Thursday, April 27, 2023

வேதாகம முத்துக்கள் - ஏப்ரல் 2023


 





                - எம் . ஜியோ பிரகாஷ் 

ஆதவன் 🌞 794🌻 ஏப்ரல் 01, 2023 சனிக்கிழமை

".....உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )

நமது தேவன் உலக அரசர்களைப்போல சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு மற்றவர்களை அடிமைகள்போல நடத்துபவரல்ல. 

மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பதனை தேவன் அறிவார். எனவே அவர்களுக்கு உதவிசெய்ய அவர் ஆர்வமுள்ளவராகவே இருக்கின்றார். ஆனால் தாழ்மையான இதயத்துடன் நொறுங்கிய உள்ளத்துடன் அவரை நோக்கிப் பார்ப்பவர்கள்தான் அவரைக் கண்டடையமுடியும். தேவன் பரிசுத்த ஸ்தலத்தில் மட்டும் வசிப்பவரல்ல, மாறாக, "நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."   என்கின்றார். 

தேவன் வாழுமிடம்தான் பரலோகம். இந்தப்  பரலோக ராஜ்ஜியம் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கே கிடைக்கும். "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

இன்று உலகப் பதவிகளை அனுபவிப்பவர்கள் காட்டும் பந்தாவுக்கு அளவில்லை. பதவிகளே சிலருக்குப்  பெருமையினையும் ஏற்படுத்தி விடுகின்றது. "பதவிக்கேற்ற பெருமை வேண்டியதுதான்" என்று உலக மனிதர்கள் கூறுவார்கள். ஆனால், அது சரியல்ல. எந்தப் பதவியில் இருந்தாலும் மனத் தாழ்மையினை கடைபிடிக்கவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தாழ்மையுள்ளவராகவே இருந்தார். தேவாதிதேவன் அனுபவிக்கும் பதவியைவிடவா உலகப் பதவிகள் உயர்ந்தவை ?

சர்வ லோகத்தையும் படைத்த பிதாவுக்கு நிகராக தான் இருந்தபோதும்  தன்னை அவர் மனிதனுக்கு நிகராகத் தாழ்த்தினார். 
"அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2 : 8 ) என்று வாசிக்கின்றோம். இத்தகைய தாழ் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியவர் எப்படி அற்ப பெருமையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய முடியும்?

ஏன் இப்படிப் பணிந்த ஆவியுள்ளவர்களிடம் தேவன் வாழ விரும்புகின்றார் என்பதனையும் இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, "மகனே, மகளே கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்" என்று கூறி  அவர்களது ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும் தேவன் பணிந்த ஆவியுள்ளவர்களிடம் வசிக்கின்றார் என்று வசனம் கூறுகின்றது.   பெருமையுள்ளவர்கள் தேவனது இந்த அன்பின் குரலைக் கேட்கவும் முடியாது ஆறுதலடையவும் முடியாது.

அன்பானவர்களே, இந்த உலகத்தில் தேவன் நமக்குப் பெரிய பதவிகள் தந்திருக்கலாம், எந்தப் பதவியாக இருந்தாலும் மனத் தாழ்மையோடு நடந்துகொள்ள முயலுவோம். மற்றவர்களை அற்பமாக எண்ணாமல், அவர்களையும் சகமனிதர்களாக மதித்து அன்புசெய்து வாழ்வதே தேவன் தந்த பதவியை சரியாகப் பயன்படுத்துவதன் அடையாளம். 

"உயர் பதவியில் உள்ளவர்களோடும் சமூக அந்தஸ்துள்ள பெரும் பணக்காரர்களோடும் புகழ்பெற்றவர்களோடும் நான்  வாழ்கின்றேன்" என்று கூறாமல், "நான் உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் மட்டுமல்ல, நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

 ஆதவன் 🌞 795🌻 ஏப்ரல் 02, 2023 ஞாயிற்றுக்கிழமை

புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டன." ( லுூக்கா 2 : 30-32 )

இயேசு கிறிஸ்துவைக் குறித்து சிமியோன் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். சிமியோனைக்குறித்து, "அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாகவும் இஸ்ரவேலுக்கு ஆறுதல்வரக் காத்திருந்தவனாகவும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார்"  (லூக்கா - 2: 25) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அவன் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டான்.

ஆவியானவரின் நிறைவால் அவன் பேசினான். இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து யூதராக உலகத்தில்  பிறந்தது யூதர்களுக்கு மகிமை. மட்டுமல்ல, அவர்  தேவனையே அறிந்திராத பிற இனத்து மக்களுக்கு  ஒளியாக வந்தார்.  மேலும், அனைத்து உலக மக்களுக்கும் அவர்மூலமே இரட்சிப்பு. இத்தகைய மேன்மையான மெசியாவை என் கண்கள் கண்டுகொண்டன என்கின்றான் சிமியோன்.

அன்பானவர்களே, இன்று நமது கண்கள் இயேசுவை எப்படிக் கண்டுகொள்கின்றன? ஆவியானவர் சிமியோன் மூலம் வெளிப்படுத்தினபடி இயேசு கிறிஸ்துவைப் பாவ  இருளில் இருக்கும் நமக்கு ஒளியாகவும், இரட்சிப்பாகவும் பார்க்கின்றோமா?

இன்றைக்குப் பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்கள் இயேசுவை உலக ஆசீர்வாதங்களை அளிப்பவராகவே  அடையாளம் காட்டுகின்றனர்.  இத்தகைய ஊழியர்களுக்கு ஆவியானவரின் வெளிப்பாடு இல்லை என்றே பொருள். தீர்க்கதரிசனமாக சிமியோனுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மையினையே பல்வேறு தீர்க்கதரிசிகளும்   வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இத்தனைத் தெளிவாக இன்று ஆவியானவர் தனது அடியார்களைக் கொண்டு எழுதிவைத்த பின்னரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே இயேசு கிறிஸ்து வந்தார் என்று போதிப்பது எவ்வளவு அறிவீனம்!1

சிமியோன் எட்டுநாள் குழந்தையான இயேசு கிறிஸ்துவிடம் இரட்சிப்பு இருப்பதைக் கண்டார். பிதாவின் சித்தப்படி அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது அந்த இரட்சிப்பு உலக மக்களுக்குக் கிடைத்தது.  கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவையும் அவர் உலகினில் வந்த நோக்கத்தையும் அறியாமல் வாழ்வது எத்தனை அறிவீனம்!!

சகல ஜனங்களுக்கும் ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், இரட்சிப்பு ஏற்கெனவே பிதாவாகிய தேவனால் மக்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டது. தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சிப்பை நாம் புறக்கணித்தால் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போதுதான் நாம் மீட்பு அனுபவத்தைப் பெற முடியும். அன்பானவர்களே,  தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணின தேவனது மீட்பினைச் சிமியோனைப்போல  கண்டுகொள்வோம்; பெற்று மகிழ்வோம்.  


ஆதவன் 🌞 796🌻 ஏப்ரல் 03, 2023 திங்கள்கிழமை

"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது." ( மத்தேயு 23 : 25 )

நானும் எனது நண்பர் ஒருவரும்  பணி நிமித்தமாக ஒருமுறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தபோது மதியம் தாகத்துக்குக் குடிக்க  ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம்.  ஒரு செம்பில் தண்ணீர் தந்தார்கள். அந்தச் செம்பினைப்   பார்த்தபோது  பளபளவென்றிருந்தது. ஆனால் அதனை வாங்கிப் பாத்தபோது அதன் தூரில் பச்சையும் கருப்புமாக பாசியும் அழுக்கும்  படர்ந்திருந்தன. தண்ணீரைக் குடிக்க குடியமுடியவில்லை.  

இதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் காலத்து வேத அறிஞர்கள், பரிசேயர்கள் போன்றவர்கள் பல்வேறு வெளித்தூய்மை சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை மட்டுமே  கடைபிடித்து வாழ்ந்துவந்தனர். அடிக்கடி கைகளைக் கழுவுதல், பாத்திரங்களையும் கிண்ணங்களையும் கழுவுவது போன்ற தூய்மைச் செயல்களையும் செய்துவந்தனர். இப்படிப்பட்டச் செயல்களைச்  செய்வதே கடவுளை வழிபடுமுன் நாம் செய்யவேண்டிய முறைமைகள் என்று கற்பித்து வந்தனர். ஆனால் அவர்களது உள்ளமோ வேசித்தனத்தினாலும் பொருளாசையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருந்தது. 

இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார்.  "குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின்  உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு." ( மத்தேயு 23 : 26 ) என்று கூறினார். அதாவது, வெளிப்புற சடங்குகள் இருக்கட்டும் முதலில் நீ உன் உள்ளத்தைக் கடவுளுக்கு ஏற்புடையதாக மாற்று என்கின்றார்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு ஆலய காரியங்களிலும், பல்வேறு பக்தி செயல்களிலும், சடங்காச்சாரத்திலும் மூழ்கி தங்களது வெளி தோரணையினை பகட்டாகக் காட்டும் பலரது நிஜ வாழ்க்கை அலங்கோலமாக இருக்கின்றது. ஊழியர்கள், குருக்கள் பலரது சாட்சியற்ற வாழ்க்கை இன்று பத்திரிகைகளில் அம்பலமாகி பிற மதத்தவர்களும் கேலிபேசுமளவுக்கு இருக்கின்றது. கிறிஸ்தவ விசுவாசி என்று பெயர்பெற்றவன் அலுவலத்தில் கையூட்டுப்பெற்று கைதாகி அவமானப்பட்டு நிற்கின்றான். 

அன்பானவர்களே, நமது வெளியரங்கமான பக்திச்  செயல்பாடுகளையல்ல, நமது இதயத்தையே தேவன் பார்க்கின்றார். இந்தஉண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வெளியரங்கமாக சிறந்த விசுவாசி என்று பெயர் வாங்குவதையல்ல, நாம் தேவனுக்குமுன் எப்படி நமது வாழ்க்கையினை அமைத்துள்ளோம் என்பதனையே தேவன் பார்க்கின்றார். நமது உட்புறத்தைச் சுத்தமாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவத்தைப் பெறும்போது மட்டுமே நமது உட்புறம் சுத்தமாக முடியும். 

நமது உட்புறம் சுத்தமாகாவிட்டால் நாம் வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள்போலவே தேவனது பார்வைக்கு இருப்போம். வேதபாரகரும் பரிசேயர்களும் இப்படி இருந்ததால்தான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து, "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்டக்  கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்." ( மத்தேயு 23 : 27 ) என்றார். 

வெளி ஆராதனை, சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமுன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நமது இருதயத்தை ஒப்புக்கொடுத்து நமது உட்புறத்தைச் சுத்தமாக்கிடுவோம்.  

ஆதவன் 🌞 797🌻 ஏப்ரல் 04, 2023 செவ்வாய்க்கிழமை

"அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." மத்தேயு 18 : 19 )

பெரும்பான்மையைக் கொண்டு வெற்றி தோல்வியினைக் கணிப்பது மனிதர்களது  குணம். அரசியலிலும் பெரும்பான்மையையே வெற்றியாகக் கருதுகின்றார்கள். ஆனால் நமது தேவன் அப்படியல்ல, அவருக்கு பெரும்பான்மை தேவையில்லை, அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் கூட்டம் தேவையில்லை. தன்னை உண்மையான அன்புடன் நேசிக்கும் ஒரு சில உள்ளங்கள் இருந்தாலே அதனை அவர் கணம் பண்ணுவார். 

இன்று பலக்  கிறிஸ்தவ விசுவாசிகளும் ஊழியர்களும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்தைத் தேவன்  கேட்பார் என்று எண்ணிக்கொள்கின்றனர்.   இது இவர்கள் தேவனை ஒரு அரசியல் தலைவனைப் போலப் பார்ப்பதையே உணர்த்துகின்றது

எங்களது ஜெபக்கூட்டத்தில் பத்தாயிரம் தேவ பிள்ளைகள் கூடி ஜெபித்தார்கள் என்று கூறுவதில் சில பாஸ்டர்களுக்கும், ஊழியர்களுக்கும் பெருமை. இதுபோலவே சங்கிலிஜெபம் என இன்று முகநூலிலும் 'வாட்சப்' பிலும் ஜெப விண்ணப்பம், ஜெபக் குறிப்புகள் அனுப்புகின்றனர். எங்கள் ஜெபக் குறிப்புகளுக்காக ஐம்பது நாடுகளிலிருந்து மக்கள் ஜெபிக்கின்றனர் என்று கூறிக்கொள்கின்றனர்.

இப்படி ஜெபிப்பதைத் தவறு என்றோ, இது கூடாது என்றோ, இப்படி ஜெபிப்பவர்கள் எல்லாம் தவறு செய்கின்றனர் என்றோ  நான் கூறவில்லைமாறாக, இங்கு நான் உணர்த்தவிரும்பும் கருத்து இயேசு கிறிஸ்து கூறிய  அர்த்தத்தில் மட்டுமே. அதாவது பத்தாயிரம் பதினைந்தாயிரம் மக்கள் சேர்ந்து ஜெபிப்பதோ, ஐம்பது அல்லது நூறு நாடுகளில் ஜெபிப்பதோ தேவனுக்கு முக்கியமல்ல.  இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்  என்றார் இயேசு கிறிஸ்து.

அதாவது தேவன் ஒரு காரியத்துக்குப் பதில் அளிக்க  அரசியல் தலைவனைப்போலவும் அரசாங்கத்தைப்போலவும் அதிக மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பது முக்கியத் தேவையில்லை.  ஒருமனப்பட்ட இரண்டு பேர் ஜெபித்தாலே போதும்.   அதாவது எண்ணிக்கையைவிட ஒருமனப்பட்ட மனமே தேவனது பார்வையில் முக்கியமாக இருக்கின்றது

மேலும் நம்மை ஜெபிக்கத் தூண்டுவதே ஆவியானவர்தான். விண்ணப்பத்தின் ஆவியானவர் நம்முள் இருந்து நாம் பாரத்துடன் வேண்டுதல் செய்யும்போதே அந்த ஜெபம் கேட்கப்படும். எனவே ஜெப விண்ணப்பங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பதில்லைநீங்கள் இருக்குமிடத்தில் இருந்து இரண்டுபேர் மூன்றுபேர்  ஒருமனப்பட்டு ஜெபித்தாலே போதும். ஜெபத்தைக்குறித்த இயேசு கிறிஸ்து கூறிய இந்த உண்மை எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது  அவசியம்

ஆம் உண்மையான ஐக்கியத்துடன் ஜெபிக்கும் இரண்டுபேர் ஊழியத்தில் சாதனைகள் செய்ய முடியும். எனவேதான் "ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்." மத்தேயு 18 : 20 )   என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

சுருங்கக் கூறவேண்டுமானால், தேவன் செயல்பட, செம்மறியாட்டுக் கூட்டம்  தேவையில்லை; சிங்கம் போன்ற ஒருமனமுள்ள ஒரு சில ஜெப வீரர்களே போதும். ஒருமனப்பாடுடன் சேர்ந்து ஜெபிப்போம்.

ஆதவன் 🌞 798🌻 ஏப்ரல் 05, 2023 புதன்கிழமை

"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." ( சங்கீதம் 46 : 1- 3 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெற்று மெய்யான அன்போடு அவரைத் தேடுபவர்கள் உலக ஆசை, தேவைகளின் அடிப்படையில் தேவனை அன்பு செய்யாமல் உள்ளான ஆத்தும அன்போடு அன்பு செய்வார்கள். அத்தகைய அன்போடு தேவனை அன்பு செய்பவர்கள்தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதைப்போல தாங்களும் கூற முடியும். 

தேவன் எனக்கு எல்லாமே தந்துகொண்டிருப்பதால் நான் அவரை அன்பு செய்கின்றேன் என்று கூறுவது மெய்யான அன்பல்ல; மாறாக, வாழ்வில் எத்தகைய எதிர்மறையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவரை உள்ளன்போடு அன்புசெய்வதே மெய்யான அன்பாகும். தேவனிடம் அத்தகைய அன்பு நமக்கு இருக்கும்போது,  இன்றைய வசனம் கூறுவதுபோல, "பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." 

நான் கிறிஸ்துவை அறிந்துகொண்ட எனது முப்பத்தியாறாவது வயதில் எனக்கு நல்ல வேலை இல்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாகிவிட்டேன். பொருளாதாரத்தில் அன்றாடத் தேவைகளை மட்டுமே சிரமத்துடன் சந்திக்க முடியும் எனும் நிலைமை. எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு, திருமணம் இவைகளை  எப்படி நம்மால் சமாளிக்க முடியும் எனும் பதற்றம்.  ஆனால் அந்த நெருக்கடியானச் சூழ்நிலையில் தேவன் மட்டுமே எனக்குத் துணையாக இருந்து வசனங்களின் மூலம் வழிநடத்தினார். 

நான் சந்தித்த வாழ்க்கைச் சூழலை ஆபகூக் தீர்க்கதரிசியும் சந்தித்திருக்கிறார். தேவன் எனக்கு அதனை வெளிப்படுத்தினார். எனவேதான் அவர் இன்றைய வசனம் கூறுவதுபோலக்  கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3 : 17, 18 )

இந்த வசனத்தைப் படித்தவுடன் பழைய ஏற்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் என்று இதனை கோடிட்டு குறித்து வைத்தேன். 


அன்பானவர்களே, தேவனை உலகத் தேவைகளுக்காக மட்டும் நாம் தேடிக்கொண்டிருப்போமானால் நாம் இன்னும் அவரை அறியவில்லை என்றே பொருள்.  அவரை உள்ளன்போடு நாம் அன்பு செய்யும்போது மட்டுமே அவரிடம் அசைக்க முடியாத அன்பும் எந்த எதிர்மறையான சூழ்நிலைகளையும் சந்திக்கும் பலமும் நமக்கு கிடைக்கும். இதனால்தான் இன்றைய தியானத்துக்குரிய 46 ஆம் சங்கீதத்தின் இறுதி வசனமாக சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்." ( சங்கீதம் 46 : 11 )

தேவனை உலகத் தேவைகளுக்காக அல்ல; அவரிடமுள்ள உள்ளான அன்போடு தேடுவோம். 

ஆதவன் 🌞 799🌻 ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை

"நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்." ( யோவான் 8 : 24 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இயேசு கிறிஸ்துவின் கோபத்தின் வார்த்தைகளாக இருக்கின்றது. அதாவது பாவங்களை மன்னிக்க பலி பொருளாக பிதாவினால் அனுப்பப்பட்டு உலகினில் வந்துள்ள தன்னை விசுவாசிக்காவிட்டால் பாவங்களிலே சாவீர்கள் என்று யூதர்களைப் பார்த்து இயேசு கடுமையாகக் கூறுகின்றார்.

தானே உலகத்தில் வரவிருப்பதாக தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களுக்கு அவர் தனது வல்லமையான பல செய்கைகளினால் மெய்ப்பித்திருந்தார். ஆனால் யூதர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. விசுவாசியாத யூதர்களை பார்த்துதான் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறினார்.

இயேசு எனும் பெயருக்கு இரட்சகர் என்றுதான் பொருள். மக்களது பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்கவே அவர் மனிதனாக உலகினில் வந்தார். புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தமே இதுதான். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ( மத்தேயு 1 : 21 )

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது உடல் மரணத்தையல்ல, ஆத்தும மரணத்தைப் பற்றியே. உலகினில் பிறந்த அனைவருமே ஒருநாளில் இறந்துதான் ஆகவேண்டும். எனவே இயேசு இங்கு உடல் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவு. பாவத்தை மன்னிக்க அதிகாரம் படைத்தத் தன்னை யூதர்கள் விசுவாசிக்காததால் இயேசு கோபத்தில், "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று கூறினார்.

அன்பானவர்களே, நாம் இன்று இயேசு கிறிஸ்துவை எதற்காக விசுவாசிக்கின்றோம் என்று நம்மை நாமே ஆய்வு செய்துபார்க்கவேண்டியுள்ளது. வெறும் உலக ஆசீர்வாதங்களுக்கா? நமது பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண்பதற்கா? நமது நோய்களை குணமாக்குவதற்கா?

பாவத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனும் ஆவலில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தை பெறுவோம். யூதர்களைப்போல வெறும் அதிசயம் அற்புதங்களை மட்டும் அவரிடம் எதிர்பார்த்து வருவோமானால் அவரது இரக்கத்தால் ஒருவேளை அதிசயங்களை பெற்றாலும் நமது ஆத்துமா மன்னிப்பின்றி அழிவையே சந்திக்கும்.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்போதுதான் நாம் தேவனை அறிய முடியும். ஆம் நமது பாவங்கள் தேவனை நாம் அறிய முடியாதபடி நமக்கும் தேவனுக்கும் நடுவாக தடுப்புச் சுவராக உள்ளது. இயேசு கிறிஸ்துதான் அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும். நமது சுய பலத்தால் அது முடியாது. அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே, இந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து உமது இரத்தத்தால் என்னைக் கழுவி இரட்சிப்பை எனக்குத் தந்தருளும் என வேண்டுவோம். "குமாரன் (இயேசு) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

ஆதவன் 🌞 800🌻 ஏப்ரல் 07, 2023 வெள்ளிக்கிழமை

"எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே

 ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 )

பாவங்களுக்காக மிருகங்களைப் பலியிடும் பழைய ஏற்பாட்டுப்  பலி முறைமை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் நிறுத்தப்பட்டது. அவர் தனது சுய இரத்தத்தையே சிந்தி நித்திய மீட்பினை உண்டுபண்ணினார். ஆம், "காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." ( எபிரெயர் 10 : 4 )

பழைய ஏற்பாட்டில் பாவ நிவாரண பலியாகப் பலியிடும் மிருகங்களின் இரத்தம் ஆசாரியன் மேலும் மக்கள்மேலும் தெளிக்கப்படும். பலியிடப்படும் மிருகங்களின் உடலோ பாளையத்துக்கு வெளியே (மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியே எரிக்கப்படும்.  இதுவே பாவ நிவாரணப் பலியின் முறைமை. இதனை நாம் லேவியராகமத்தில் வாசிக்கலாம். 

"காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச்சுட்டெரிக்கக்கடவன்." ( லேவியராகமம் 4 : 12 ) அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்."

அன்பானவர்களே, ஒரு மிருகத்தைப்போல நமக்காக அவர் கொல்லப்பட்டார். "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போல அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 ) என்கின்றார் ஏசாயா. 

அன்று இயேசுவின் பாடுகளை நேரில் பார்த்த பலர் அவர் தேவனால் தண்டிக்கப்பட்டார் என்று எண்ணிக்கொண்டனர். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53 : 4 )


எபிரெய நிருப ஆசிரியர் இந்த உண்மையினை அழகாக நமக்குப் புரிய வைக்கின்றார். பழைய ஏற்பாட்டுக்கு காலத்தில் மிருகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியைவிட்டு வெளியே கொண்டுபோகப்பட்டு சுட்டெரிக்கப்படுவதைப்போல கிறிஸ்துவும் நகர வாசலுக்குப் புறம்பே சிலுவையில் அறையப்பட்டார். ஆம், அவர் மனிதனாகப் பிறந்தது மட்டுமல்ல, மனிதனைவிடக் கீழான ஒரு மிருகமாகத்  தன்னை மாற்றினார். எதற்காக? நாம் மீட்பு பெறவேண்டும் என்பதற்காக.

எனவே நாம் செய்யவேண்டியது என்ன? அவரது நிந்தனைகளை அவர் பட்ட அவமானங்களை நம்மில் சுமந்துகொண்டு (நமது பாவங்களைச் சுமந்துகொண்டு) அவரிடம் புறப்பட்டுச் செல்லவேண்டும். "ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 13 )

இந்தச் சத்தியங்களை நாம் ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துவின்மேல் அன்பு அதிகரிக்கும். நமது பாவங்களை அவர் மன்னிப்பார் எனும் விசுவாசம் ஏற்படும். ஆம் அன்பானவர்களே, "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 )

விசுவாசித்து கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்ளும்போது உலகம் கொடுக்க முடியாத சமாதானத்தையும் இரட்சிப்பையும் பெற்று மகிழலாம். 

ஆதவன் 🌞 801🌻 ஏப்ரல் 08, 2023 சனிக்கிழமை


"துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்" ( ஏசாயா 53 : 9 )

மரணத்துக்குத் தீர்ப்பிடப்படும் நிலையிலும் பிலாத்துவிடம் , "நான் ராஜாதான் சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்" ( யோவான் 18 : 37 ) என்று அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்து மிருக்கத்தைப்போல பலியிடப்பட்டாலும் ராஜ மேன்மையுடன் அடக்கம் செய்யப்பட்டதைப் பார்க்கின்றோம். 

இயேசு கிறிஸ்துவை எல்லோரும் துன்மார்க்கனாக எண்ணவேண்டும் எனக்கருதிய யூதர்கள் அவரை இரு கள்வர்களோடு சேர்த்து சிலுவையில் அறைந்தார்கள். அவரை அவமானப்படுத்தவே இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.   உலகின் பாவங்களைச் சுமந்து தீர்க்கவே அவர் இந்த அளவுக்குத் தன்னைத் தாழ்த்தினாலும் அவர் இறந்த உடனேயே பிதாவாகிய தேவன் அவரை மகிமைப்படுத்தத் துவங்கிவிட்டார். அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஆம் அவர் இறந்தபோது, பெரிய செல்வந்தர்களோடு இருந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியதுபோல, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு ( மத்தேயு 27 : 57 ) செல்வந்தனான நிக்கொதேமு ( யோவான் 19 : 39 ) ஆகியோர் உடனிருந்தனர். ராஜாக்களை அடக்கம் செய்வதுபோல நறுமணப் பொருட்கள் அவரது உடல்மேல்  பூசப்பட்டது. "ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்." ( யோவான் 19 : 39 ) என்று கூறப்பட்டுள்ளது. நூறு ராத்தல் என்பது சுமார் 30 கிலோ அளவாகும். விலைமதிப்புள்ள இந்த வாசனைத் திரவியங்கள் ஒரு அரசனது உடல்  மேல் பூசப்படுவதைப்போல இயேசு கிறிஸ்துவின் உடல்மேல் பூசப்பட்டன. 

உலகத்தின் பார்வைக்கு அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவரை மகிமைப்படுத்தினார். செல்வந்தர்களோடு அவர் இருந்தார். அன்பானவர்களே, இதனையே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் எல்லோருக்கும் தேவன் செய்கின்றார். உலகத்தால் அற்பமாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக நாம் இருந்தாலும் ஏற்ற இடங்களில் தேவன் நம்மை மகிமைப்படுத்திடுவார்.  

இயேசுவின் பாடுகளும் மரணமும் அழிவிற்கானவை அல்ல. மாறாக, மகிமைக்கானவை. எல்லா மனிதர்களும் மரித்து மண்ணோடு மண்ணாகிப்போகும்போது கிறிஸ்து அப்படியல்லாமல் உயிருடன் எழுந்தார்.  உலகத்தில் மட்டுமல்ல, அவர் பரலோக ஐஸ்வர்யவானாக உயர்ந்தார். எனவேதான் ராஜாவுக்குமுன் மண்டியிடும் மனிதர்கள்போல ஒட்டுமொத்த மனுகுலத்தையும் அவர்முன் மண்டியிடச் செய்தார் தேவன். 

ஆம், "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 10, 11 )

ஆதவன் 🌞 802🌻 ஏப்ரல் 09, 2023 ஞாயிற்றுக்கிழமை

"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 )

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முக்கியமான சாட்சி நமது இரட்சிப்பு அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுகின்றோம். இது வெறும் வசனமல்ல; அனுபவம்.  நம்முடைய பாவங்கள் சாபங்கள் இவை கிறிஸ்துவின் பாடுகளாலும் உயிர்ப்பினாலும் தான் நீக்கப்படுகின்றன. 

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) என்று ஏசாயா கூறுவது உண்மை என்பதை நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறும்போதுதான் நாம் சரியாக உணர்ந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் இது வெறும் வசனமாகவே நமக்குப் புரியும்.

நமது மீறுதல்கள் நிமித்தமே அவர் பாடுபட்டார். அவர் அப்படிப் பாடுபட்டுச் சிந்திய இரத்தத்தால் மீட்பு உண்டாயிற்று. இந்தக் கிறிஸ்தவ விசுவாசமே இயேசு கிறிஸ்துவை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் கடவுளாக வழிபடவேண்டிய அவசியமில்லை. இந்த உலகத்தில் நீதி போதனைகள் செய்து மரித்துப்போன சாதாரண மனிதர்களில் ஒருவரைப்போலவே அவரும் இருந்திருப்பார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கிறிஸ்து உயிர்த்தெழவில்லையானால் நமது நம்பிக்கை, பிரசங்கங்கள் எல்லாமே வீணாயிருக்கும். நாமும் இன்னும் பாவங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்போம். சிறிய பாவங்கள் செய்யும்போதும் நமக்குள் உண்டாகும் மனச்சாட்சியின் உறுத்தல்,  தேவனைவிட்டுப் பிரிந்தது போன்ற உணர்வு, அவற்றை தேவனிடம் அறிக்கையிடும்போது கிடைக்கும் மன அமைதி இவை கிறிஸ்துவின் உயிர்தெழுதலால் நமக்குக் கிடைக்கின்றது. 

மேலும், "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே."( 1 கொரிந்தியர் 15 : 15 ) என்கின்றார் பவுல் அடிகள். இப்படி ஒரு பொய்யைக் கூறவேண்டிய அவசியமென்ன? அதனால் என்ன லாபம்? அந்த லாபம் யாருக்கு? 

இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே சகோதரியே நீங்கள் கிறிஸ்தவர்களாகவோ கிறிஸ்துவை அறியாத பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்கலாம்.   யாராக இருந்தாலும் "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." ( ரோமர் 10 : 9 ) எனும் வசனத்தின்படி மீட்பு அனுபவம் பெறுவீர்கள். 

கிறிஸ்துவின் உயிர்ப்பு ஒருவேளை உங்களுக்கு சந்தேகிக்கும் விதமாகவும், கட்டுக்கதையுமாகத்  தெரியலாம். அல்லது சிறு குழந்தையாய் இருந்ததுமுதல் கற்றுக்கொடுக்கப்பட்டதால் அதனை பெயரளவுக்கு நம்பிக்கொண்டிருக்கலாம். உண்மையான விசுவாசத்துடன் உள்ளத்தை அவருக்குக் கொடுத்தால் உயிர்ப்பு உண்மை என்பதை உணர்ந்துகொள்வீர்கள். உயிர்த்த இயேசு கிறிஸ்து உங்களை உள்ளத்தில் பேசி நடத்தும் அனுபவத்தைப் பெறுவீர்கள். 

ஆதவன் 🌞 803🌻 ஏப்ரல் 10, 2023 திங்கள்கிழமை

"இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்." ( யோவான் 21 : 15 )

இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப் பின்னர் அவரது  சீடர்கள் ஒரு கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர்.  அவர் உயிர்தெழுந்தபின்னர் சீடர்களுக்கு உடனேயே வல்லமையும் பலமும் கிடைக்கவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பலம் அருளப்படும்வரை அவர்கள் ஒரு நிர்ப்பந்தமான நிலையில் இருந்தனர். தலைவர் இறந்துவிட்டார். இனி வேறு வழியில்லை; நாம் நமது பிழைப்பைப் பார்க்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்துத் தங்களது பழைய மீன்பிடி தொழிலுக்குத் திரும்பினர். 

"சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள்" ( யோவான் 21 : 3) என்று வாசிக்கின்றோம்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் அழைத்தவர்களைக் கைவிடுவதில்லை என்பதனை உறுதிப்படுத்தினார். சீடர்களைத் தேடி வந்தார். அதிசயமாய் அவர்களுக்குப் பெரிய மீன்பாடு கிடைக்கும்படிச் செய்தார். ஆம், தான் மரித்தபின்னரும் உயிருடன் இருக்கும்போதிருந்த அதே வல்லமை உடையவராய் இருப்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 

அன்பானவர்களே, ஒருவேளை இன்று நாமும் இந்தச் சீடர்களைப்போல நம்பிக்கையற்ற நிலையில் இருக்கலாம். நம்மை ஆதரித்தவர்கள், நாம் வெகுவாக நம்பியிருந்தவர்கள் நம்மைவிட்டு விலகியிருக்கலாம். சீடர்களைப்போல எதிர்கால நம்பிக்கையில்லா நிலைமை, துன்பங்கள், தனிமை நம்மை வாட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.  

இப்படியொரு நிலையில்தான்  அவர் முக்கியமான ஒரு கேள்வியைப் பேதுருவைப்பார்த்துக் கேட்கின்றார். "யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" உலக மனிதர்கள்,  பொருட்கள் இவைகளைவிட அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?என்று பொருள்படும் கேள்வி இது. பேதுரு அதற்கு,   "ஆம் ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன் என்பதை நீர் அறிவீர்" என்று பதில் கூறுகின்றார். இதன்பின் அவர் பேதுருவுக்கு தனது திருச்சபையின் மேய்ப்பர் பொறுப்பைக் கொடுக்கின்றார். 

ஆம், நமது ஆண்டவர் அன்பை விரும்புபவர். அனைத்தையும்விட தன்னை மனிதர்கள் அன்பு செய்வதையே அவர் விருப்புகின்றார். உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து  பேதுருவைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியை நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கின்றார். "நீ இவர்களைவிட / இவைகளைவிட என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா? "

அன்பானவர்களே, இயேசுவுக்கு அன்பாய் இருப்பது எப்படி?  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) என எழுதுகின்றார் இயேசுவின் அன்புச் சீடனான யோவான். மேலும் "அவரது வசனத்தைக்  கைக்கொள்ளுகிறவனிடத்தில்  தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  2 : 5 )

சுருங்கக் கூறவேண்டுமானால், அவரது வார்த்தைகளை நாம் வெறுமனே வார்தைகளாகப் பார்க்காமல் அவற்றை வாழ்வாக்கவேண்டும். இதுவே கிறிஸ்துவை அன்பு செய்தல். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை. எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் அழுத்தமாக எழுதுகின்றார், "ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்." ( 1 கொரிந்தியர் 16 : 22 ) அதாவது, உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நடுவராக வருவதற்குமுன் வசனம் கூறுவதன்படி அவரிடத்திலுள்ள அன்பில் பெருகுவோம் என்கிறார் அவர்.   

ஆதவன் 🌞 804🌻 ஏப்ரல் 11, 2023 செவ்வாய்க்கிழமை

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்"  (மத்தேயு - 28: 20)

உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்துக்குச் செல்லுமுன் தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கட்டளை தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது பல்வேறு போதனைகளைக் கொடுத்தார். ஏற்கெனவே  மோசே மூலம் கடவுள் கொடுத்த கட்டளைகளை மேலும் மெருகேறினதாகவும் அர்த்தமுள்ளவையாகவுமாக மாற்றினார். இந்தப் புதிய ஏற்பாட்டுக் கட்டளைகளை நாம் கைக்கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டின் கட்டளைகளின்படி நாம் நீதிமானாக இருப்பதுபோலத் தெரியலாம். ஆனால் இயேசுவின் உள்ளத்தை ஊடுருவும் பார்வையின்முன் நாம் பாவம் செய்தவர்களாக இருக்கலாம். 

இயேசு கிறிஸ்துவின் போதனைகள்  மோசே மூலம் வழங்கப்பட்டக் கட்டளைகளைவிட மேலானவை. உதாரணமாக, ஒருவர் மோசேயின் கட்டளையின்படி விபச்சாரம் செய்யாதவராக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கும் எவரும் ஏற்கெனவே அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று" என்று.  ஆம், எனவே பழைய கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் நீதிமானாக முடியாது. "எந்த மனுஷனும்  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை." (ரோமர் - 3:20)  என்கின்றார் பவுல் அடிகள். பழைய ஏற்பாட்டு கட்டளைகள் அனைத்தையுமே இயேசு கிறிஸ்து இப்படி மெருகேற்றினார். 

இப்படி "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. இன்றைய வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்"  அதாவது இப்படித் தனது போதனையைக் கடைபிடிக்க பெலன் தரும்படி அவர் உலகம் முடியும்வரை வரப்போகின்ற மனித சந்ததிகளோடு  இருப்பேன் என்கின்றார். 

இயேசுவின் கட்டளைகளை அப்போஸ்தலனாகிய பவுல் ஆவியின் பிரமாணம் என்கின்றார். மோசேயின் கட்டளைகள் பலவீனமானவைகள் கிறிஸ்து அவற்றை பலமுள்ளவையாக்கினார். மட்டுமல்ல, அவைகளை மனிதர்கள் கடைபிடிக்க உதவுவதற்காகவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.(ரோமர் -8:3) என்கின்றார்.

"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை."  (ரோமர் -8:2)

இயேசு கிறிஸ்துவின் இந்த ஆவிக்குரிய கட்டளைகளை மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள் என்கிறார். உலகம் முடியும்வரை வாழப்போகின்ற மக்களோடு இருந்து அவற்றைக் கடைபிடிக்கும் பலத்தை அவர் தருவார்.

ஆதவன் 🌞 805🌻 ஏப்ரல் 12, 2023 புதன்கிழமை

"மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது."( நீதிமொழிகள் 3 : 32 )

மாறுபாடுள்ளவன் என்பதற்கு,  சொல்லுக்கும் செயலுக்கும் முரணாகச் செயல்படுபவன் என்றும், கபடன், இரட்டை நாவுக்காரன், வெளிவேஷக்காரன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவன் எனப் பல பொருள்கொள்ளலாம். இத்தகைய மனிதன் கர்த்தருக்கு அருவெறுப்பானவன் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. 

மாறுபாடுள்ள குணமுள்ள மனிதன் பிறரிடம் பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காக உண்மையை மாற்றிப்பேசுவான். தனது உண்மை குணத்தை மாற்றி நல்லவன்போலச் செயல்படுவான்.  இப்படி இருக்கலாகாது என்று இயேசு கிறிஸ்துவும் கற்பித்தார்.  "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்றார் அவர். 

உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் கூறாமல் மாற்றி கூறுபவன் மாறுபட்டுள்ளவன். எல்லா இடத்திலும் மனத்திலுள்ளதை உள்ளபடியே கூறுபவன் நீதிமானாயிருப்பான். கர்த்தருடைய ரகசியம் அவனிடம் இருக்கிறது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருடைய ரகசியம் என்பது என்ன? "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) என அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல, மாறுபாடு இல்லாதவனின் உள்ளே கிறிஸ்து  இருப்பதுதான் அந்த ரகசியம். 

இன்று பலரும் இந்த உண்மையினை மறந்து தேவனைத்தேடி எங்கெங்கோ ஓடுகின்றோம். அன்பானவர்களே, இன்றைய வசனம் மிக எளிமையான வழியையே நமக்குக் கற்பிக்கின்றது. நமது உள்ளத்தின் நினைவுகளுக்கேற்ப நமது செயல்களை மாற்றிக்கொண்டால்  அவரை நமது உள்ளத்தில்  வரவைத்திடலாம். 

நமது அன்றாட வாழ்வை எண்ணிப் பார்ப்போம். நமது அலுவலகத்தில், நாம் பணி செய்யும் இடங்களில் நாம் எப்படி செயல்படுகின்றோம். சிலர் தாங்கள் நல்லவர்கள் என்பதனை நிரூபிக்கவேண்டி தங்களோடு பணிசெய்யும் இதரப் பணியாளர்களிடம் எப்போதும்  குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள். இதுபற்றி கேட்டால், "நான் தவறு  என மனதில் பட்டதை நேரடியாகச் சொல்கின்றேன்; என்னிடம் கபடமில்லை " என்பார்கள்.  இது சாத்தானின் தவறான போதனை. "பிறரது கண்ணிலுள்ள துரும்பை எடுக்க முயலுமுன் நமது கண்ணிலுள்ள தூணை அகற்ற முயலவேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து. 

எனவே, நம்மிடமுள்ள மாறுபாடான குணங்களை மாற்றிட முயலுவோம். மாறுபாடுள்ள செயலோ பேச்சோ நம்மிடம் இல்லாதபடி காத்துக்கொள்வோம்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அத்தகைய உள்ளத்தில்தான் தங்க இருக்க ஆசைப்படுகின்றார். 

ஆதவன் 🌞 806🌻 ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை

"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

கிறிஸ்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும்போது ஏற்படும் மகிமையான அனுபவத்தை அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் விளக்குகின்றார். அதாவது, ஆதியில் உலகத்தை உண்டாக்கியபோது இருளிலிருந்து ஒளியைப் பிரித்து உலகை ஒளியாக்கிய தேவன் இன்று தனது குமாரனான இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையான ஒளியை நமது இருதயங்களில் பிரகாசிக்கச் செய்கின்றார். அப்படி அவர் நமது உள்ளங்களை ஒளியாக்குவதால் நம்மிலிருந்து பாவ இருள் அகலுகின்றது. 

ஆதியில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று." ( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம். ஆம், வெறுமையாகவும் இருளாகவும், ஒழுங்கின்மையுமாக இருந்த பூமியை தேவன் சரியாக்கியதுபோல நமது இருதயத்தில் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளி நம்மையும்  சரியாக்கும். 

இந்த ஒளி நமது சுய வல்லமையால் நம்மில் ஒளிரவில்லை. மாறாக தேவனால் உண்டாயிருக்கின்றது. இந்த ஒளியை நாம் நமது உடலாகிய மண்பாண்டத்தில் பெற்றிருக்கின்றோம் என்று பவுல் அடிகள் அடுத்த வசனத்தில் எழுதுகின்றார். "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்."( 2 கொரிந்தியர் 4 : 7 )

அன்பானவர்களே, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் இதுதான். அதாவது, நமது இருதயத்தினுள் அவர் வருவதால் நாம் ஒளியுள்ளவர்கள் ஆகின்றோம்.  மட்டுமல்ல, இந்த ஒளி நமக்குத் திட நம்பிக்கையினையும் எதனையும் தாங்கும் மன வலிமையையும் கொடுக்கின்றது. எனவேதான் பவுல் அடிகள் தொடர்ந்து பின்வருமாறு எழுதுகின்றார்:-

"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப் படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 9 )

ஆம், கிறிஸ்து நமது உள்ளத்தில் வரும்போது நமக்கு கிடைக்கும் ஆவிக்குரிய மேலான ஆசீர்வாதம் இதுதான். துன்பத்தையும் பிரச்சனைகளையும் மேற்கொண்டு வெற்றிச்சிறந்தவர்களாக நாம் வாழ இந்த ஒளி உதவுகின்றது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) உலகத்தில் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்போம். அவரே தனது முகத்திலுள்ள மகிமையின் அறிவாகிய ஒளியை நமது இருதயங்களிலே பிரகாசிக்கச் செய்வார்.

ஆதவன் 🌞 807🌻 ஏப்ரல் 14, 2023 வெள்ளிக்கிழமை

"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." ( எபேசியர் 2 : 1 )

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிமையினைக் கொண்டாடிய நாம் அவரது உயிர்ப்பு மனுக்குலத்துக்குக் கொண்டுவந்த ஆசீர்வாதத்தைக்குறித்து இன்னும் அதிகம்  தியானிப்பது நல்லது. 

இயேசு கிறிஸ்து தான் மரித்து உயிர்ததுமட்டுமல்ல, அவரை விசுவாசித்து இரட்சிப்பை அடையும் அனைவரையும் பாவத்திலிருந்து உயிர்ப்பிக்கின்றார்.  பாவத்தால் மரித்து அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டிருந்தோம் நாம். அப்படி மரணமடைந்திருந்த நம்மை அவர் உயிர்ப்பித்தார். ஆம், அவரை விசுவாசித்து நமது பாவங்கள் கழுவப்படும்போது அவரது உயிர்தெழுதலின் சாயலிலும் நாம் இணைக்கப்படுவோம். 

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்." ( ரோமர் 6 : 5 )எனக் கூறுகின்றார். 

இப்படி, "நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்." ( எபேசியர் 2 : 3 ) அப்படி இருந்த நம்மை கிறிஸ்து விடுவித்தார். "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்". ( எபேசியர் 2 : 5 )

அன்பானவர்களே, இப்படி பாவத்துக்கு மரித்திருந்த நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவமன்னிப்படைந்து மீட்கப்படும்போது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுகின்றோம். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். இப்படி கிறிஸ்துவோடு நாம் உயிர்ந்தெழும்போது பாவத்துக்கு விலகி பரிசுத்தமாக வாழ முடிகின்றது. இப்படி வாழும்போது நம்மேல் இரண்டாம் மரணத்துக்கு அதிகாரமில்லை. அதாவது, நமது  ஆத்துமா நித்திய நன்றாக அக்கினிக்குத் தப்பிவிடுகின்றது. மட்டுமல்ல, நாம்  தேவனோடு இருந்து அரசாள்வோம். 

"முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 6 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மனிதர்களுக்குத் தரும் மிகப்பெரிய கொடை இதுதான். ஆம், அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர் களாயிருந்த நம்மை உயிர்ப்பித்தது மட்டுமல்ல, நம்மைப் பரிசுத்தமாக்கி தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராகவும் மாற்றுகின்றார். 

கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது மீட்பில் நமக்கு இடம்தர வேண்டுவோம். எந்த உலக ஆசீர்வாதங்களையும்விட இதுவே மேலான ஆசீர்வாதம். 

ஆதவன் 🌞 808🌻 ஏப்ரல் 15, 2023 சனிக்கிழமை

"கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." ( பிலிப்பியர் 2 : 15, 16 )

கிறிஸ்துவின் பாடுகளைத் தியானித்த பரிசுத்தவான் ஒருவர் கூறுவார், இயேசு கிறிஸ்து கெத்செமெனி தோட்டத்தில் இரத்த வேர்வை வியர்த்து  பின் யூதர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பல்வேறு பாடுகள்பட்டு இறுதியில் சிலுவைச் சாவை ஏற்றார். பொதுவாக நாம் இவற்றையே இயேசு பட்ட பாடுகளாக எண்ணிக்கொள்கின்றோம். ஆனால் அவர் இந்த உலகினில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை  ஆண்டுகளும் தொடர்ந்து பாடுபட்டார். உதாரணமாக நாம் தெரு ஓரத்தில் இருக்கும் சாக்கடைக்குள் வசித்து, உண்டு உறங்க முடியுமா? இயேசு அதற்கு ஒப்பான காரியத்தைச் செய்தார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பாடாக இருந்திருக்கும். 

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என தூதர்கள் வாழ்த்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாழ்ந்த அவர் இந்த உலகினில் பாவ மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்கு எவ்வளவு துன்பமும் வேதனையான காரியமாக இருந்திருக்கும்?  சாதாரண மனிதர்களான நம்மாலேயேகூடச் சிலத் துன்மார்க்க  மனிதர்களோடு 24 மணிநேரம் வாழ முடிவதில்லை.  ரயிலில் பயணம் செய்யும்போது சில வேளைகளில் குடிகாரரும் சீட்டாட்டக்காரர்களும் கூடி கும்மாளமடித்துக்கொண்டிருந்தால் நம்மால் அந்த இடத்தில அவர்களோடு பயணம் செய்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் கிறிஸ்து இத்தகைய மனிதர்களோடு  முறுமுறுக்காமல் வாழ்ந்தார். 

உலக மனிதர்களை அப்போஸ்தலரான பவுல் அடிகள் கோணலும் மாறுபாடுமான சந்ததி என்று இன்றைய வசனத்தில் கூறுகின்றார். இந்த "கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்." என்கின்றார் அவர். அதாவது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை,  நாம் அவர்கள் மத்தியில் குற்றமற்றவர்களாகவும் கபடம் இல்லாதவர்களும், தேவனுக்கேற்றபடி மாசற்றவர்களாகவும் வாழவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.  மட்டுமல்ல, அவர்களது செயல்பாடுகளை எண்ணி முறுமுறுக்காமலும் அவர்களோடு தர்க்கம் செய்யாமலும் வாழவேண்டும் என்கின்றார். 

இது சற்று கடினமான செயல்தான். ஏனெனில் இந்த உலகத்தில் நாம் பல்வேறு வகை மக்களைச் சந்திக்கின்றோம். அவர்கள் எல்லோரோடும் நம்மால் ஒத்துப்போக முடியாது. ஆனாலும் நம்மால் முடியுமட்டும் சகித்துக்கொள்வது மேலான காரியம் என்பதால் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இப்படிக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து இப்படியே இந்தக் கோணலான சந்ததிகளுக்குள் வாழ்ந்தார். அவர் பாடுகள்பட்டபோதுகூட இப்படியே சகித்துக்கொண்டு வாழ்ந்தார். இதனை அப்போஸ்தலரான பேதுரு, "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்." ( 1 பேதுரு 2 : 23 ) என்று எழுதுகின்றார். 

நாமும் குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யும் வல்லமைவேண்டி ஜெபிப்போம்.  

ஆதவன் 🌞 809🌻 ஏப்ரல் 16, 2023 ஞாயிற்றுக்கிழமை
 
"அக்காலத்திலே நல்ல திராட்சை ரசத்தைத் தரும் திராட்சைத் தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்".( ஏசாயா 27 : 2, 3 )

இஸ்ரவேல் வம்சத்தினரை வேதம் திராட்சைத் தோட்டத்துக்கு ஒப்பிட்டு பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றது.  "சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே" (ஏசாயா 5:7) என்றும் வாசிக்கின்றோம். இன்றைய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் இஸ்ரவேல் வம்சத்தினரைக் காப்பாற்றி, அதற்குத் தண்ணீர் பாய்ச்சி அதனை ஒருவரும் சேதப்படுத்தாதபடி இரவும் பகலும் காத்துக்கொள்வேன் என்கின்றார். 

இஸ்ரவேல் மக்களைக் காப்பாற்ற தேவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனாலும் அவர்கள் தேவனுக்கு எதிராக பாவ காரியங்களில் ஈடுபட்டு தேவனால் தண்டிக்கப்பட்டனர். ஆனால் தேவன் தனது கிருபையால் அவர்களை மீண்டும் மீண்டும் தன்னோடு  சேர்த்துக்கொண்டார்.

இன்றைய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாம்தான் இஸ்ரவேலர். அன்று இஸ்ரவேல் மக்களிடம் எதிர்பார்த்த மனம்திரும்புதலை தேவன் இன்றும் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மிடம் எதிர்பார்ப்பது மட்டுமல்ல, நாம்  மிகுந்த கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்புகின்றார். திராட்சைச் செடியான கிறிஸ்துவோடு இணைந்து வாழும்போதுதான் நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும். 

இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 1, 2 ) ஆம், தேவன் நாம் அதிக கனி கொடுக்கிறவர்களாக இருக்கவேண்டுமென்பதற்காக நம்மைச் சுத்திகரித்துக்கொண்டிருக்கிறார். 

"கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்" என்று கூறும் கர்த்தர் இப்படிச் செய்தபின்னரும் கனி கொடுக்கவில்லையானால் அறுத்துப்போடுவேன் எனஇயேசு கிறிஸ்து மூலம் கூறுகின்றார். 

கனி உள்ள வாழ்க்கையே நம்மைக் கிறிஸ்தவர்களாக மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும். ஆவியின் கனிகள் குறித்து நாம் பல தியானங்களில் ஏற்கெனவே வாசித்துள்ளோம்.  கூடுமானால், கலாத்தியர் 5:22,23 வாசகங்களை வாசித்து தெளிவடைவோம். மேலும், எபேசியர் நிருபத்தில்  "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே,நாம் செய்யவேண்டியது கிறிஸ்துவோடுள்ள நமது  இணைப்பை இழந்துவிடாமல் இருப்பதே.  அவரோடு இணைந்து வாழ்வோமானால் கனியுள்ளவர்களாக இருப்போம். அப்போது நம்மூலம் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார். நாமும் கிறிஸ்துவுக்குச் சீடர்களாக இருப்போம். 

"நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்."( யோவான் 15 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

ஆதவன் 🌞 810🌻 ஏப்ரல் 17, 2023 திங்கள்கிழமை

"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30 : 2 )

வேதாகம அடிப்படையில் எகிப்து என்பது அடிமைத்தன வாழ்வைக்  குறிக்கின்றது. அது பாவத்துக்கு அடிமையாகிப்போன வாழ்வு. இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மோசேமூலம் விடுவித்து வழி நடத்திய தேவன் அவர்களை மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டாம் என்று எச்சரித்தார். எகிப்துக்குத் திரும்புவோம் எனப்  பிடிவாதம்பிடித்த மக்களைத் தண்டித்தார். 

ஆம், பழைய ஏற்பாட்டு சம்பவங்களும் வசனங்களும் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானானுக்கு வழி நடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து பரம கானானை நோக்கி வழி நடத்துகின்றார். 

எனவேதான் தேவன் பல்வேறு எச்சரிப்புகளைக் கொடுத்தார்.

"கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்." ( எரேமியா 42 : 15,16 )

"என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும் (எரேமியா 42:18)

புதிய ஏற்பாட்டில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதை எகிப்துக்குத் திரும்பிச்  செல்வதாக எடுத்துக்கொள்ளலாம். எனவேதான் இன்றைய வசனம் எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ என்று கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பேதுரு தனது நிருபத்தில், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என எழுதுகின்றார். 

ஒருவர் பழைய பாவ வாழ்க்கையைத் தேடுவதற்கு உலக ஆசைதான் காரணமாய் இருக்கும். செல்வம், பதவி, அந்தஸ்து இவைகளுக்காக ஒருவர் பழைய எகிப்து வாழ்க்கையைத் தேடலாம். அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் தேடாமல் அவரைவிட்டுப் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! (எசாயா 31:1) என வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

ஆதவன் 🌞 811🌻 ஏப்ரல் 18, 2023 செவ்வாய்க்கிழமை

"எஸ்தர்,  மொர்தெகாயிடத்தில்  வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்." ( எஸ்தர் 2 : 20 )

இன்றைய காலத்தில் சிலர் பெற்ற தாய்தகப்பனையே  பாரமாக எண்ணி வீட்டைவிட்டுத் துரத்துவதையும் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும் நாம் வாழ்வில்  பார்க்கின்றோம். இன்னும், நன்றி மறக்கும் மக்களையும் நாம் வாழ்வில் சந்திக்கின்றோம்.   தங்களது காரியம் முடிந்தபின்னர் மெதுவாகக் கைகழுவி விடுவார்கள். மேலும் சிலர் அந்தஸ்து கருதி தங்களைவிட பொருளாதாரத்திலும் பதவியிலும் தாழ்ந்தவர்களைத் தங்கள் உறவினர்கள் என்று கூறத் தயங்குவார்கள்.  

ஆனால், சாதாரண மொர்தெகாய் எனும் மனிதனால் வளர்க்கப்பட்ட எஸ்தர் குறித்து நாம் வேதத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்க்கின்றோம். உண்மையில் எஸ்தர் ஒரு அநாதை. மொர்தெகாய் எனும் யூதனின் சித்தப்பா மகள். "அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்." ( எஸ்தர் 2 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த எஸ்தர் இந்தியா முதல் எத்தியோப்பியா வரைக்குமுள்ள 127 நாடுகளை அரசாண்ட பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் ராணியாகிவிட்டாள். அகாஸ்வேர் ராஜாவின் மனைவியாகிவிட்டதால் இப்போது அவள் இந்த சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி.  ஆனால் அவளை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் இப்போது ராஜாவின் அரண்மனை வாசல் காக்கும் காவல்காரன்!!  

இப்படி உயர்த்தப்பட்ட எஸ்தரைக் குறித்துதான் இன்றைய வசனம் கூறுகின்றது "எஸ்தர் மொர்தெகாயிடத்தில் வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்" என்று. பெரிய சாம்ராஜ்யத்தின் ராணியானபின்பும் சாதாரண வாயில்காப்போனாகிய மொர்தெகாயை நன்றியோடு நினைவுகூர்ந்ததால்தான் அவனது சொல்கேட்டு நடந்தாள்.   

அன்பானவர்களே, இப்படி அவள் நடந்ததால் ஏற்பட்ட விளைவு நமக்குத் தெரியும். எஸ்தரைக்கொண்டு யூதர்களுக்கு மிகப்பெரிய மீட்பினை தேவன் ஏற்படுத்தினார். அவளால் யூதகுலம் அழியாமல் காப்பாற்றப்பட்டது. இன்றைய மனிதர்களைப்போல  எஸ்தர் நன்றி இல்லாமல் தன்னை வளர்த்த மொர்தெகாயை தவிர்த்து தனது பட்டத்து ராணி வாழ்க்கையையே பெரிதாக எண்ணியிருப்பாளேயானால் அவளது வாழ்வும் யூத குலமும்  அழிந்திருக்கும். 

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தான் ஜனாதிபதியானபின்பும் மறக்காமல் தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியரை நினைவுகூர்ந்து அவரை நேரடியாகச் சென்று பார்த்தது செய்தித் தாள்களில் வெளியாகி இருவரது மதிப்பையும் உயர்த்தியதை நாம் அறிவோம். 

வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வு நமக்கு வந்தாலும் நாம் கடந்துவந்த பாதைகள், நமக்கு உதவியவர்களை மறக்காமலிருப்போம். ஏனெனில் எல்லா காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் அந்தஸ்து இவற்றின் வேர் நம்மை ஒருகாலத்தில் தாங்கிப்பிடித்த மக்கள்தான். அவர்களை மதிக்கும்போதுதான்  தேவ சமாதானம் நம்மை நிரப்பும். "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.......................................நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 )

ஆதவன் 🌞 812🌻 ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை

"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)

ஆதிகால மனிதன் உலகினில் தான் கண்டு பயப்பட்ட  அனைத்தையும் வணங்கத் தொடங்கினான். சூரியன், நெருப்பு, காற்று, பாம்பு, சிங்கம் எனப் பலவற்றையும் வணங்கியதற்கு மனிதனது பயமே காரணம். இவை அனைத்தும் படைக்கப்பட்டவையே என்றும் இத்தகைய பயப்படத்தக்கவற்றைப் படைத்தவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராக இருப்பார் எனவும் மனிதன் எண்ணியிருந்தால் இவைகளை வணங்கியிருக்கமாட்டான்.

இப்படி, படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல்  அடிகள் இங்கு விளக்குகின்றார். இப்படி படைக்கபட்டப் பொருட்களை வணங்கக் காரணம் ஒன்று பயம் இன்னொன்று இச்சை. அதாவது, படைக்கபட்டப் பொருட்கள் கண்களுக்குத் தெரிவதால் அவற்றின்மேலுள்ள ஆசை.

அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலை. ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். காரணம் இச்சை. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என  இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம், இத்தகைய ஆசை கொள்வதும் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டதை ஆராதிப்பதுதான்.  மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் தங்களைப்போல  "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) என்கின்றார் பவுல் அடிகள். 

படைத்தவரை வணங்கி ஆராதிப்பதும் அவற்றைப் படைத்த வல்லமையான தேவனுடன் இணைவதும்தான் தேவனுடைய சித்தம். ஆனால் இந்தத் தேவ சித்தத்தை பொய் என மாற்றி தேவனை ஆராதிக்காமல் தேவனால் படைக்கப்பட்ட பொருட்களை ஆராதிக்கின்றார்கள்.

அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே இழிவான இச்சை  நோய்களும் சாபங்களும் மனிதனைத் தொடர்கின்றன. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல் ஆசைகொள்வதே. எனவே, எந்த சூழ்நிலையிலும் படைக்கப்பட்டப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்காமல் படைத்த தேவனே போதுமென வாழ்வோம். நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்   


ஆதவன் 🌞 813🌻 ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை

"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )

மனிதர்கள் எல்லோரும் எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருந்துவிடுவதில்லை. சிலருடைய வாழ்க்கைப்  பல ஆண்டுகளாக  சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும். சமுதாயத்தாலும் சொந்தங்களாலும், அற்பமாக எண்ணப்படும் வாழ்க்கையாக இருக்கும். வேறு சிலர் பல ஆண்டுகளாக செல்வம் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வாழ்வார்கள். ஆனால் ஒரு தலைமுறை மாறி அடுத்த தலைமுறையில் எல்லாமே தலைகீழாகிவிடும். ஆனால் பொதுவாக மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. பணம் வந்தவுடன் பெரும்பாலானோர்பிறரை அவமதிக்கின்றனர்.   

ஒருமுறை ஒரு வயதான சகோதரி என்னிடம் தங்களது குடும்ப நிலைமைகுறித்து பேசும்போது, "பிரதர், முன்பு நாங்கள் நல்ல வசதியாக வாழ்ந்தோம். எங்க வீட்டுக்காரர் இறந்தபின்பு வருமானம் இல்லை. படித்த எனது இரண்டு மகன்களுக்கும் வேலை இல்லை, திருமண வயதில் மகள் வேறு இருக்கின்றாள்......எங்களை எங்கள் சொந்தக்காரர்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர். எங்களோடு பேசினால் ஒருவேளை பண உதவி கேட்டுவிடுவோமோ என்று எங்களை ஒதுக்குகின்றனர்". என்று கூறி வருத்தப்பட்டார். 

அவருக்காக ஜெபித்துவிட்டு, இன்றைய வசனத்தை அவர்களுக்குச்சொல்லி  அவர்களையும் இந்த வசனத்தைச் சொல்லி ஜெபிக்கச் சொன்னேன். ஆம், இன்றைய வசனம் தேவ மனிதனாகிய மோசேயின் ஜெபமாகும். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என ஜெபிக்கின்றார் மோசே. 

மோசேயின் வாழ்க்கை நாற்பது நாற்பது நாற்பதாக பகுக்கப்பட்ட வாழ்க்கை. முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்க்கை, அடுத்த நாற்பது ஆண்டுகள் வானாந்தர வாழ்க்கை. ஆடுகளோடு வெய்யிலிலும் மழையிலும் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் வாழ்க்கை. இந்தத் துன்பங்களை மோசே ஜெபித்ததுபோல தேவன் மகிழ்ச்சியாக்கினார். ஆம்,  அவரது வாழ்வின் இறுதி 40 ஆண்டுகள் தேவனோடு நடக்கும் வாழ்க்கையினை தேவன் அவருக்குக் கொடுத்தார்.  

அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்களும் துன்பத்தில் இருக்கலாம். ஊராரால், சொந்தங்களால் சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழலாம். கலங்காதிருங்கள். மோசேயைப்போல உறுதியுடன் தேவனைப் பற்றிக்கொண்டு "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்" என்று வேண்டுதல் செய்வதே சரியானது.

சிறுமைப்படுத்தப் பட்டவர்களின் கண்ணீரைப் பார்க்கின்றவர்  நமது தேவன். நிச்சயமாக அற்புதம் செய்வார். நாம்  சிறுமைப்படுத்தப்பட்ட நாட்களுக்குச் சமமாக மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே நம்மை  மகிழச் செய்வார். பக்தனாகிய யோபுவின் சரித்திரம் இதனையே விளக்குகின்றது. தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தோடு இருந்த யோபுவின் அவமானங்களையும் கண்ணீரையும் தேவன் மாற்றவில்லையா? 

"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்" ( யோபு 42 : 12 ) என்று வேதம் கூறுகின்றது. அன்பானவர்களே, நண்பர்களால், ஊராரால் அற்பமாக எண்ணப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட  யோபுவை தேவன்  ஆசீர்வதித்ததுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். கலங்காதிருங்கள்.

ஆதவன் 🌞 814🌻 ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை

"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

தேவன் தெரிந்துகொண்ட அபிஷேகிக்கப்பட்ட மனிதனாக இருந்தாலும் தாவீதின் ஆரம்ப வாழ்க்கை போராட்ட வாழ்க்கையாகவே இருந்தது. இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை அவர் சவுலுக்குத் தப்பி ஓடித்  தன் உயிரைக் காப்பாற்ற மலையிலுள்ள குகையில் பதுங்கியிருக்கையில் கூறியது. 

இன்று நாம் இந்த வசனங்களை வீட்டில் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்துகொண்டோ அல்லது சபை ஆராதனையில் இருந்துகொண்டோ கூறலாம். அது மிகவும் எளிது. ஆனால் எந்தநேரமும் தனது உயிர் பறிபோகலாம் என்ற இக்கட்டான நிலையில் இருந்துகொண்டு தாவீது இந்த விசுவாச அறிக்கையைக் கூறுகின்றார். 

தான் இந்த வசனத்தைக் கூறுகையில் இருந்த நிலைமையைத் தாவீது பின்வருமாறு கூறுகின்றார். 

"என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 57 : 4 )

இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றும் ஆண்டவரே என்று அவர் கூறவில்லை. மாறாக, தேவன் அவரைக் காப்பாற்றிவிட்டார் எனும் உறுதி தேவன் காப்பாற்றுமுன்னரே தாவீதுக்கு இருந்தது. எனவேதான், "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவன்" என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இதுதான் விசுவாசம். இன்று நாமும் இத்தகைய விசுவாச அறிக்கையினை நமது வாழ்க்கையில் அறிக்கையிடப் பழகவேண்டும். கடன் பிரச்சனைகள், தீராதநோய்கள், வறுமை, வேலையில்லாமை, சொந்தங்களால் புறக்கணிப்பு போன்ற எந்த நிலையிலுமிருந்தும் தேவன் நம்மைக் காப்பாற்றி விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார். நமது தற்போதைய நிலைமை அவருக்குத் தெரியும். தாவீதைப்போல, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." என்று உறுதியாகச் சொல்வோம். 

சூழ்நிலைகள் தேவனைத் தடுக்க முடியாது. காரணம், சூழ்நிலைகளையே மாற்றவல்லவர் நமது தேவன். எனவே, சூழ்நிலைகளையல்ல சூழ்நிலைகளையே  மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம். நமக்காக அவர் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் என்று விசுவாசிப்போம்; தாவீதைப்போல அதனை அறிக்கையிடுவோம்.  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

ஆதவன் 🌞 815🌻 ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை

"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 17, 18 )

பெருமை சிலருக்கு உடலோடு ஒட்டிய தோல்போல அவர்களோடு ஒட்டியே இருக்கும். நல்லகாரியங்களில் மட்டுமல்ல பாவ காரியங்களிலும் கூட மேன்மை பாராட்டுகின்ற அற்பர்களாக இருக்கின்றனர் சிலர். ஒரு ஆப் (half) அடித்தாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என பெருமையடிக்கிறான் குடிகாரன். நான் இந்தியாவின் பல்வேறு மாநில பெண்களோடு இன்பம் அனுபவித்துள்ளேன் என பெருமை பேசுகிறான் விபச்சாரக்காரன். இதுபோல தங்களது பதவி, செல்வாக்கு, பணம், அதிகாரம் இவைகளைக்குறித்து பெருமை பேசும்  பலர்  உண்டு.

பொதுவாக பெருமை பேசுபவர்கள் மற்றவர்கள் தங்களை உயர்வாக எண்ணவேண்டும் என்பதற்காகவே இப்படிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் இத்தகைய பெருமை பேசும் மக்களைவிட்டு சற்று அகன்றவுடன் எல்லோரும் இவர்களது அற்பப் பெருமை பேச்சைக் கேலிபேசிச்  சிரிக்கத்தான் செய்வார்கள்.   மேலும், இப்படிப் பெருமை பேசுபவர்கள் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." என்று கூறுகின்றார். தற்பெருமை பேசி பெருமையோடு அலைந்த அரசியல் தலைவர்கள் அழிந்துபோன உண்மையினை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம். 

நமது அறிவு, உடல் பலம், செல்வம் இவை எல்லாமே தேவ கிருபையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அனைத்தையும் நம்மைவிட்டு எடுத்துக்கொள்ள முடியும். இந்த உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். எனவேதான், "ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்" ( எரேமியா 9 : 23 ) என எரேமியா மூலம் தேவன் உணர்த்துகின்றார். 

இந்த உலகினில் தேவனை அறியும் அறிவுதான் மேலான அறிவு.  தேவனை வேதாகமத்தைப் படிப்பதாலோ, இறையியல் கல்வி பயில்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதாலோ, பிரசாங்கங்களைக் கேட்பதாலோ, இதுபோன்ற ஆவிக்குரிய தியான கட்டுரைகளை வாசிப்பதாலோ அறிய முடியாது. நம்மை அவருக்கு ஒப்புவித்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாலேயே அறிய முடியும். 

இதுவே உலகினில் மேலான அறிவு. தேவனை அறியாத மனிதன் அழிந்துபோகும் மிருகத்துக்கு ஒப்பாயிருக்கின்றான். எனவேதான் "மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 24 ) என வாசிக்கின்றோம்.

அன்பானவர்களே, தேவன் நமக்கு நல்ல வேலை, அறிவு, அழகு, அந்தஸ்து, செல்வம், புகழ் தந்து உயர்த்தும்போது மனத் தாழ்மையாய் இருக்கக் கற்றுக்கொள்வோம். "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 )

ஆதவன் 🌞 816🌻 ஏப்ரல் 23, 2023 ஞாயிற்றுக்கிழமை

"வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே." ( தீத்து 3 : 11 )

தேவன் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. உலகிலுள்ள எல்லோரும் தன்னை அறியவேண்டுமென்று தேவன் விரும்பினாலும் மனிதர்களது சுய குணமே தேவனை அவர்கள் அறியத் தடையாக இருக்கின்றது.  

கிறிஸ்தவர்களிலும்கூடச்  சிலர் வேத வசனங்களையும், வேத உண்மைகளையும் புரட்டிப் பேசுகின்றனர். காரணம் சுய லாபம். நாம் இத்தகைய மனிதர்களுக்கு வேத உண்மைகளை எடுத்துக் கூறினாலும் இவர்கள் அவற்றை  உண்மையென உள்ளத்தில் உணர்ந்தாலும் தாங்கள் கூறும் தவறான உபதேசத்தையும், தவறான வழிகளையும் விட்டுத் திரும்பமாட்டார்கள். காரணம் சரியான வழியை ஏற்றுக்கொள்வது ஏதோ ஒரு விதத்தில் அவர்களை பாதிப்பதாக இருப்பதால்தான். கிறிஸ்தவத்தில் இத்தகைய வேத புரட்டு ஊழியர்களும் அதிகம்பேர் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இத்தகைய மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த, "வேதாகமத்தில் இருப்பது உண்மைதாங்க...ஆனால் அதன்படி யாரும் வாழ முடியாது" என்று தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.  இப்படி வேத சத்தியத்தை உண்மை என உணர்ந்தாலும் அதனைத் தவிர்ப்பவன்தான் வேத புரட்டன். 

இன்றைய வசனம் கூறுகின்றது, இப்படி வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு என்று. அதாவது இத்தகைய வேதபுரட்டர்களுக்குமுன் நாம் வாதம் செய்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.  அப்படிப்பட்டவன் தானே ஆக்கினைத்தீர்ப்படைய பாவம் செய்தவனாய் இருக்கின்றான். ஆவிக்குரிய மேலான அனுபவங்களை இத்தகைய மனிதர்கள் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

மேலும், கிறிஸ்துவை அறியாத மக்கள்கூட கிறிஸ்துவைப்பற்றியும் வேத உண்மைகளைப்பற்றியும் நாம் கூறுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இத்தகைய வேத புரட்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

இதற்கு அடிப்படையான காரணம் உண்மையான மனம் திரும்புதலும் மீட்பு அனுபவமும் இல்லாமல் இருப்பதுதான். ஒருவர் சார்ந்திருக்கும் சபைகளோ ஊழியர்களோ இதற்குக் காரணமாக முடியாது.  யூதாசுக்குக் கிடைத்தது மிக அற்புதமான ஊழியர், வழிகாட்டி, தலைவர், ஆலோசகர். ஆனால் யூதாசின் வாழ்வு தோல்வியடைந்தது. காரணம், தனிப்பட்ட முறையில் அவனிடம் குணங்களில் மாறுதல் ஏற்படவில்லை. மனம்திரும்புதல் இல்லை. கடமைக்காக இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவன் அவன்.  

அன்பானவர்களே, இத்தகைய மனிதர்கள் நம்மோடு நமது சபைகளில் இருப்பார்கள். ஆனால் எல்லா வேத சத்தியங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவர்களுக்கு உண்மையை இரண்டு மூன்றுமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவர்களை விட்டு நாம் விலகிவிடவேண்டும். அதாவது அதற்குமேல் அவர்களிடம் இதுகுறித்து நாம் தர்க்கம் செய்துகொண்டிருக்கக் கூடாது எனத் தனது சீடனான தீத்துவுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் அறிவுரை கூறுகின்றார்; இந்த அறிவுரை நமக்கும்தான்.

வேத புரட்டர்களை அடையாளம் கண்டு அவர்கள் சத்தியத்தை அறிய ஆலோசனை கூறுவோம். ஏற்றுக்கொள்ளவில்லையானால் நமது முயற்சிகளை அவர்களைத் திருத்துவதிலேயே செலவழிக்காமல் விட்டு விலகுவோம்.

ஆதவன் 🌞 817🌻 ஏப்ரல் 24, 2023 திங்கள்கிழமை

"சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 25 )

ஆடுகள் பொதுவாக மந்தையாக அதாவது கூட்டமாகத்தான் இருக்கும். குறிப்பாக செம்மறி ஆடுகள் கூட்டமாகவே இருக்கும். கூட்டமாக இருக்கும் ஆடுகள் கொடிய விலங்குகள் துரத்தும்போது சிதறி ஓடும். தனித்தனியாக அவை அனாதைபோல அலையும்.  நாம் முன்பு இப்படிச் சிதறிய ஆடுகளைப்போலவே இருந்தோம் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு.

சரியான வழிநடத்துதல் இல்லாமல், போதிய உணவு கிடைக்காமல், உரிய பாதுகாப்பு இல்லாமல் அலையும் ஆடுகள்போல இருந்த நாம் இப்பொழுதோ கிறிஸ்துவிடம் வந்துவிட்டதால் நம் ஆத்துமாக்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. காரணம் அவர் நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார்.  

"நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், நல்ல மேய்ப்பன் தனது ஒவ்வொரு ஆட்டைப்பற்றியும் அறிந்திருப்பான்; அவைகளுக்குக் காயம் கட்டுவான்; இயலாத ஆடுகளைத் தனது தோளில் தூக்கிச் சுமப்பான். 

தாவீது ராஜா கர்த்தரை நல்ல மேய்ப்பராக பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கண்டு உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." ( சங்கீதம் 23 : 1) என்று. 

நல்ல மேய்ப்பனுக்கு எங்கு தனது ஆடுகளுக்குப்   போதிய உணவு கிடைக்கும், எங்கு ஆபத்து இருக்கின்றது போன்ற காரியங்கள் தெரிவதால் தனது ஆடுகளைச் சரியான வழியில் நடத்திச் செல்லுவான். மேலும் கொடிய வன விலங்குகள் ஆடுகளைத் தாக்க வரும்போது அவற்றைப் போராடித் துரத்துவான். அப்படித் துரத்தும்போது தனது உயிரையும் அவன் இழக்கக்கூடும். இதனையெல்லாம் அறிந்திருந்த  தாவீது  தொடர்ந்து, "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 ) என்கின்றார்.

தாவீது தீர்க்கதரிசனமாக உணர்ந்து கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்." ( யோவான் 10 : 11 ) என்று கூறியது மட்டுமல்ல கூறியதுபோல ஆடுகளான  நமக்காகத் தன்  உயிரையும்  கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளும் இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறும் வார்த்தைகளும் ஆவிக்குரிய அர்த்தமுள்ள உண்மைகளாகும். சிதறுண்ட ஆடுகளாய் எந்த நம்பிக்கையுமில்லாமல் குருட்டாம்போக்கில் நாம் வழிபடும் தேவனல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்து நம்மை நடத்துவார். 

இனி நாம் சிதறுண்ட அநாதை ஆடுகளைப்போல அலைந்து திரிய வேண்டாம். கர்த்தராகிய இயேசுவை அண்டிக்கொள்வோம். நல்லமேய்ப்பனாகிய அவரே நம்மை  நிலை வாழ்வுக்கு வழி நடத்துவார் என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

ஆதவன் 🌞 818🌻 ஏப்ரல் 25, 2023 செவ்வாய்க்கிழமை

"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 3 )

இன்று பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய தெளிவும் நமது வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வுக்கு அவரது தேவையும் உதவியும் பற்றி கிறிஸ்தவர்கள் பலருக்கும் போதிய புரிதலில்லை.  அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் நாம் எதனையுமே செய்யமுடியாது. ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ முடியாது.

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 ) எனத் தனது சீடர்களுக்கு இயேசு கூறினார். இன்றைய வசனம் கூறப்பட்டதன் பின்னணியினைப் பார்ப்போமானால் இது இன்னும் தெளிவாக நமக்குப் புரியும். 

"அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட பந்தி விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 1 ) அதாவது, உணவு பரிமாறும் வேளையில் தங்களது இனத்து விதவைப் பெண்களை எபிரேயர்கள் சரியாக நடத்தவில்லை என கிரேக்கர்கள் முறுமுறுத்தார்கள். எனவே பந்தி விசாரிப்பைச் சரியாகக் கவனிக்க ஒரு குழு அமைப்பது எனச் சீடர்கள் முடிவெடுக்கின்றனர்.    

"ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்." என்கின்றனர். அதாவது பந்தி விசாரணைச் செய்வது என்பது மிகச் சிறிதான ஒரு பணி. ஆனால் திருச்சபையில் அந்தப் பணியை ஒருவர் செய்வதற்கே பரிசுத்த ஆவியைப் பெற்றவராக இருக்கவேண்டும் எனச் சீடர்கள் முடிவெடுத்தார்கள்.  அப்படியானால் பரிசுத்த ஆவியானவர்  நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தேவையாக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இயேசு கிறிஸ்து கூறினார், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்று. எனவே அன்பானவர்களே, நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கவேண்டியது மிக மிகத் தேவையான காரியமாயிருக்கின்றது.   

வெறுமனே சில மதச் சடங்குகளை நாம் கடைபிடிப்பதால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆவியானவரைப் பெறவேண்டுமெனும் தாகம் நமக்கு வேண்டும். 

"நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்." ( லுூக்கா 11 : 9 ) என்று இயேசு கிறிஸ்து கூறியதைப் பலரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே என எண்ணுகின்றனர்.  வசனங்களைத் துண்டு துண்டாக வாசிப்பதால் ஏற்படும் தவறு இது. இயேசு என்னச் சொல்ல வருகின்றார் என்பது தொடர்ந்து வாசித்தால்தான் புரியும். இந்த வார்த்தைகளை இயேசு சொல்லி முடிப்பதைப் பாருங்கள்:- "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா." ( லுூக்கா 11 : 13 )

தேவனிடம் பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது அவரை அறிந்துகொள்ளும்படி உங்கள் இதயங்களை அவர் திறந்திடுவார். 

ஆதவன் 🌞 819🌻 ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை

"என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்." ( சங்கீதம் 25 : 18 )
                                                
இன்றைய தியானத்துக்குரிய வசனம் தாவீது ராஜா கூறியது. இரண்டே வரிகளைக்கொண்டிருந்தாலும் இந்த   விண்ணப்பம் தாவீது ராஜாவின் மேலான ஆன்மீக அனுபவத்தைக் கூறுகின்றது. 

பொதுவாக சாதாரண மனிதர்கள் என்றால் "ஆண்டவரே என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து  அவற்றை நீக்கியருளும்" என்றுதான் மேற்படி ஜெபத்தை ஜெபித்திருப்பார்கள். ஆனால் தாவீது அப்படி ஜெபிக்கவில்லை. மாறாக,  ஆண்டவரே  என்  சிறுமையையும், துன்பத்தையும் பார்த்து என் பாவங்களையெல்லாம் எனக்கு மன்னித்தருளும் என்று ஜெபிக்கின்றார்.

செல்வங்கள், பதவி, அந்தஸ்து இவை அனைத்தையும்விட பாவங்கள் மன்னிக்கப்படுவதே தாவீதின் பார்வையில் முக்கியமானதாக இருந்தது. எனவே அவர் தனது துன்பங்களை நீக்கியருளும் என்று ஜெபிக்கவில்லை. 

இயேசு கிறிஸ்து கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று. தாவீது பழைய ஏற்பாட்டு பக்தனாக இருந்தாலும் இந்த தேவ கருத்தை அவர் அறிந்திருந்தார். ஆம், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத்தான் நாம் தேடவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் பாவங்கள் அகற்றப்படவேண்டும் என்று அவர் கருதினார். எனவேதான் இப்படி விண்ணப்பம் செய்கின்றார். 

அன்பானவர்களே, நமது ஜெபங்கள் எப்படி இருக்கின்றன என்று சிந்தித்துப்பார்ப்போம். நமது உலக ஆசைகளையும் உலகப் பிரச்சனைகளையும் முன்னிலைப்படுத்தி ஜெபிக்கின்றோமா இல்லை, முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் எனும் ஆவல் தாவீதைப்போல நமக்கு இருக்கின்றதா?  

உலகத்தில் நாம் சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை வாழலாம், நமக்குத் துன்பங்கள் இருக்கலாம், பிரச்சனைகள் இருக்கலாம் இவைகளை மாற்றும் என தேவனிடம் வேண்டுவதைவிட, ஆண்டவரே, எனக்கு இந்தத் துன்பங்களும் பிரச்சனைகளும் உள்ளன.  இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றேன். இவைகளுக்கு ஈடாக எனது பாவங்களை மன்னியும் என வேண்டுவோமா? இந்த ஜெபம் தாவீதின் ஜெபத்தைப்போல தேவனுக்கு ஏற்ற ஜெபமாக இருக்கும்.

இதுவே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது; இப்படி நாம் வேண்டும்போது  தேவன் நமது மற்ற  தேவைகளைச்  சந்திப்பது மட்டுமல்ல அவைகளை நமக்குக் கூட்டித்  தந்தும்  ஆசீர்வதிப்பார்.

ஆதவன் 🌞 820🌻 ஏப்ரல் 27, 2023 வியாழக்கிழமை

"மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ." ( மத்தேயு 19 : 26 )

தேவன் சர்வ வல்லவர் என்று நாம் கூறுகின்றோம். அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை.   இல்லாதவைகளை  இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் (ரோமர் 4:17) அவர். இப்படித்தான் அழைத்து அவர் வார்த்தையால் உலகத்தைப் படைத்தார்.

இன்றைய வசனம் சொல்லப்பட்டதன பின்னணியைப் பார்ப்போமானால் செல்வந்தனான ஒரு வாலிபன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து ஆண்டவரே, நித்திய ஜீவனை அடைந்திட நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோது இயேசுவுக்கும் அவனுக்கும் இடையே சில உரையாடல்கள் நடைபெறுகின்றன. இறுதியில் இயேசு அவனிடம் "நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் உன் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடு" என்று கூற அவன் துக்க முகமாய்த் திரும்பிச் சென்றான்.  

அப்போது இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை நோக்கி, "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்." ( மத்தேயு 19 : 24 ) என்றார். சீடர்கள் அவரிடம் அப்படியானால் யார்தான் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார், "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ." 

இன்றும் பலர் பணக்காரர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்றே  எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து, அப்படிக் கூறாமல், "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ." என்றுதான் கூறினார். அதாவது தேவனால் யாரையும் தனக்கு ஏற்புடையவராக மாற்றிட முடியும். 

ஆம், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ) 

மேலும் தேவன் வெளித் தோற்றத்தைக்கொண்டு மனிதர்களைத் தீப்பிடுபவரல்ல. அவர் மனிதர்களது இதயத்தையே நோக்கிப்பார்க்கின்றார்.  பெரிய செல்வந்தர்களின் மனைவிகள்  இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியத்தில் உதவினர்  என்று நாம் வாசிக்கின்றோம். "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்." ( லுூக்கா 8 : 3 )

நாம் நமது உள்ளத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது நமது உள்ளான மனிதனில் மிகப்பெரிய மாற்றத்தை அவர் உண்டாக்குவார். செல்வம், சொத்து, பதவி,  அந்தஸ்து இருந்தாலும் கர்த்தரின் கிருபையால் நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழ முடியும்.   "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) ஆம், இதுவே கிறிஸ்துவின் அளவுகோல். எனவே செல்வம் வந்தாலும் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழ நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்.

"மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் ."

ஆதவன் 🌞 821🌻 ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை

"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2 : 13 )

ஆடைகளைக் கிழித்து உபவாசம் இருத்தல் அந்தக்காலத்து யூதர்களின் நடைமுறை. உதாரணமாக, "ஆகாப், .....தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்." ( 1 இராஜாக்கள் 21 : 27 ) என்று வாசிக்கின்றோம்.

ஆடைகளைக் கிழிப்பது அக்காலத்தில் பல்வேறு காரியங்களுக்காக செய்யப்பட்டது. இதனை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கலாம். உதாரணமாக, கோபத்தைக் காட்டுவதற்கு, இஸ்ரவேலின் ராஜா தனது ஆடையினைக் கிழித்துக்கொண்டான். (2 இராஜாக்கள் 5:7) என வாசிக்கின்றோம். துக்கத்தை வெளிக்காட்டுவதற்கும்  அக்காலத்தில் இப்படி ஆடைகளைக் கிழித்துக்கொள்வதுண்டு. பக்தனாகிய யோபு கொடிய துக்கத்தால் இப்படித் தனது ஆடையினைக் கிழித்துக்கொண்டதை நாம் பார்க்கலாம் (யோபு - 1:20)

ஆனால் இந்தப் பழக்கம் பிற்காலங்களில் உண்மையான மன வருத்தத்தில் செய்யாமல் வெறும் சடங்காக மட்டுமே பலரால் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தங்களது  பாவங்களுக்காக உண்மையான மன வருத்தம் கொண்டு ஆடைகளைக் கிழிக்காமல் தங்களை நீதிமான் என பிறர் எண்ணவேண்டும் என்பதற்காக ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர் பல  யூதர்கள். 

இத்தகைய போலி மனம்திரும்புதலை கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யோவேலின்மூலம் கண்டிக்கின்றார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள் என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது இருதயம் பாவங்களை உணர்ந்து கிழிக்கப்படவேண்டும். வெறுமனே வாயினால் "ஆண்டவரே என் பாவங்களை மன்னியும்" என்று கூறாமல், உடைக்கப்பட்ட உள்ளத்தோடு கூறவேண்டும். அதாவது நாம் செய்தது பாவம் என்று உள்ளத்தால் உணர்ந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.  

உரியாவின் மனைவியிடம் பாவத்தில் ஈடுபட்டத் தாவீதுக்குத்  தான் செய்த பாவம் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவர் எழுதிய 51 வது சங்கீதத்தைப் படித்துப் பாருங்கள், "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 ) என தேவனை நோக்கிக்  கதறுகின்றார். மட்டுமல்ல, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) என மன்றாடுகின்றார். ஏறக்குறைய 4500 ஆண்டுகள் ஆனபின்பும் தாவீதின் பாவ மன்னிப்பின் சங்கீதம் நமக்கும் ஏற்ற விண்ணப்பமாக இருக்கின்றது. 

அன்பானவர்களே, வேதம் கூறுகின்றது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று. தேவனின் பார்வையில் நாம் அனைவருமே பாவிகள்தான். ஆனால் பல வேளைகளில் நமக்கு நமது பாவங்கள் தெரிவதில்லை. ஆவியானவர்தான் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும் நியாயத் தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்துபவர். (யோவான் 16:8) ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நமது மனச்சாட்சி கூர்மையடையும்; நமது பாவங்கள் நமக்குத் தெரியவரும்.

ஆவியானவரின் உணர்த்துதலின்படி நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். நாம் நமது வஸ்திரங்களையல்ல, நமது இருதயங்களைக்கிழித்து, நமது தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவோம்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே நாம் உடைந்த உள்ளதோடு வேண்டும்போது தேவன் நமது பாவங்களை மன்னித்து மேலான அனுபவங்களை நமக்குத் தந்து வழிநடத்துவார். 

ஆதவன் 🌞 822🌻 ஏப்ரல் 29, 2023 சனிக்கிழமை

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

அன்பானவர்களே, இன்று இந்த உலகத்தில் எனக்கென்று யாருமே இல்லை, இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை விடுவிக்க யாருமில்லை, இந்த கொடிய நோயிலிருந்து, கடன் பிரச்சனையிலிருந்து, வட்டிக் கொடுமையிலிருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியாக்க யாருமேயில்லை, இந்தக் குடி வெறியிலிருந்து, பாவப் பழக்கத்திலிருந்து விடுவிக்க யாருமே இல்லை ....இப்படி "இல்லை" பட்டியலே  வாழ்க்கையில்  நீண்டுகொண்டிருக்கின்றதா? கவலைப் படாதிருங்கள். இன்றைய வசனத்தில் கர்த்தர், "நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்று சொல்லுகிறார். 

ஆம், கர்த்தராகிய தேவன் தன் பிள்ளைகளை அனாதைகளாக விட்டுவிடுவதில்லை. "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கின்றார்.

நாம் இந்த உலகத்தில் உறுதியாக மலைபோல நம்பியிருந்தவர்கள் நம்மைக் கைவிட்டிருக்கலாம். அல்லது முன்பு நமக்கு வாக்குறுதி அளித்திருந்தவர்கள் கால மாற்றத்தால் நமக்கு உதவ முடியாதவர்கள் ஆகியிருக்கலாம். அல்லது ஒருவேளை இந்த உலகத்திலிருந்து அவர்கள்  மடிந்துபோயிருக்கலாம். ஆனால் என்றும் மாறாத கர்த்தர் மாறாதவராகவே நம்முடன் இருக்கின்றார். இந்த விசுவாசத்தோடு தேவனை அண்டிக்கொள்வோம். 

நாம் தேவன்மேல் மெய்யான அன்பு கொண்டு வாழ்வோமானால் தேவையற்ற பயங்கள் நம்மைவிட்டு மறையும். எந்தச் சூழ்நிலையையும் மாற்றவல்லவர் நமது தேவன். அவரில் பூரண அன்புகொண்டு வாழ்வோமானால் பயங்கள் நம்மைவிட்டு அகல்வது நிச்சயம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடரான யோவான் இதனால்தான், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) என்று கூறுகின்றார். 

அவரை அன்பு செய்வது என்பது அவரது கற்பனைகளைக் கடைபிடிப்பதே.  அப்போஸ்தலனாகிய யோவான். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 ) என்று கூறுகின்றார்.

ஆம், அவரது கற்பனைகள் பாரமானவைகள் அல்ல; கடினமானவைகள் அல்ல.  அன்பானபவர்களே, வசனம் கூறுவதன்படி தேவனது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நாம் வாழும்போது வாக்குமாறாத தேவனும் தனது வாக்கினை மாற்றாமல் நமக்கு உதவிசெய்வார். அப்படி வாழும்போது நாம் அனாதைகள் ஆவதில்லை; உதவியற்று நிர்க்கதியான வாழ்க்கை வாழ்வதில்லை. தேவனாகிய கர்த்தர் நமது வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லி நம்மை நடத்துவார்.  

ஆதவன் 🌞 823🌻 ஏப்ரல் 30, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதனால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்." ( 1 சாமுவேல் 30 : 6 )

தாவீதுக்கு ஏற்பட்ட மிக நெருக்கடியான நேரம் இது. சவுலுக்குப்  பயந்து பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீஸ் என்பவனுடன் நட்புறவுகொண்டு பெலிஸ்தியரின் தேசத்தில் தங்கியிருந்தான் தாவீது. ஆகீஸ் போருக்குப் புறப்பட்டபோது தாவீதும் அவனது உடன் வீரர்களும் ஆகீஸுடன் போருக்குப் புறப்பட்டனர்.  ஆனால் ஆகீஸின் வீரர்கள்  தாவீதை நம்பவில்லை. எனவே, தாவீது தங்களுடன் போருக்கு வருவதை விரும்பவில்லை. எனவே ஆகீஸ் தாவீதை தங்களுடன் போருக்கு வரவேண்டாம் என்றும் திருப்பிச் சென்றுவிடுமாறும் கூறி அனுப்பிவிட்டான். 

தாவீதும் அவனுடைய வீரர்களும்  திரும்பி வருவதற்குள் அமலேக்கியர் வந்து தாவீதின் மனைவிகள், பிள்ளைகள், அவனுடைய வீரர்களின் மனைவிகள், உடைமைகளைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இது தாவீதின் வீரர்களுக்குப் பெரிய மன மடிவாயிருந்தது. இந்த வேளையில் தாவீதோடு இருந்த அவனுடைய வீரர்களே தாவீதைக் கல்லெறிந்து கொல்ல முயலுகின்றனர். 

எண்ணிப்பாருங்கள்...ஒருபுறம் உயிரை வாங்கத் தேடும் சவுல், மறுபுறம், தங்களோடு சேரக்கூடாது என ஒதுக்கிய ஆகீஸின் வீரர்கள் இத்துடன் மனைவி, பிள்ளைகள், உடைமைகள் அனைத்தும் அமலேக்கியரால் கொள்ளையிடப்பட்ட நிலைமை.   இவை அனைத்துக்கும் சிகரமாக சொந்த வீரர்களே கல்லெறிந்து கொல்ல முயலக்கூடிய நிலைமை!!!

ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்." ஆம், கர்த்தரோடு நடக்கக்கூடிய அனுபவம் இருந்ததால் இந்தக் கொடிய சூழ்நிலையிலும் தாவீது மனம் முறியாமல் தன்னைக் கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொண்டான்.  அதனால் தேவன் அவனைக் கைவிடவில்லை. எனவே, தாவீது கொள்ளைபோன அனைத்தையும் மீட்டுக்கொண்டான். "அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்." ( 1 சாமுவேல் 30 : 19 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, நமக்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டாக  இருக்கின்றது. எந்தவிதத் துன்பங்களோ, எத்தனைவிதமான துன்பங்களோ வந்தாலும் கர்த்தருக்குள் திட நம்பிக்கையாயிருந்து  வாழ்வோமானால் அனைத்தையும் மேற்கொண்டு வாழ அவர் உதவுவார். 

இன்றைய வசனம் இறுதியாகக் கூறுகின்றது, "ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்" என்று. ஆம், கர்த்தர் செய்யும் மிகப்பெரிய காரியம் இதுதான். அவர் முற்றிலும் ஜெயம் கொடுக்கும் தேவன். 100% விடுதலையினைத் தர வல்லவர். தாவீதின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றுவோம். எந்தச் சூழ்நிலையிலும் தேவனாகிய கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்திக்கொண்டு வெற்றியுள்ள ஒருவாழ்க்கை வாழ்வோம்.

No comments: