ஆதவன் 🌞 827🌻 மே 04, 2023 வியாழக்கிழமை
"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )
இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சபை பாகுபாடுகள் மட்டுமல்ல, தாங்கள் சார்ந்திருக்கும் சபையும் அதன் போதனைகளும்தான் சரியானவை என்பதனை நிரூபிக்க நடைபெறும் தேவையில்லாத வாக்குவாதங்கள். நியாயப்பிரமாண கட்டளைகள் குறித்து வெவ்வேறுசபைகளும் கூறும் விளக்கங்கள். இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் புத்தியீன தர்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
இத்தகைய தர்க்கங்களும் சண்டைகளும் நம்மை ஒரு மதவாதியாக காட்டுமேதவிர ஆவிக்குரிய மக்களாக அடையாளம் காட்டாது. எனவே இத்தகைய தர்க்கங்களைவிட்டு நாம் விலகி இருக்கவேண்டும் என்று கூறுகின்றார் பவுல் அடிகள். கிறிஸ்துவை வாழ்வில் ருசித்தவன் கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்பான், போதிப்பான் அவர் நடந்தபடியே நடப்பான்.
இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூதர்களுக்கு சரியான மேசியா யார் என்பதை அடையாளம் காண்பிக்கவேண்டியிருந்தது. அந்தக் காலத்திலேயேகூட இயேசு கிறிஸ்து வீண் தர்க்கங்கள் செய்துகொண்டு இருக்கவில்லை. சத்தியத்தைச் சொல்லிவிட்டு, "கேட்க செவியுள்ளவன் கேட்கக்கடவன்" என்று கூறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஏனெனில் தர்க்கம் செய்வது அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
சபைகள் நம்மை இரட்சிக்கமுடியாது; கிறிஸ்து ஒருவரே நம்மை இரட்சிக்கமுடியும். ஆனால், முதல்கால கிறிஸ்தவர்களிடையேகூட பிரிவினையும், குறிப்பிட்ட ஊழியர்களைச் சார்ந்து வாழும் அவலமும் இருந்தது. எனவேதான் பவுல் அடிகள், "உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்" ( 1 கொரிந்தியர் 1 : 12 ) என்று எழுதுகின்றார்.
புத்தியீனமான தர்க்கங்கள், வம்சவரலாறுகள், சண்டைகள், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்கள் இவைகள் எந்த உபயோகமும் இல்லாதவை. உண்மையில் அவைகள் வீண். எனவே, நாம் எந்தச்சபைப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்து ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசவேண்டும். வீண் தர்க்கங்கள், சபை போதனைகளின் விளக்கங்கள் இவை தேவையில்லாதவை.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார். தர்க்கம் செய்பவன் கிறிஸ்துவை இன்னும் சரியாக அறியவில்லை என்று பொருள். சபை வெறிகொண்ட சில பாரம்பரிய சபைகளைச் சார்ந்தவர்களுக்கு எனது தினசரி தியானம் பிடிக்கவில்லை. அவர்கள் என்னோடு தர்க்கம் செய்வதில்லையென்றாலும் மனதளவில் வெறுக்கிறார்கள். ஆம், இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைகளை அறிந்தவர்களேதவிர கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல.
சபைகளைச் சார்ந்திருப்பது தவறல்ல; காரணம் நாம் கட்டாயமாக ஒரு சபையோடு இணைந்திருக்கவேண்டும். அதேவேளையில் கிறிஸ்துவை யார் போதித்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனமும் வேண்டும். அத்தகைய குணமுள்ளவர்களே மேலான ஆவிக்குரிய வளர்ச்சி அடையமுடியும். தர்க்கங்களைவிட்டு விலகுவோம் ;கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment