Saturday, May 06, 2023

பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம்

ஆதவன் 🌞 831🌻 மே 08, 2023  திங்கள்கிழமை     



             


"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் பெறும்போது நாம் புதிய மனிதனாகின்றோம்; நமது மனமும் புதிதாகின்றது. இப்படி நாம் மாற்றப்படுவதால் நம்மால் இந்த உலகத்தோடு பல விஷயங்களில் ஒத்துபோகமுடிவதில்லை. 

ஆனால், ஆவிக்குரிய அனுபவங்களைச் சுவைத்தபின்னரும் சிலர் உலக நன்மைகளுக்காக இந்த உலக மனிதர்களுக்கு ஒப்பாக தங்களை மாற்றிக்கொள்கின்றனர். அதாவது தங்களது சுய லாபத்துக்காக சாதாரண மனிதர்களைப்போல நடந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்ற அனுபவங்களை துணிந்து மறந்துவிடுகின்றனர். இதனையே இன்றைய வசனம் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் என்று  கூறுகின்றது. 

ஆவிக்குரிய மனிதர்களாகிய நாம் இப்படி வேடம்தாரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக வாழவேண்டும். நமது மனம் கிறிஸ்துவினால் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படி நாம் வாழும்போது ஆவிக்குரிய வாழ்வில் மறுரூபமடைந்து மேலும் மேலும் வளர்ச்சியடைவோம். 

இப்படி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று இதற்கு முந்தின வசனத்தில் பவுல் அடிகள் விளக்குகின்றார்.  அதாவது நாம் வீண் ஆராதனை செய்யாமல் புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக இருக்கவேண்டும். அது என்ன புத்தியுள்ள ஆராதனை? நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ( ரோமர் 12 : 1 ) இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

அன்பானவர்களே, நாம் நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் உலகத் தேவைகளுக்காக பிற மனிதர்களைப்போல வேஷம் தரிக்கமாட்டோம்.

பரிசுத்தவான்கள் எல்லோருமே இப்படி வாழ்ந்தவர்கள்தான். தங்களது உயிரே போகக்கூடிய நிலையிலும் அவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகாமல் கிறிஸ்துவுக்காகத் தங்களது உயிரையும் கொடுத்தனர். இன்று நமக்கு அப்படி உயிரைக் கொடுக்கத்தக்க இக்கட்டுகள் ஏற்படவில்லை. விசுவாசத்தை லேசாக அசைக்கும்  சிறிய சிறிய நெருக்கடிகள், துன்பங்கள்தான் நமக்கு ஏற்படுகின்றன. எனவே கபட வேடம் தரிக்காமல், உலக மனிதர்கள் எல்லோரும் இப்படிச் செய்கிறார்களே நாமும் செய்தால் என்ன என எண்ணாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து வாழ்ந்து நமது மனங்களை மறுரூபமாக்குவோம்  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: