தேவனை உள்ளான அன்போடு தேடுவோம்.

ஆதவன் 🌞 798🌻 ஏப்ரல் 05, 2023 புதன்கிழமை






"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதன் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதன் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." ( சங்கீதம் 46 : 1- 3 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெற்று மெய்யான அன்போடு அவரைத் தேடுபவர்கள் உலக ஆசை, தேவைகளின் அடிப்படையில் தேவனை அன்பு செய்யாமல் உள்ளான ஆத்தும அன்போடு அன்பு செய்வார்கள். அத்தகைய அன்போடு தேவனை அன்பு செய்பவர்கள்தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதைப்போல தாங்களும் கூற முடியும். 

தேவன் எனக்கு எல்லாமே தந்துகொண்டிருப்பதால் நான் அவரை அன்பு செய்கின்றேன் என்று கூறுவது மெய்யான அன்பல்ல; மாறாக, வாழ்வில் எத்தகைய எதிர்மறையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவரை உள்ளன்போடு அன்புசெய்வதே மெய்யான அன்பாகும். தேவனிடம் அத்தகைய அன்பு நமக்கு இருக்கும்போது,  இன்றைய வசனம் கூறுவதுபோல, "பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." 

நான் கிறிஸ்துவை அறிந்துகொண்ட எனது முப்பத்தியாறாவது வயதில் எனக்கு நல்ல வேலை இல்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாகிவிட்டேன். பொருளாதாரத்தில் அன்றாடத் தேவைகளை மட்டுமே சிரமத்துடன் சந்திக்க முடியும் எனும் நிலைமை. எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு, திருமணம் இவைகளை  எப்படி நம்மால் சமாளிக்க முடியும் எனும் பதற்றம்.  ஆனால் அந்த நெருக்கடியானச் சூழ்நிலையில் தேவன் மட்டுமே எனக்குத் துணையாக இருந்து வசனங்களின் மூலம் வழிநடத்தினார். 

நான் சந்தித்த வாழ்க்கைச் சூழலை ஆபகூக் தீர்க்கதரிசியும் சந்தித்திருக்கிறார். தேவன் எனக்கு அதனை வெளிப்படுத்தினார். எனவேதான் அவர் இன்றைய வசனம் கூறுவதுபோலக்  கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3 : 17, 18 )

இந்த வசனத்தைப் படித்தவுடன் பழைய ஏற்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் என்று இதனை கோடிட்டு குறித்து வைத்தேன். 


அன்பானவர்களே, தேவனை உலகத் தேவைகளுக்காக மட்டும் நாம் தேடிக்கொண்டிருப்போமானால் நாம் இன்னும் அவரை அறியவில்லை என்றே பொருள்.  அவரை உள்ளன்போடு நாம் அன்பு செய்யும்போது மட்டுமே அவரிடம் அசைக்க முடியாத அன்பும் எந்த எதிர்மறையான சூழ்நிலைகளையும் சந்திக்கும் பலமும் நமக்கு கிடைக்கும். இதனால்தான் இன்றைய தியானத்துக்குரிய 46 ஆம் சங்கீதத்தின் இறுதி வசனமாக சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்." ( சங்கீதம் 46 : 11 )

தேவனை உலகத் தேவைகளுக்காக அல்ல; அவரிடமுள்ள உள்ளான அன்போடு தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்