'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,175 💚 ஏப்ரல் 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." ( எபேசியர் 5 : 30 )
திருச்சபை என்று நாம் கூறுவது உலகிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைப்பிரிவுகளைக் குறிப்பதாக இருந்தாலும் வேத அடிப்படையில் திருச்சபை என்பது விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது. கூட்டம் என்று சொல்வதால் பெரிய எண்ணிக்கையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. இரண்டு மூன்று விசுவாசிகள் சேர்ந்திருந்தாலும் அது ஒரு சபை. இப்படி கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு சபையாக வாழும் நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளான சபைக்குமுள்ள உறவினை கணவன் மனைவி உறவுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கணவனும் மனைவியும் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து அவர்களுக்குள் ஒரே உறவாக இருப்பார்கள். அதுபோல கிறிஸ்தவ விசுவாசியும் அதுவரை வாழ்ந்த உலக வாழ்க்கையைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு ஐக்கியமாக வாழவேண்டும் என்கின்றார்.
இதனையே, "இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார்.
எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் கணவன் மனைவிக்குமுள்ள உறவினை திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஐக்கியத்துக்கு ஒப்பிட்டுப் பல காரியங்களைக் கூறுகின்றார். அவர் கூறும் காரியங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும் சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவுக்கும் பொருந்தும்.
இப்படி அவர் கூறும் முக்கியமானஒரு காரியம், "தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்." ( எபேசியர் 5 : 29 ) இந்த உலகினில் கணவன் மனைவியைப் பராமரித்துக் காப்பாற்றுகின்றான். அதுபோல கிறிஸ்துவின் சபையை பாராமரித்துக் காப்பவர் ஊழியர்களோ விசுவாசிகளோ அல்ல. மாறாக, கர்த்தர். கர்த்தர் எப்படி தனது சபையினைக் காப்பாற்றி பராமரித்து நடத்துகின்றாரோ அதுபோல கணவனும் மனைவியைக் காத்து நடத்தவேண்டும்.
இன்றைய தியான வசனம் கூறுவது இரண்டு விதங்களில் பொருந்தக்கூடியது. ஒன்று குடும்ப உறவு. இரண்டு கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவு. இந்த உறவுபடி கணவனும் மனைவியும் உறவோடு இருக்கவேண்டும். அதே உறவோடு விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவுடன் இருக்கவேண்டும். காரணம் நாம் அனைவருமே அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
கணவன் மனைவி உறவினை அப்போஸ்தலராகிய பவுல் இங்கு முன்னிலைப்படுத்துவதுபோல சில இடங்களில் குறிப்பிட்டாலும் சபையாகிய விசுவாசிகளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவையே முக்கியமாக அவர் தெளிவுபடுத்த முயலுகின்றார். எனவேதான் அவர், "இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." என்று முடிக்கின்றார்.
அன்பானவர்களே, தகப்பனையும் தாயையும் விட்டுப்பிரிந்து கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல உலக ஆசை இச்சைகளை விட்டுப் பிரிந்து எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திடாமல் வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். ஆம், நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment