இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, April 29, 2023

கர்த்தர் நம்மை உயர்த்துகிறவராகவும் தாழ்த்துகிறவராகவும் இருக்கின்றார்.

ஆதவன் 🌞 824🌻 மே 01, 2023 திங்கள்கிழமை  












"சரீரமுயற்சிஅற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )


நமது உடல் உழைப்பு, சுய முயற்சி எதுவானாலும் அது தேவனைச் சார்ந்ததாக இருக்கவேண்டும். இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழும்போது நம்மை அறியாமலேயே "நான்" எனும் எண்ணம் நமக்குள் வந்துவிடுகின்றது. "நான் நன்றாக படித்ததால் இந்த வேலை எனக்குக்  கிடைத்தது,  நான் கடினமாக உழைத்ததால் இந்தச் செல்வம் எனக்குக் கிடைத்தது" எனப் பலரும் எண்ணிக்கொள்கின்றனர்; சிலர் வெளிப்டையாகக் கூறவும் செய்கின்றனர். ஆனால் இது முற்றிலும் சரி என்று கூறிட முடியாது. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் எல்லாவற்றையும் அழித்து ஒழிக்க அவரால் முடியும். 

எண்ணிப்பாருங்கள்...., நம்மைவிட நன்றாகப்  படித்தவர்கள் நல்ல வேலை இல்லாமல் இருப்பதையும் படிப்பில் மட்டமாக இருந்தவர்கள் நல்ல வேலையில் இருப்பதையும் பல வேளைகளில் நாம்  பார்க்கலாம். இதுபோலவே, அதிகம்  உழைத்தும் கொஞ்சமாகச் சேர்ந்தவர்களும் உண்டு, கடின உழைப்பு  உழைக்காமல் அதிகம் சம்பாதிப்பவர்களும் உண்டு.   இவைகளே சரீர முயற்சி அற்பப் பிரயோஜனமுள்ளது  என்பதற்குச் சாட்சிகள். 

ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், தேவனுக்குப் பயந்த ஒரு உண்மையான பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அது இந்த உலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல,  இதற்குப் பின்வரும் வாழ்க்கைக்கும் உபயோகமானதாக இருக்கும்.

"நான்" எனும் எண்ணம் அல்லது அகந்தை நமக்குள் வந்துவிடக் கூடாது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு உணர்த்தவே, "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். அதாவது நம்மால் எதுவுமில்லை. நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் தேவன் தான். தேவனது கிருபை இல்லையானால் நாம் எதனையுமே செய்யத் தகுதியற்றவர்களே.

"கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்." ( 1 சாமுவேல் 2 : 7 ) ஆம், நமது சுய பலமல்ல, தேவனே  நம்மை உயர்த்துகிறவராகவும் தாழ்த்துகிறவராகவும் இருக்கின்றார். 

அன்பானவர்களே, நாம் உழைக்கவேண்டியதுஅவசியம். அது தேவ கட்டளை. ஆனால், வெறும் உழைப்பு மட்டும் நம்மை உயர்த்திவிடாது. தேவனது கிருபை நமக்கு வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது நிரந்தரமல்ல. எனவேதான் இன்றைய வசனம், "சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது"  என்று கூறுகின்றது. 

தேவன் நமக்குத் தந்துள்ள வேலைக்கு, படிப்புக்கு, உடல் பலத்துக்கு  நன்றி சொல்வோம். அவற்றைப் பெருமையாகக் கருதாமல் தேவனைச் சார்ந்து அவருக்கேற்ற வாழ்க்கை  வாழ்வோம். தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: