ஆதவன் 🌞 825🌻 மே 02, 2023 செவ்வாய்க்கிழமை
"என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்." ( உன்னதப்பாட்டு 5 : 3 )
வஸ்திரம் அல்லது ஆடை என்பது வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள கழற்றிப்போடப்பட்ட ஆடை பாவ ஆடையினைக் குறிக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறும்போது நமக்கு இரட்சிப்பின் ஆடை உடுத்தப்படுகின்றது. ஆம், நாம் நமது பாவ ஆடைகளைக் களைந்துவிட்டு புதிய ஆடைகளை உடுத்துகின்றோம்.
புதிய ஆடை என்பது "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) எனவேதான் என் பழைய பாவ வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன்? என்று கூறப்பட்டுள்ளது.
ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் திருமண ஆடையில்லாதவன் வெளியேற்றப்படுவதை இயேசு உவமைமூலம் நமக்கு விளக்கினார். "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்." ( மத்தேயு 22 : 12 ) அவனை வெளியேற்றி தண்டனைக்கு நேராக அனுப்பினார்கள்.
இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக நாம் "என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" என்றும் வாசிக்கின்றோம். இதுவும் பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளம்தான். தனது இறுதி உணவின்போது இயேசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அப்போது "பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது என்றார். இயேசு அவருக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்." ( யோவான் 13 : 8 ) ஆம், பாதங்களைக் கழுவுவது பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படிப் பாவங்கள் கழுவப்பட்டு சுத்தமாக்கப்பட்ட நான் எப்படி என் பாதங்களை மீண்டும் அழுக்காக்குவேன்? எனக் கேட்கின்றது இன்றைய வசனம்.
அன்பானவர்களே, இன்றைய வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனம் கூறுகின்றது, "என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது." ( உன்னதப்பாட்டு 5 : 4 ). ஆடை அழுக்கடையாமல், பாதங்கள் அழுக்காகாமல் காத்துக்கொள்ளும்போது "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என இதயக் கதவுகளைத் தட்டும் இயேசு நாம் கதவைத் திறக்குமுன்பே கதவுத் துவாரத்தின் வழியாய்க் கையைநீட்டி நம்மை அணைக்கத் தயாராக இருக்கின்றார். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.
பாவம் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" எனக் கேட்டு பாவத்துக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்வோம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment