Thursday, May 04, 2023

எல்லா மனிதர்களிடமும் அன்புகூருவோம்

ஆதவன் 🌞 828🌻 மே 05, 2023 வெள்ளிக்கிழமை       


"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து....." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 12 )

தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கச்சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனையை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் விரிவாக விளக்குகின்றார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் அப்படி வரும்போது நாம் தேவனுக்குமுன் பிழையற்றவர்களும், பரிசுத்தமானவர்கலாகவும் இருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தின் தொடர்ச்சியினை வாசித்தால் இதனைப் புரிந்துகொள்ளலாம். இங்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 ) என்று எழுதுகின்றார். 

அதாவது, நாம் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்புச்செய்தால்  மட்டும் போதாது  மற்ற எல்லோரிடமும், எல்லா மத இன மக்களுக்கும் அன்புசெலுத்தவேண்டும் என்கின்றார். இதனை, "நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும்.." எனக் கூறுகின்றார். இப்படி அன்பு  செலுத்தினால் மட்டுமே நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்த முள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை தேவன் ஸ்திரப்படுத்துவார் என்கின்றார். 

அப்போஸ்தலரான பவுல் இதனை வெறும் அறிவுரையாகக் கூறாமல், தானும் இதனைக் கடைபிடிப்பதால் கூறுகின்றார். அதனைத்தான், நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், என்று எழுதுகின்றார்.

ஆம், நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் மாற முதல்படி எல்லோரையும் அன்புசெய்வதுதான். ஜாதி,  மத இனம் பார்க்காமல் அன்பு செய்வது. ஏனெனில் இதுவே தேவனது குணம். இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் எல்லோரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தேவன் எல்லோரையும் ஒன்றுபோலப் பார்ப்பதால் எல்லோரும் தேவ நன்மைகளைப் பெறுகின்றனர். 

ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் நம்மைப் பெருகச்செய்ய வேண்டுவோம். அப்போது  நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி நமது இருதயங்களை தேவன்  ஸ்திரப்படுத்துவார்" ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: