Saturday, May 13, 2023

விவசாயிகளைப்போல பொறுமையோடிருந்து, இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்

ஆதவன் 🌞 838🌻 மே 15, 2023  திங்கள்கிழமை       






"......கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே". ( யாக்கோபு 5 : 7, 8 ) 

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயம்தீர்க்க்கும் நியாயாதிபதியாய் பூமிக்கு வரவிருக்கின்றார். அப்படி அவர் வரும்போது அவரோடு நாமும் சேர்த்துக்கொள்ளப்படத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

ஒரு விவசாயி பயிற்செய்யும்முன் மழைக்காகக் காத்திருக்கின்றான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் பருவமழை துவங்குமென்பதால்  விவசாயிகள் அதற்குமுன்பே கடலை, நெல்  அல்லது இதர பயிர்களுக்கான விதைகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு எப்போது மழை பொழியுமென்று காத்திருக்கின்றனர். முன்மாரி எனும் முதல் மழை பெய்தவுடனேயே விதைகளை விதைக்கின்றனர். அந்த நீர்ப்பதத்தில் விதைகள் முளைத்து எழும்பும். 

ஆனால் தொடர்ந்து அடுத்த பின்மாரி மழை பெய்திடவேண்டும். அப்போதுதான் முளைத்த பயிர்கள் மேற்கொண்டு வளரும். இவை ஒரேநாளில் நடைபெறுவதில்லை; அந்த விவாசாயிகள் காத்திருக்கின்றனர். இதனையே, இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

இந்த விவசாயிகளைப்போல நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார். 

அதாவது விவசாயிகள் மழைக்காக காத்திருப்பது மட்டுமல்ல, முதலில் பயிர்ச்செய்வதற்காக நிலத்தைப் பண்படுத்தி பல்வேறு முன்னேற்பாடுகளைச்  செய்கின்றனர். அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவதற்குமுன் நாம் நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக பண்படுத்திதயார் நிலையில் இருக்கவேண்டும். அதனையே, கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று நம்மை  உணர்வூட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

நாம் நமது இருதயங்களை நாமாக ஸ்திரப்படுத்த முடியாது. நமது இருதயத்தை தேவன்தான் பலப்படுத்தமுடியும். ஏனெனில் நாம் இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள், சோதனைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம். நம்மைக்கொண்டு எதுவும் செய்திடமுடியாது. எனவே அவருக்கு நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) என்று. தேவனையே சார்ந்துகொண்டு நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தி கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: