ஆதவன் 🌞 834🌻 மே 11, 2023 வியாழக்கிழமை
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." ( 1 பேதுரு 5 : 8 )
அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார். ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லை. பெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவன் வைராக்கியமாக இருக்கின்றான். இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.
இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார். அதனால் தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான். தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான்.
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )
ஆனால் மனிதர்கள் நாம் பெரும்பாலான வேளைகளில் இந்த வசனத்துக்கு மாறி நிற்கின்றோம். பிசாசைக் கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று தோல்வியடைந்து பாவத்தில் விழுகின்றோம். காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லை. பிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான்."இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான்.
எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்". ( யோவான் 8 : 44 )
இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார். போர் செய்பவன் எப்படித் தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார். இதனைப் பவுல் அடிகள்,
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". ( எபேசியர் 6 : 11 ) "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" ( எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார். அவை என்ன கவசங்கள், ஆயுதங்கள் ?
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய், தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் ( எபேசியர் 6 : 14-17 )
மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக் கவசங்களையும், போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.
இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment