Friday, May 05, 2023

இடறல்கள் வருவது அவசியம்

ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023  ஞாயிற்றுக்கிழமை        




                   

"இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!" ( மத்தேயு 18 : 7 )

இடறல் என்பது ஒருவர் செல்லும்  சரியான வழியைவிட்டு அவரை  வழி விலகச்செய்வது. இந்த இடறல் ஆவிக்குரிய காரியத்திலும் உலகக் காரியங்களிலும் நமக்கு ஏற்படலாம். சில வேளைகளில் நாம் எடுக்கும் முடிவுகளைச் சிலர் சந்தேகத்துக்குரிய கேள்விகளை எழுப்பி நம்மைக் குழப்பமடையச் செய்வார்கள். இதுவே இடறல்.

ஆனால் இங்கு இயேசு கிறிஸ்து கூறும் இடறல் ஆவிக்குரிய காரியங்களில் ஒருவரை இடறலடையச் செய்வது. சரியான ஆவிக்குரிய வழியையும் சத்தியத்தையும்விட்டு ஒருவரை வழிவிலகச் செய்வது. அல்லது ஒருவரைப்  பாவத்தில் விழச்செய்வது; விழக்கூடிய சூழலை உருவாக்குவது. இப்படிச் செய்பவர்களுக்கு ஐயோ கேடு.

இன்றைய வசனத்தில், இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இடறல்கள் ஏன் அவசியமென்றால் அவை ஆவிக்குரிய வாழ்வில் ஒரு தேர்வுபோல இருக்கின்றது. இடறலான காரியங்களை நாம் மேற்கொள்ளும்போது ஆவிக்குரிய வாழ்வில் ஒருபடி முன் செல்கின்றோம். இத்தகைய ஒரு இடறலைத்தான் சாத்தான் ஆதாம் ஏவாளுக்குக் கொண்டுவந்தான். ஆனால் அவர்கள் அந்தத் தேர்வில் தோல்வியடைந்தார்கள். 

இயேசு கிறிஸ்துவையும்  சாத்தான் இடறலடையச் செய்யப்பார்த்தான். (லூக்கா 4 : 3-12 ) ஆனால் அவர் இடறலை வெற்றிகொண்டார். இவைதவிர பல்வேறு இடங்களில் யூதர்களாலும், பரிசேயர் சதுசேயர்களாலும் இயேசு கிறிஸ்து இடறல்களைச் சந்தித்தார். ஆனால் அவற்றில்  வெற்றிகொண்டார்.  

ஒருவரை இடறலடையச் செய்வது மிகக்கடுமையான பாவம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, முத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்."  (மாற்கு 9:42)

இதுபோல ஊழியங்களில் ஈடுபடுபவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் தவறான போதனைகள், வழிகாட்டுதல்கள் பலரை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும். அப்போஸ்தலரான பவுல் இதில் தான் கவனமாக இருப்பதாகக் கூறுகின்றார். "இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்". (2 கொரிந்தியர் 6:3) என  எழுதுகின்றார் அவர். 

எனவே நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சாட்சியற்ற கிறிஸ்தவ வாழ்வும் மற்றவர்களுக்கு இடறல்தான்.  ஏனெனில் கிறிஸ்துவை அறியாத மக்கள், கிறிஸ்தவர்கள் எனும் பெயர் பெற்றிருக்கும் நம்மைத்தான் மாதிரியாகப்   பார்ப்பார்கள்.  நமது வாழ்வே சாட்சியற்று இருக்குமானால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள நாம் இடறலாக இருக்கின்றோம் என்று பொருள். 

சாட்சியுள்ள,  மற்றவர்களுக்கு இடறல் ஏற்படுத்தாத வாழ்க்கை வாழ்வோம்; அதன்மூலம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: