ஆதவன் 🌞 840🌻 மே 17 2023 புதன்கிழமை
"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே" ( கலாத்தியர் 4 : 10 )
நாம் நமது நாட்டின் கலாச்சாரத் தாக்கத்தால் பல்வேறு காரியங்களை விடமுடியாமலிருகின்றோம். அதில் ஒன்றுதான் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தல். இது அவிசுவாசத்தால் மனிதர்கள் செய்யும் காரியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புவித்துவிட்டோமென்றால் அவரே நம்மை நடத்துவார் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படும். அப்படி இல்லாததால் நல்ல நாள் நல்ல நேரம் பாகின்றனர் பலர். காலங்கள் தேவனது கரத்தில் இருக்கின்றன. நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்போமானால் நமக்கு ஏற்றபடி அனைத்தையும் நலமாக நமக்கு நடத்தித் தருவார்.
இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும்கூட நேரங்களையும், நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்த்துச் செயல்படுவது நாம் அறிந்ததுதான். சில கிறிஸ்தவர்கள் இதற்குமேலும் பல காரியங்களைச் செய்கின்றனர். பிற மதத்தினர் செய்வதுபோல ஜாதகம், ஜோசியம், குறிகேட்டல் போன்றகாரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கிப் பயணித்தபோது எதிர்ப்பட்ட பல்வேறு இன மக்களை அழித்து வெற்றிகொண்டனர். அப்படி அந்த மக்கள் இஸ்ரவேல் மக்களால் அழிக்கப்பட அவர்களது இத்தகைய தேவன் வெறுக்கும் செயல்பாடுகளே காரணமாய் இருந்தன. எனவேதான் தேவன் அவர்களை இஸ்ரவேல் மக்கள் மூலம் அழித்தார். எனவே, நீங்கள் அந்த மக்கள் செய்ததுபோல செய்யாதிருங்கள் என்று தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்
"........ குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை (கானானியரை) உன் முன்னின்று துரத்திவிடுகிறார்."( உபாகமம் 18 : 11, 12 )
கலாத்திய சபையினரும் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அறிவுறுத்தவே இதனை எழுதினார். இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்களில் பவுல் கூறுகின்றார், "நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?" ( கலாத்தியர் 4 : 8, 9 ) அதாவது தேவனை அறிந்த நீங்கள் எப்படி இந்தச் செயல்களில் ஈடுபடலாம் என்கின்றார்.
கிறிஸ்துவை அறியாதகாலங்களில் இப்படி இருந்திருந்தாலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன் என்று கூறுபவர்கள் இத்தகைய அவிசுவாச செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக உறுதியாக ஏற்றுக்கொள்வோமானால் அவர் நமக்கு தீங்கான எந்தச் செயலையும் செய்யமாட்டார்; நமக்கு எதிராக வரும் சத்துருக்களின் வல்லமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவார்.
நம்மருகினில் வசிக்கும் மக்கள் செய்கிறாரகளே என்று நாம் இவைகளைச் செய்யும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம்; கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கின்றோம் என்று பொருள். கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எல்லா நாளும் எல்லா நேரமும் நல்லவையே.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment