Sunday, May 14, 2023

ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;

ஆதவன் 🌞 839🌻 மே 16 2023  செவ்வாய்க்கிழமை  


















"அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 41, 42 )


இன்று கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும்  பலரும் வேதாகமக் கல்லூரிகளில் படிப்பதையும், பல்வேறு பட்டங்களையும் திருச்சபைப் பதவிகளை அடைவதையும் பெருமையாக  எண்ணிக்கொள்கின்றனர். வேதாகமத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று தங்கள் பெயருக்குமுன் அதனைப் பதிவுசெய்வதிலும்  ஆர்வமாக இருக்கின்றனர். வேத அறிஞர், தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர் எனது தங்களை அழைத்துக்கொள்வதில் மனதளவில் இன்பம் காணுகின்றனர்.   

ஆரம்ப கால கிறிஸ்தவ ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள் இதற்கு மாறாக, கிறிஸ்துவின் பெயருக்காக தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷப்பட்டார்கள் என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். ஆம், உலக மனிதர்களால் அற்பமாக எண்ணப்படுபவர்களையே தேவன் உயர்த்தி ஆசீர்வதித்து அவர்கள்மூலம் பல ஆவிக்குரிய ரகசியங்களை வெளிப்படுத்துகின்றார். 

வேதாகம கல்லூரி படிப்பு படிக்காத பலர்தான் ஆவிக்குரிய மேலான அனுபவம் உள்ளவர்களாக இருப்பதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன். என்னை ஆவிக்குரிய வாழ்வில் ஆரம்பத்தில் வழிநடத்திய இந்தியன் பெந்தெகொஸ்தே சபை (IPC) பாஸ்டர் பெரியவர் ஜாண்சன் டேவிட் அவர்கள் வேதாகம கல்லூரியில் படித்தவரல்ல. ஆனால் அவரைப்போல தேவ அனுபவமும் வழிநடத்துதலும் வெளிப்பாடுகளும் பெற்ற ஊழியர்களை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் பலரும் அவரை அற்பமான மனிதராகவே கருதினர்.   

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் - 1:27, 28)

அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன அப்போஸ்தலர்களால் ;  அவர்களது பிரசாங்கத்தால் ஐயாயிரம், மூவாயிரம் என மக்கள் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்வர்களாக மாறினர்.  ஆனால் அப்போதிருந்த ஞானிகள் கிறிஸ்துவை அறியவில்லை.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நாம் அறிவிப்பதால் நமது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்  நம்மைப்பற்றி என்ன எண்ணுகின்றார்கள் என்று நாம் கவலைப்படவேண்டியதில்லை. புகழ் பெற்ற ஊழியர்களைப்போல நாம் இல்லை என்பதால்  நம்மைக்குறித்துச் சிலர்  அற்பமாக எண்ணலாம்;  பணத்துக்காக ஊழியம்செய்ய வந்ததாக பலர் எண்ணலாம். ஆனால் நமது உண்மையான எண்ணமும் நாம் செய்யும் பணிகளும் இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். 

சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியேறி இயேசுவே கிறிஸ்து என்று அறிவித்த அப்போஸ்தலர்களைப்போல பிறரால் அற்பமாக எண்ணப்படும் நாமும் கிறிஸ்துவை அறிவிப்போம்.  கர்த்தர் நம்மைக்கொண்டும் பலரை தனதுபக்கமாகத் திரும்புவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: