ஆதவன் 🌞 826🌻 மே 03, 2023 புதன்கிழமை
"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )
நமது தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். மனிதர்கள் தங்களது பலவீனங்களால் பாவத்தில் விழுந்தாலும் உடனேயே அவர்களைத் தண்டித்துவிடுவதில்லை.
குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் கோபப்படுவது இயல்பு. ஆனால் உடனேயே பெரிய தண்டனையைக் கொடுப்பதில்லை. கோபத்தில் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தாலும் மீண்டும் குழந்தைகளை அணைத்துக்கொள்வர். காரணம் தவறு செய்யும் குழந்தைகளிடம் தொடர்ந்து கோபத்தில் இருப்போமானால் அந்தக் குழந்தை மனமடிவடைந்திடும்.
இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்று.
மனிதனை உருவாக்கிய ஆரம்பத்திலேயே தேவன் கூறுகின்றார், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3 )
அதாவது மனிதன் வெறும் இரத்தமும் சதையுமுள்ள மாம்சமானவன். அந்த மாம்ச இயல்பு அவனைத் தொடர்ந்து பாவம் செய்யத் தூண்டுகின்றது. கூடிப்போனால் அவன் 120 ஆண்டுகள் பூமியில் வாழ்வான். இது தேவனுக்குத் தெரியும். எனவே தொடர்ந்து அவர் மனிதனோடு போராடிக்கொண்டிருக்கமாட்டார்.
இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 ) என எழுதுகின்றார்.
அதற்காக நாம் பாவம் செய்வது நியாயமென்று எண்ணிவிடக்கூடாது. பாவத்துக்கு எதிராக நாம் போராடும் போராட்டங்களைத் தேவன் பார்க்கின்றார். உண்மையிலேயே நமது பாவங்களுக்காக நாம் ஆத்துமாவில் வருத்தப்படுவோமானால் தேவனது ஆவியானவர் நமக்கு உதவுவார். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திட ஒப்புக்கொடுக்கவேண்டும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர் களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
கிறிஸ்துவின் ஆவியைப் பெற வேண்டுவோம். அப்போதுதான் அவர் பாவத்தைக்குறித்து உணர்த்துவதை நாம் அறிய முடியும். அப்படி ஆத்துமாவில் பாவ உணர்வுள்ளவர்களாக வாழ்வோமானால் அவர் எப்போதும் நம்மோடு வழக்காடமாட்டார்; நம்மீது என்றைக்கும் கோபமாயிருக்கவுமாட்டார்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment