ஆதவன் 🌞 833🌻 மே 10, 2023 புதன்கிழமை
"எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 )
மனிதர்கள் பொதுவாக இயற்கையில் நற்குணங்கள் உள்ளவர்களாக இருப்பதில்லை. சிறு வயது குழந்தைகளைக் கவனித்துப்பார்த்தாலே இது புரியும். இரண்டு சிறு குழந்தைகளிடம் ஒரு பொருளைக்கொடுத்தால் இரண்டு குழந்தைகளும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்வதும், சண்டையிடுவதையும் அந்தப் பொருள் தனக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதையும் நாம் பார்க்கலாம். இந்த மனித குணமே அவர்கள் வளரும்போது போட்டி, பொறாமை, வஞ்சகம், தந்திரம் போன்ற குணங்களாக மாறுகின்றன.
எனவேதான் தாவீது, "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51 : 5 ) என்று கூறுகின்றார். இந்த மோசமான மனித குணம் எவ்வளவு நற்போதனைகள் செய்தாலும் முற்றிலுமாக மாறிவிடுவதில்லை. ஓரளவு மாறினாலும் தேவைக்கேற்ப மனிதன் தனது துர்க்குணத்தைக் காட்டிவிடுகின்றான். இதனையே இன்றைய வசனம், "எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 ) என்று கூறுகின்றது.
எத்தியோப்பியனான நீக்ரோ மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றமுடியாது, சிவிங்கி, சிறுத்தை போன்ற மிருகங்கள் தங்கள் உடலிலுள்ள புள்ளிகளை மாற்றமுடியாது. அப்படி அவைகள் மாற்றக் கூடுமானால் நீங்களும் நம்மை செய்யக்கூடும் என்கிறார் கர்த்தர். அதாவது, மனிதர்கள் தாங்களாக நன்மை செய்ய முடியாது என்கின்றது இந்த வசனம்.
இப்படித் தன்னால் நன்மைசெய்ய முடியாத மனிதர்களை நன்மைசெய்ய வைக்கவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். ஆம், அவரே இதற்கு வழி. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "..........ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )
ஆம் அன்பானவர்களே, நாம் நீதி போதனைகளைக் கேட்பதாலோ, நீதி நூல்களைக் கற்பத்தாலோ, பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பதாலோ தேவனுக்கேற்றவர்களாக மாறிட முடியாது. அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொள்வதுதான். தேவனுக்கேற்ற கனி கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டுமானால், கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட வேண்டியது அவசியம்.
எனவேதான், ".......கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்றார் இயேசு கிறிஸ்து.
இதுவரை நாம் செய்த பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது, இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பு பெற்று அவரோடு நம்மை இணைத்துக்கொள்வோம். அப்போது மட்டுமே தீமை செய்யப் பழகிய நம்மாலும் நன்மை செய்ய முடியும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment