ஆதவன் 🌞 837🌻 மே 14, 2023 ஞாயிற்றுக்கிழமை
"என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." ( சங்கீதம் 18 : 19, 20 )
தாவீது ராஜா தனது வாழ்வின் ஆரம்பகாலமுதல் பல்வேறு பிரச்சனைகளையும் சோதனைகளையும் சந்தித்துவந்தார். உயிரே போகக்கூடிய நிலைமையையும் அவர் பல வேளைகளில் சந்தித்தார். தாவீதை எப்படியாவது கொலைசெய்திட வேண்டுமென்று சவுல் வெறிகொண்டு அலைந்தான். ஆனால் தாவீது கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழத் தீர்மானித்து வாழ்ந்ததால் தேவன் தாவீதைத் தப்புவித்தார். மட்டுமல்ல, தேவனது இருதயத்துக்குப் பிரியமானவன் என்று தாவீது பெயர் பெற்றார்.
ராஜாவாயிருந்த சவுலைத் தள்ளிவிட்டு, "....தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்." என்று வாசிக்கின்றோம்.
( அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 : 22 ) ஆம்; தாவீது கர்த்தருக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்தார்.
எனவே தேவன் தாவீதோடு இருந்து அவரைக் காப்பாற்றி மொத்த இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார். இதனைத்தான் தாவீது இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் குறிப்பிடுகின்றார்: "என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." என்று.
அன்பானவர்களே, நமது தேவன் நீதியைச் சரிக்கட்டக்கூடிய தேவன். அவர் யாருக்கும் கடனாளியாவதில்லை. நாம் செய்யும் நீதிக்குத் தக்கதாகவும் அதற்குமேலும் அவர் நமக்குச் செய்ய ஆர்வமாயிருக்கிறார்.
நாம் நமக்கு தேவன் என்னென்ன செய்யவேண்டுமென்று பட்டியலிட்டு வேண்டுதல் செய்கின்றோம். ஆனால் அவற்றை நிறைவேற்ற தேவன் விரும்புவது ஒன்றே. அது நீதியுள்ள வாழ்க்கை; பாவமற்ற, கைகள் தூய்மையான ஒரு வாழ்க்கை. இப்படி வாழ்ந்ததால், என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார் என்கின்றார் தாவீது.
நமது தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லை. தாவீதுக்குச் செய்தாரென்றால் நிச்சயமாக நமக்கும் செய்வார். நாம் பலவேளைகளில் ஜெபங்களுக்கும் இதர ஆவிக்குரிய காரியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துவிட்டுத் தாவீது கூறும் நீதி, நேர்மை, தூய்மை போன்ற காரியங்களில் தவறிவிடுகின்றோம்.
தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது, நம்மேல் அவர் பிரியமாயிருந்து, விசாலமான இடத்திலே நம்மைக் கொண்டுவந்து, நம்மைத் தப்புவிப்பார். நமது கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டுவார்."
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment