ஆதவன் 🌞 814🌻 ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை
"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )
தேவன் தெரிந்துகொண்ட அபிஷேகிக்கப்பட்ட மனிதனாக இருந்தாலும் தாவீதின் ஆரம்ப வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது. இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை அவர் சவுலுக்குத் தப்பி ஓடித் தன் உயிரைக் காப்பாற்ற மலையிலுள்ள குகையில் பதுங்கியிருக்கையில் கூறியது.
இன்று நாம் இந்த வசனங்களை வீட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டோ அல்லது சபை ஆராதனையில் இருந்துகொண்டோ கூறலாம். அது மிகவும் எளிது. ஆனால் எந்தநேரமும் தனது உயிர் பறிபோகலாம் என்ற இக்கட்டான நிலையில் இருந்துகொண்டு தாவீது இந்த விசுவாச அறிக்கையைக் கூறுகின்றார்.
தான் இந்த வசனத்தைக் கூறுகையில் இருந்த நிலைமையைத் தாவீது பின்வருமாறு கூறுகின்றார்.
"என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 57 : 4 )
இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஆண்டவரே என்று அவர் கூறவில்லை. மாறாக, தேவன் அவரைக் காப்பாற்றிவிட்டார் எனும் உறுதி தேவன் காப்பாற்றுமுன்னரே தாவீதுக்கு இருந்தது. எனவேதான், "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவன்" என்று கூறுகின்றார்.
அன்பானவர்களே, இதுதான் விசுவாசம். இன்று நாமும் இத்தகைய விசுவாச அறிக்கையினை நமது வாழ்க்கையில் அறிக்கையிடப் பழகவேண்டும். கடன் பிரச்சனைகள், தீராதநோய்கள், வறுமை, வேலையில்லாமை, சொந்தங்களால் புறக்கணிப்பு போன்ற எந்த நிலையிலுமிருந்தும் தேவன் நம்மைக் காப்பாற்றி விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார். நமது தற்போதைய நிலைமை அவருக்குத் தெரியும். தாவீதைப்போல, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." என்று உறுதியாகச் சொல்வோம்.
சூழ்நிலைகள் தேவனைத் தடுக்க முடியாது. காரணம், சூழ்நிலைகளையே மாற்றவல்லவர் நமது தேவன். எனவே, சூழ்நிலைகளையல்ல சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம். நமக்காக அவர் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் என்று விசுவாசிப்போம்; தாவீதைப்போல அதனை அறிக்கையிடுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment