ஆதவன் 🌞 836🌻 மே 13, 2023 சனிக்கிழமை
"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை." ( சங்கீதம் 44 : 6 )
நமது சுய பலத்தை நம்புவதைவிட கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பதை இன்றைய வசனம் நமக்கு உணர்த்துகின்றது. வில், பட்டயம் (வாள்) இவை நமது சுய பலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள். என்னிடம் இந்த உலகத்தில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்திட, வில், வாள் போல பல தகுதிகள் உள்ளன. நல்ல படிப்பு, பதவி, பொருளாதார வசதிகள் இவை எனக்கு இருக்கின்றன என எண்ணி இவைகளை நம்பி நாம் வாழக்கூடாது என்கின்றது இந்த வசனம்.
இத்தகைய உலக சிறப்பம்சங்கள் நம்மை எப்போதும் வெற்றியடையச் செய்திடாது. எனவேதான் இவைகளை நான் நம்பமாட்டேன் கர்த்தரையே நம்புவேன் என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். இதனை இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனத்தில், "நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 7 ) என்று கூறுகின்றார்.
அன்பானவர்களே, நமக்கு இத்தகைய உலக காரியங்களே பலம் என்று நாம் வாழ்வோமானால் சிலவேளைகளில் அவையே நமக்கு எதிராகத் திரும்பிவிடும். அல்லது அவைகளை நம்மால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். தங்களது பதவி, புகழ், செல்வாக்கு இவைகளையே நம்பி இந்த உலகத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் தங்களது பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர். அதாவது இந்தத் தலைவர்களுக்கு வாளாகவும் வில்லாகவும் இருந்து பாதுகாப்புக் கொடுப்பார்கள் என நம்பியவர்களே அந்தத் தலைவர்களைக் கொன்றுள்ளனர்.
தேவனைத தவிர இந்த உலகத்திலுள்ள அனைத்துமே நம்ப முடியாதவை. ஏனெனில் அனைத்து வசதிகளும் இருந்தும் அவற்றை நாம் அனுபவிக்க கர்த்தரது கிருபை அவசியம். உலகப்புகழ்பெற்ற பெண் டிசைனர்.( Crisda Rodriguez) செப்டம்பர் 9, 1987 அன்று கேன்சரால் இறந்தார். அவர் இறப்பதற்குமுன் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எழுதிய வார்த்தைகள்..
"மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்துச் செல்லப் படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.! என் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஒரு லேபிலிருந்து (lab) மற்றொரு லேபிற்க்கு மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை... உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு மட்டுமே உணவு! தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்.... எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை..."
ஆம், "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 6, 7 ) உலகச் செல்வங்கள், பதவிகளையல்ல, கர்த்தரையே நம்பி வாழ்வோம்; மெய்யான ஆசீர்வாதம் பெறுவோம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment