ஆதவன் 🌞 835🌻 மே 12, 2023 வெள்ளிக்கிழமை
"வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ( ஏசாயா 59 : 19 )
அநேகம் மக்கள் தங்களது வாழ்க்கையில் வரும் துன்பங்கள், நோய்கள், பிரச்சனைகளுக்கு சாத்தான் அல்லது சத்துருவானவன்தான் காரணம் என்று எண்ணிக்கொள்கின்றனர். "பிரதர், ஒரே சத்துரு போராட்டமாய் இருக்கிறது, எனக்காகவும் எனது குடும்பத்துக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று சிலர் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு.
சத்துருவானவன் அல்லது சாத்தான் மனிதர்களது ஆத்துமாவை அழித்து ஒழித்திட அதாவது நம்மை தேவனை விட்டுப் பிரித்து நமது விசுவாச வாழ்வைச் சீர்குலைத்திட, ஆதிகாலமுதல் போராடிக்கொண்டிருக்கிறான். கோடிக்கணக்கான ஆத்துமாக்களையும் அழித்துக்கொண்டிருக்கிறான். சாத்தான் என்றால் கருப்பு உடலமைப்பு, கோரமான பற்கள், பார்க்கவே பயங்கரமானதும் அருவெறுப்புமான தோற்றம் இவைகளே நமது கண்களுக்குமுன் வரும். ஆனால் இவை மனிதர்களால் கற்பனைசெய்யப்பட்டத் தோற்றமே.
ஆதியில் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான், ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன், என வேதாகமத்தில் சாத்தானைக் குறித்து பின்வருமாறு வாசிக்கின்றோம்:-
"....கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது........" ( எசேக்கியேல் 28 : 12, 13 )
இப்படி ஞானமும் அழகும் நிறைந்தவன்தான் சாத்தான். மனிதர்களை எப்படி வஞ்சிக்கவேண்டுமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சாத்தான் பெரு வெள்ளம் மக்களை அழித்தொழிக்க வருவதுபோல ஆக்ரோஷமாக போராடிவருகின்றான். ஆனால் நாம் ஆவிக்குரிய பலமுள்ளவர்களாக வாழும்போது அவனால் நம்மை நெருங்க முடிவதில்லை. ஆவியானவர் அவனுக்கு எதிராகக் கொடியேற்றுவார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
கொடியேற்றுவது வெற்றியின் அடையாளம். அன்று தமிழ் மன்னன் சேரன் இமயத்தில் கொடி ஏற்றினான் என்று படிக்கின்றோம். நிலவில் கால்பதித்த மனிதன் அங்கு அமெரிக்க நாட்டின் கொடியைப் பறக்கவிட்டான். அதாவது கொடியேற்றுவது அந்த இடத்தை வெற்றிகொள்வதைக் குறிகின்றது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. சாத்தான் வெள்ளம்போல எதிர்த்து வந்தாலும் கர்த்தர் அவனுக்கு விரோதமாய்ப் போராடி வெற்றிக்கொடி ஏற்றுவார்.
மேலும், "தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்." ( சங்கீதம் 74 : 13 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவனுக்கேற்ற ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது சத்துருவான வலுசர்ப்பம் நமது வாழ்வில் எத்தகைய வெறித்தனமான தாக்குதல் நடத்தினாலும் கர்த்தருடைய ஆவியின் வல்லமையால் அவனை வெற்றிகொண்டு நாம் வெற்றிகொடியேற்ற முடியும்.
எனவே, சத்துருவான சாத்தானின் செயல்பாடுகளைக்கண்டு நாம் அஞ்சிடவேண்டாம். நமது ஆவிக்குரிய வாழ்வைப் பலமுள்ளதாக்குவோம். "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்." ( ரோமர் 16 : 20 )
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment