Tuesday, May 16, 2023

தேவனிடத்தில் மன்னிப்பு உண்டு

ஆதவன் 🌞 841🌻 மே 18, 2023  வியாழக்கிழமை            


"கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு." ( சங்கீதம் 130 : 3, 4 )

நமது தேவன் மன்னிக்கிறதற்கு தயை நிறைந்தவர். மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பது அவருக்குத் தெரியும். மனிதர்களது பாவங்கள் அக்கிரமங்களை அவர் மன்னியாதிருப்பாரானால் இந்த உலகத்தில் எவருமே நிலைநிற்க முடியாது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தண்டிப்பதற்கல்ல, மாறாக பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 ) என்று கூறுகின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னைப்பற்றிக் கூறும்போது,  "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்." ( யோவான் 3 : 17 ) என்று கூறினார். 

கிறிஸ்தவத்தின் அடிப்படையே மன்னிப்புதான். வேண்டாதவர்களை அழித்து ஒழிப்பது தெய்வீகமல்ல, மாறாக வேண்டாத துன்மார்க்கரையும் மனிதனாக மாற்றி  கிறிஸ்துவின் அன்பில் பங்குகொள்ள வைப்பதுதான் தெய்வீகத்தின் உட்சம். துன்மார்க்கரும், பாவிகளும் மனம்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு நேராகத் திரும்பிய சாட்சிகளை கிறிஸ்தவத்தில் மட்டுமே நாம் காண முடியும்.  

தேவன் நமது தகப்பன் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம். நமது பிள்ளைகள் தவறுசெய்யும்போது நாம் அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கிறோமே, அன்பே உருவான நமது விண்ணகத் தகப்பன் எப்படி நம்மை மன்னியாதிருப்பார்? 

எந்த அக்கிரமம் நம்மிடம் இருந்தாலும் இயேசு கிறிஸ்து மன்னிக்கத் தயாராக இருக்கிறார். அவரது இரத்தத்தால் கழுவப்படும் மேலான அனுபவத்தை வேண்டுவோம். நமக்காக அவர் ஆவலோடுக் காத்திருக்கின்றார். ஆம், கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. என்னை மன்னியும் என உண்மையான இருதயத்தோடு வேண்டுவோம். கர்த்தர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: