர்மேல் எந்தக் கசப்புமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்து வாழ்பவர்களே நீதிமான்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இத்தகைய "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

இப்படித்தான் தானியேல் தீர்க்கத்தரிசி ஜெபித்துக் கொண்டிருந்தார். தனது பாவங்களுக்காகவும் மக்களது பாவங்களுக்காகவும் தானியேல் விண்ணப்பம் செய்தார். இதனை நாம், "இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்." ( தானியேல் 9 : 20 ) என்று தானியேல் கூறுவதிலிருந்து அறியலாம்.

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்ற வசனத்தின்படி தானியேல் ஊக்கமாய் "ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன்  வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். (  தானியேல் 9 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது தானியேலின் ஜெபம் தேவ சந்நிதியை எட்டிய அதே நொடியில் தேவன் காபிரியேல் தூதன் மூலம் அந்த ஜெபத்துக்குப் பதிலையும் கொடுத்தனுப்பினார். "நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்;" ( தானியேல் 9 : 23 ) என்று காபிரியேல் தூதன் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தானியேல் போல நாம் நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் அதே வேளையில் தானியேலைபோல தேவனுக்கு முன்பாகவும் உலக காரியங்களிலும் குற்றமற்றவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.  ( தானியேல் 6 : 22 )  அப்படி நாம் பரிசுத்தமாய் நம்மைக் காத்துகொண்டு ஜெபிக்கும்போது தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் தருவார்.  "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு" இப்படிச் செய்யுங்கள் என்று இன்றைய தியான  வசனம் கூறுவதுபோல நாம் நமது வியாதிகளிலிருந்தும் , பிரச்சனைகளிலிருந்தும்  விடுதலையடைவோம்.

தானியேலின் ஜெபத்துக்கு ஜெபித்த அதே நேரம்  பதிலளித்த தேவன் நமது ஜெபத்துக்கும் நிச்சயம்  பதிலளிப்பார். ஆம், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்