ஆதவன் 🌞 815🌻 ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை
"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 17, 18 )
பெருமை சிலருக்கு உடலோடு ஒட்டிய தோல்போல அவர்களோடு ஒட்டியே இருக்கும். நல்லகாரியங்களில் மட்டுமல்ல பாவ காரியங்களிலும் கூட மேன்மை பாராட்டுகின்ற அற்பர்களாக இருக்கின்றனர் சிலர். ஒரு ஆப் (half) அடித்தாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என பெருமையடிக்கிறான் குடிகாரன். நான் இந்தியாவின் பல்வேறு மாநில பெண்களோடு இன்பம் அனுபவித்துள்ளேன் என பெருமை பேசுகிறான் விபச்சாரக்காரன். இதுபோல தங்களது பதவி, செல்வாக்கு, பணம், அதிகாரம் இவைகளைக்குறித்து பெருமை பேசும் பலர் உண்டு.
பொதுவாக பெருமை பேசுபவர்கள் மற்றவர்கள் தங்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகவே இப்படிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் இத்தகைய பெருமை பேசும் மக்களைவிட்டு சற்று அகன்றவுடன் எல்லோரும் இவர்களது அற்பப் பெருமை பேச்சைக் கேலிபேசிச் சிரிக்கத்தான் செய்வார்கள். மேலும், இப்படிப் பெருமை பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." என்று கூறுகின்றார். தற்பெருமை பேசி பெருமையோடு அலைந்த அரசியல் தலைவர்கள் அழிந்துபோன உண்மையினை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம்.
நமது அறிவு, உடல் பலம், செல்வம் இவை எல்லாமே தேவ கிருபையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அனைத்தையும் நம்மைவிட்டு எடுத்துக்கொள்ள முடியும். இந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான், "ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்" ( எரேமியா 9 : 23 ) என எரேமியா மூலம் தேவன் உணர்த்துகின்றார்.
இந்த உலகினில் தேவனை அறியும் அறிவுதான் மேலான அறிவு. தேவனை வேதாகமத்தைப் படிப்பதாலோ, இறையியல் கல்வி பயில்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதாலோ, பிரசாங்கங்களைக் கேட்பதாலோ, இதுபோன்ற ஆவிக்குரிய தியான கட்டுரைகளை வாசிப்பதாலோ அறிய முடியாது. நம்மை அவருக்கு ஒப்புவித்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாலேயே அறிய முடியும்.
இதுவே உலகினில் மேலான அறிவு. தேவனை அறியாத மனிதன் அழிந்துபோகும் மிருகத்துக்கு ஒப்பாயிருக்கின்றான். எனவேதான் "மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 24 ) என வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, தேவன் நமக்கு நல்ல வேலை, அறிவு, அழகு, அந்தஸ்து, செல்வம், புகழ் தந்து உயர்த்தும்போது மனத் தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொள்வோம். "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
.jpg)
No comments:
Post a Comment