ஆதவன் 🌞 797🌻 ஏப்ரல் 04, 2023 செவ்வாய்க்கிழமை
"அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 19 )
பெரும்பான்மையைக் கொண்டு வெற்றி தோல்வியினைக் கணிப்பது மனிதர்களது குணம். அரசியலிலும் பெரும்பான்மையையே வெற்றியாகக் கருதுகின்றார்கள். ஆனால் நமது தேவன் அப்படியல்ல, அவருக்கு பெரும்பான்மை தேவையில்லை, அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் கூட்டம் தேவையில்லை. தன்னை உண்மையான அன்புடன் நேசிக்கும் ஒரு சில உள்ளங்கள் இருந்தாலே அதனை அவர் கணம் பண்ணுவார்.
இன்று பலக் கிறிஸ்தவ விசுவாசிகளும் ஊழியர்களும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்தைத் தேவன் கேட்பார் என்று எண்ணிக்கொள்கின்றனர். இது இவர்கள் தேவனை ஒரு அரசியல் தலைவனைப் போலப் பார்ப்பதையே உணர்த்துகின்றது.
எங்களது ஜெபக்கூட்டத்தில் பத்தாயிரம் தேவ பிள்ளைகள் கூடி ஜெபித்தார்கள் என்று கூறுவதில் சில பாஸ்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் பெருமை. இதுபோலவே சங்கிலிஜெபம் என இன்று முகநூலிலும் 'வாட்சப்' பிலும் ஜெப விண்ணப்பம், ஜெபக் குறிப்புகள் அனுப்புகின்றனர். எங்கள் ஜெபக் குறிப்புகளுக்காக ஐம்பது நாடுகளிலிருந்து மக்கள் ஜெபிக்கின்றனர் என்று கூறிக்கொள்கின்றனர்.
இப்படி ஜெபிப்பதைத் தவறு என்றோ, இது கூடாது என்றோ, இப்படி ஜெபிப்பவர்கள் எல்லாம் தவறு செய்கின்றனர் என்றோ நான் கூறவில்லை. மாறாக, இங்கு நான் உணர்த்தவிரும்பும் கருத்து இயேசு கிறிஸ்து கூறிய அர்த்தத்தில் மட்டுமே. அதாவது பத்தாயிரம் பதினைந்தாயிரம் மக்கள் சேர்ந்து ஜெபிப்பதோ, ஐம்பது அல்லது நூறு நாடுகளில் ஜெபிப்பதோ தேவனுக்கு முக்கியமல்ல. இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்றார் இயேசு கிறிஸ்து.
அதாவது தேவன் ஒரு காரியத்துக்குப் பதில் அளிக்க அரசியல் தலைவனைப்போலவும் அரசாங்கத்தைப்போலவும் அதிக மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பது முக்கியத் தேவையில்லை. ஒருமனப்பட்ட இரண்டு பேர் ஜெபித்தாலே போதும். அதாவது எண்ணிக்கையைவிட ஒருமனப்பட்ட மனமே தேவனது பார்வையில் முக்கியமாக இருக்கின்றது.
மேலும் நம்மை ஜெபிக்கத் தூண்டுவதே ஆவியானவர்தான். விண்ணப்பத்தின் ஆவியானவர் நம்முள் இருந்து நாம் பாரத்துடன் வேண்டுதல் செய்யும்போதே அந்த ஜெபம் கேட்கப்படும். எனவே ஜெப விண்ணப்பங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பதில்லை. நீங்கள் இருக்குமிடத்தில் இருந்து இரண்டுபேர் மூன்றுபேர் ஒருமனப்பட்டு ஜெபித்தாலே போதும். ஜெபத்தைக்குறித்த இயேசு கிறிஸ்து கூறிய இந்த உண்மை எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது அவசியம்.
ஆம் உண்மையான ஐக்கியத்துடன் ஜெபிக்கும் இரண்டுபேர் ஊழியத்தில் சாதனைகள் செய்ய முடியும். எனவேதான் "ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்." ( மத்தேயு 18 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
சுருங்கக் கூறவேண்டுமானால், தேவன் செயல்பட, செம்மறியாட்டுக் கூட்டம் தேவையில்லை; சிங்கம் போன்ற ஒருமனமுள்ள ஒரு சில ஜெப வீரர்களே போதும். ஒருமனப்பாடுடன் சேர்ந்து ஜெபிப்போம்.
No comments:
Post a Comment