ஆதவன் 🌞 820🌻 ஏப்ரல் 27, 2023 வியாழக்கிழமை
"மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ." ( மத்தேயு 19 : 26 )
தேவன் சர்வ வல்லவர் என்று நாம் கூறுகின்றோம். அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் (ரோமர் 4:17) அவர். இப்படித்தான் அழைத்து அவர் வார்த்தையால் உலகத்தைப் படைத்தார்.
இன்றைய வசனம் சொல்லப்பட்டதன பின்னணியைப் பார்ப்போமானால் செல்வந்தனான ஒரு வாலிபன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து ஆண்டவரே, நித்திய ஜீவனை அடைந்திட நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது இயேசுவுக்கும் அவனுக்கும் இடையே சில உரையாடல்கள் நடைபெறுகின்றன. இறுதியில் இயேசு அவனிடம் "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடு" என்று கூற அவன் துக்க முகமாய்த் திரும்பிச் சென்றான்.
அப்போது இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை நோக்கி, "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்." ( மத்தேயு 19 : 24 ) என்றார். சீடர்கள் அவரிடம் அப்படியானால் யார்தான் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார், "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ."
இன்றும் பலர் பணக்காரர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்றே எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து, அப்படிக் கூறாமல், "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ." என்றுதான் கூறினார். அதாவது தேவனால் யாரையும் தனக்கு ஏற்புடையவராக மாற்றிட முடியும்.
ஆம், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )
மேலும் தேவன் வெளித் தோற்றத்தைக்கொண்டு மனிதர்களைத் தீப்பிடுபவரல்ல. அவர் மனிதர்களது இதயத்தையே நோக்கிப்பார்க்கின்றார். பெரிய செல்வந்தர்களின் மனைவிகள் இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியத்தில் உதவினர் என்று நாம் வாசிக்கின்றோம். "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்." ( லுூக்கா 8 : 3 )
நாம் நமது உள்ளத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது நமது உள்ளான மனிதனில் மிகப்பெரிய மாற்றத்தை அவர் உண்டாக்குவார். செல்வம், சொத்து, பதவி, அந்தஸ்து இருந்தாலும் கர்த்தரின் கிருபையால் நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழ முடியும். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) ஆம், இதுவே கிறிஸ்துவின் அளவுகோல். எனவே செல்வம் வந்தாலும் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழ நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்.
"மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ."
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment